கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா?
பதில்:
நல்ல சிந்தனைக்குறிய கேள்விதான். வாழ்க்கை என்பது சிக்கலானது இல்லை. மனிதர்கள் வாழும் காலத்தில் அவர்கள், அவர்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்டே சிக்கல். அது அந்த மனிதர்களுடைய வாழ்நாளெல்லாம் தொடர்வதால், வாழ்க்கை சிக்கலானதாக தெரிகிறது என்பதுதான் உண்மை. உலகில் ஐந்தறிவு ஜீவராசிகளில் சிக்கல் உண்டா? உண்டு அவை, இயற்கை சிக்கலாக இருக்கும், அதை சமப்படுத்தி, அதை வென்று வாழக்கூடிய தன்மை அவைகளுக்கு உண்டு. இதை Survival of the Fittest என்று சொல்லுவார்கள். தமிழில் மிக கேவலமாக ‘வலியது வாழும்’ என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். அது உண்மையில்லை. ‘தகுதியுள்ளது வாழும்’ என்பதுதான் சரியான அர்த்தமாகும். நாமும் அவ்வாறேதான்.
ஒரு மனிதரை சந்தித்து, அவர் யாராக வேண்டுமானலும் இருக்கட்டும், எத்தகைய பின்புலம் உள்ளவராகவும் இருக்கட்டும், என்ற நிலையில் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால், நாம் கேட்பதற்காக ‘நன்றாக இருக்கிறேன்’ என்று மறுமொழி தருவார். பெரும்பாலும் முகம் அறியாத நபர்களிடம், தங்களைப்பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்றுதான் நம் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் நாம் அப்படியே நகர்ந்துவிடாமல், ‘ஏதேனும் பிரச்சனை உள்ளதா? நான் உதவலாமா?’ என்று கேட்டால் கூட ‘தேவையில்லை’ என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் தங்களிடம் உள்ள குறையை சொல்லுவதற்கும், பகிர்ந்து ஆலோசனை கேட்பதற்கும், உதவியாகவும் யாரையாவது எதிர்பார்ப்பார்கள். இந்த நிலையில், எல்லோருக்குமே வாழ்க்கை சிக்கல் உள்ளது என்று அறியலாம். ஆனால அவரவர் அளவில் சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும்.
பெரும்பாலான மனிதர்களின் முதல்நிலை சிக்கல், பணமும், வருமானமும் தான் என்பதை உறுதியாக சொல்லலாம். பணம், வருமானம் இருப்பவருக்கு, அதை செலவு செய்வதிலும், பற்றாக்குறையிலும் சிக்கல். பணமும் வருமானமும் இல்லாதவருக்கு அன்றாட செலவுகளுக்கே சிக்கல். இந்த இரண்டுக்குப் பிறகுதான் மற்ற எல்லா சிக்கல்களையும் வரிசைப்படுத்த முடியும்.
இத்தகைய சிக்கல்கள் தானாக வந்ததா? சிந்தித்துப்பாருங்கள். கொஞ்சம் முன்னோக்கி பார்த்தால், எங்கோ, ஏதோ ஓர் இடத்தில் நம்முடைய எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் கலந்திருக்கும். நம்முடைய செயல்பாடும், திட்டமும், உழைப்பும், சரிசெய்தலும் தடுமாறி இருக்கும். நடப்பது நடக்கட்டும் என்று இருந்தால் கூட காலத்தில் அதுவும் சிக்கலாகிவிடும் தானே?! எனவே எப்படிப் பார்த்தாலும், ஒரு சிக்கல் எழுகிறது, எழுந்திருக்கிறது என்றால், அது நம்மால்தான் வந்திருக்கிறது என்று சொல்லலாம். நம்மைச் சார்ந்தவர்களால் கூட நமக்கு வரும். அங்கே நாம் தப்பிக்கவும் வழியில்லை. ஏனென்றால், குடும்பம், உறவு, வாழ்க்கைத்துணை, குழந்தைகள், நண்பர்கள் என்றில்லாமல் தனித்து வாழ்ந்திடவும் வழியில்லையே.
இங்கே நம்முடைய முன்னோக்கிய பார்வையும், எதிர்கால திட்டமிடுதலும் நிச்சயம் தேவைப்படும். இயற்கையில் சிக்கல் எழுகிறதா? என்றால் ஆம், ஆனால் அது அதன் போக்கில்தான் நிகழ்கிறது. ஒரு பழமொழி சொல்லுவதுபோல, ‘உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது, மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது’ என்பதாக. கிராமங்களில் இதற்கு பதிலும் சொல்லுவார்கள், ‘இது ரெண்டையும் கலந்து பண்டமாக செய்து விற்கலாம்ல’ என்பார்கள். எனவே இயற்கை நமக்கு எந்த ஒரு சிக்கலையும், தனி நபருக்காக உருவாக்குவதில்லை. இயற்கையோடு வாழ்ந்தாக வேண்டிய நாம்தான் அதில் சிக்கிக் கொள்கிறோம்.
நீங்கள் கேட்ட கேள்வியில், தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா? என்பதில், மனிதன், கடவுள், இயற்கை இம்மூன்றுக்கும் ஒரு தொடர்பு இருப்பதையும் நாம் அறியலாம். எப்படியென்றால், மனிதன் கடந்து உள்ளே பயணித்து தன்னை அறிந்தால் இயற்கையின் உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்ற விளக்கமாகும். அப்படியானால் முடிவாக என்ன சொல்லமுடியும் என்றால், மனிதன் இயற்கையிலிருந்து விடுபட்டவன் இல்லை.
ஆனால் அவன் தனித்திருப்பதாக கருதுகிறான். இயற்கையில் ஒரு விதி இருக்கிறது. அது செயல் விளைவு தத்துவமாக செயல்படுகிறது. இன்னது செய்தால் இன்னது விளையும் என்பது பொதுவிதி. இது யாருக்காகவும், எதனாலும் மாறாது, குழையாது. சிதறாது. இதை புரிந்து கொண்டால், மனிதன் உருவாகிக்கொண்ட சிக்கல்களுக்கு தீர்வு மனிதனாலேயேதான் பெறமுடியும். மனிதன் தனக்குத்தானே தீர்வு தரவும் முடியும், பிறருக்கும் தீர்வு தரமுடியும். அதுபோலவே உங்களுக்கு நீங்களும் தீர்வு கொண்டுவரலாம், பிறரும் உங்களுக்கு தீர்வு தந்துவிடமுடியும். இதை சாத்தியப்படுத்துவது யார்? நீங்களேதான்.
வாழ்க வளமுடன்.
-