How thanduvada suthi and nadi suthi will helps to shanti yoga meditation? | CJ

How thanduvada suthi and nadi suthi will helps to shanti yoga meditation?

How thanduvada suthi and nadi suthi will helps to shanti yoga meditation?


சாந்தி தவத்திற்கு எப்படி நாடி சுத்தி, தண்டுவட சுத்தி உதவுகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவத்திற்கு எப்படி நாடி சுத்தி, தண்டுவட சுத்தி உதவுகிறது?


பதில்:

வேதாத்திரிய யோகத்தில் இணைந்துகொண்ட ஒரு தவசாதகருக்கு, குருவானவர் தீட்சை வழங்கி, மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி, தண்டுவடம் வழியாகவேதான், ஆறாம் நிலையான யோகவாசல் என்று அழைக்கப்படும் ஆக்கினை சக்கரத்திற்கு கொண்டுவந்து நிறுத்துகிறார். ஒரு குரு தன்னுடைய சக்தியால், தவ ஆற்றலால் தொட்டு எழுப்படும் வழிமுறை என்பது இதுதான். இத்தகைய குண்டலினி சக்தியை, தானாகவோ, வெறும் பயிற்சி மூலமாகவோ, வாசியோகம் போன்ற பயிற்சியாலோ, உடலைலசைத்து எழுப்பிக்கொள்ளும் பயிற்சியாகவோ செய்தால், உடனடியாக ஆக்கினை சக்கரத்திற்கு வந்துவிடாது. மேலும் அதற்கு கீழே இருக்கின்ற வேறு நான்கு ஆதார சக்கரத்தில் நின்றுவிடவோ, வழியில் சிக்கிடவோ கூடும்.

வேதாத்திரியத்தில் ஆக்கினை தவம் கற்று இயற்றிவரும் வேளையில், பொதுவாக மூன்று நாட்கள், ஒருவாரத்திற்குள் ஆக்கினை தவம் வழியாக தவ ஆற்றல் பெருகிவரும். அந்த தவ ஆற்றலை நம் உடலும், மனமும் தாங்கிடாது அல்லல்படும். தலைவலி, தலை பாரம், தூக்கமின்மை, தடுமாற்றம், உடல் சோர்வு இவற்றை தரும். நெற்றியின் முன்பக்கம் சிவந்து, வலியும், எரிச்சலும் உண்டாகும். இந்த நிலையை புரிந்துகொண்டு, தவ ஆற்றலை, உடல் ஆற்றலாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், தவ ஆற்றலை தாங்கும் அளவிற்கு உடலும், மனமும் பழகிக்கொண்டால்தான் நல்லது.  இப்படி தவ ஆற்றலை உடலுக்கும் மனதிற்கும் மாற்றிடும் பொழுது, அவற்றிற்கான சக்தியாக மாறிவிடும்.

இந்த ஒரு மாற்றத்தைத்தான் சாந்தி யோகம் எனும் சாந்தி தவம் செய்கிறது. ஆக்கினைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்ட குண்டலினி சக்தி, மீண்டும் மூலாதர மையத்திற்கே கொண்டு செல்லவேண்டும். மேலும் நினைத்த உடனே ஆக்கினையிலிருந்து, மூலாதாரம் சென்று நிறைவு பெற வேண்டும் என்பது பொது விதி. இந்த நிலைக்கு, தண்டுவடமும், நாடிகளும் தடை இல்லாது இருக்கவேண்டும் அல்லவா? அதற்காகவே, நாடி சுத்தி எனும் பயிற்சி பத்து முறை செய்வதும், தண்டுவட சுத்தி பத்துமுறை செய்வதும் வழக்கமான நடைமுறையில் இருக்கிறது.

பொதுவாகவே எந்த தவம் செய்ய ஆரம்பிக்கும் பொழுதும், குண்டலினி சக்தி எழுவதில், இறங்குவதில் எந்த பிரச்சனையும் நேர்ந்துவிடக் கூடாது என்ற நிலையில்தான், முன்கூட்டியே பயிற்சியாக அமைத்துவிட்டார்கள். ஆரம்பகாலத்திலேயே நன்கு இந்த நாடி சுத்தி, தண்டுவட சுத்தி ஆகியன நன்கு பழகிக் கொண்டால், நம்முடைய நாடிகளும், தண்டுவடமும், மூச்சும் வளம் பெறும். நம்முடைய தவ சாதனைக்கும் உறுதுணையாக அமைந்திருக்கும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

-