வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்த போலியான இறைத்தத்துவ விற்பனர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லுவீர்களா?
பதில்:
நல்லதாக, எல்லோருக்கும் பயன்படும் ஒரு பதிலுக்கான கேள்விதான். இந்த கேள்வியில் நீங்கள் அறியாமலேயே, இத்தகைய நபர்களின் நோக்கத்தையும் சொல்லிவிட்டீர்கள். போலியான இறைத் தத்துவ விற்பனர்கள் என்று. இந்த விற்பனர்களின் நோக்கம் உங்களிடமிருந்து எதைதோ, அவர்களுக்கு சாதகாமான ஒன்றை எதிர்பார்ப்பதுதான். இது இந்த நவீன காலத்தில் மட்டுமல்ல, ஞானியர்களுக்கும், யோகியர்களும், மகான்களுக்கும் கிடைத்த மரியாதையை பெறுவதற்கு தாங்களும் முயற்சிசெய்தும் மக்களை ஏமாற்றியவர்கள் அந்தக்காலத்திலும் உண்டுதான். இப்படியான போலிகளிடம் ஏமாற்றம் அடைந்து உங்களிடமிருந்தோ, மற்ற மனிதர்களிடமிருந்தோ பணம் போனால் கூட பரவாயில்லை, மீண்டும் சம்பாதித்து விடலாம். ஆனால் மனம் போனால்? அது சிதைந்து விடுமே?!
இதில் இன்னொரு உண்மையையும் நீங்கள் புரிந்துகொள்வது நல்லது, உண்மையான இறைத்தத்துவம் வழங்கும் இறையுணர்ந்தவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் உண்டு. சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள், சிலர் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள். இந்த இறைத் தத்துவத்தை, மற்றவர்களுக்கு வார்த்தைகளால் செயல்படுத்த, விளக்கிச் சொல்ல முடியாதவர்கள் அமைதியாக இருந்து விடுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, மற்றும் இன்னும் பலர், இதை மக்களிடம் எளியமுறையில் கொண்டு சேர்க்கவும் ஆர்வம் கொண்டு பயிற்சி திட்டமாகவும் வழங்குகிறார்கள், வேதாத்திரியம் அப்படியான பயிற்சி முறைதானே!
அப்படியான பயிற்சிக்கும், கற்றுக்கொள்ளலுக்கும் ஒரு இணைப்பு பாலமாக, பொறுப்புணர்ந்து செயல்படவும், கைவிடாது தொடரவும், உறுதி கொள்ளவும், கட்டணம் செலுத்தும்படியான நிலை இருக்கிறது.
இலவசம், கட்டமில்லா நிலை, சேவை என்றால் உங்கள் மனமே அந்த, தத்துவத்தை, இறையுண்மையை, விளக்கத்தை, ஒழுங்கமைப்பை, உறுதியை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனம் செய்துவிடும்.
சும்மா கொடுத்த மருந்து வேலை செய்யுமா? என்று ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
இந்தவித, தற்போதைய உலக இயல்பை, அந்த போலியான விற்பனர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோரையும் அப்படி போலியானவர்களாக காண்பது ஒரு நோய். அப்படி இருக்கக்கூடாது. அந்த நபர், விற்பனர் என்ன சொல்லுகிறார்? அனுபவம் பெற்றவரா? இதுவரை அவரின் பதிவுகள் எப்படி இருக்கின்றன? அவரின் வாழ்க்கைமுறை என்ன? எப்படி நேரில் பழகிக் கொள்கிறார்? ஒரு உண்மையை விளக்கத்தை எப்படி புரியவைக்கிறார்? கதையளக்கிறாரா? எளிமையாக சொல்லுகிறாரா? நேரத்தை கடத்துகிறாரா? குழப்புகிறாரா? இதையும் செய், அதையும் செய் என்று ஓட்டுகிறாரா? எல்லாவற்றை விட்டுவிடு என்கிறாரா? சொந்த அனுபவத்தை சொல்லுகிறாரா? யாரோ சொன்னதை சொல்லுகிறாரா? கதையாக கலவையாக கலந்தடிக்கிறாரா? தீர்மானமாக இதுதான் என்று உறுதியாக சொல்லுகிறாரா? என்று பலவாறாக கேள்விகள் கேட்டு அதற்கு பதிலை பெற்றபிறகுதான், அவரின் தன்மை தெரியவரும். அதுவரையிலும் அவரை போலி என்றுகூட சொல்லாதிருங்கள்!
ஒரு கஷ்டம் என்ன என்றால், அந்த விற்பனரை புரிந்து கொள்வதற்காகவே, உங்களுடைய காலம் கொஞ்சம் வீணாகும் என்பதுதான். ஆனால் வேறுவழியில்லை. ஒருவேளை அவர் சிறப்பானவராக இருந்தால் அது உங்களுக்கு உதவும் கூடுமே?! இனி உங்கள் முடிவுதான்!
வாழ்க வளமுடன்.
-