கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களைப் போல்தான் வாழவேண்டும் என்கிறபொழுது, யோகம் இல்லாத வாழ்வுதானே வாழ்கிறார்கள்? பிறகு ஏன் எனக்கு மட்டும் யோகம்?
பதில்:
நீங்கள் கேட்பது சரியான சந்தேகம் தான். ஒரு நூறு அன்பர்களை எடுத்துக்கொண்டால், அதில் யாரேனும் ஒருவருக்குத்தான், நிச்சயமாக யோகத்தில் இணையவேண்டும் என்ற ஆர்வம் எழும் என்பது உண்மையே. அந்த ஒருவரை மற்ற 99 அன்பர்களும் தடுத்து நிறுத்திவிடுவார்கள், சிலவேளை அவர்களை பார்த்து அந்த ஒருவரும், யோகத்தை விட்டுவிடுவார். பெரும்பாலும் இதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது எனலாம். அந்த ஒருநபர், இத்தனை பேரும் யோகம் என்பதே அறியாமல், அதில் ஆர்வம் காட்டாமல், அதைக்குறித்து ஒரு விபரமும் தெரிந்து கொள்ளாமல், வழக்கமான உலக வாழ்க்கையில் வாழ்கிறார்கள். நன்றாகத்தானே இருக்கிறார்கள்! அந்த நிலையில் நான் மட்டும் ஏன்? எதற்காக? யோகம் வேண்டும், அதில் இணையவேண்டும்? என்று நினைக்கிறேன் என்று குழப்பம் எழுந்துவிடுகிறது.
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? யோகத்தில் விருப்பமும், அதில் இணைந்து உண்மையை அறியவேண்டும் என்ற விருப்பமும், தானாக, உங்களுக்குள்ளாக எழவேண்டும். அது உங்களுடைய மனதை, சிந்தனையை இயல்பாக தூண்டவேண்டும். யாரோ சொன்னார்கள், இவர் சொன்னார், அவர் சொன்னார், முயற்சிக்கிறேன் என்றெல்லாம் யோகத்தில் இணையமுடியாது, இணைந்தாலும் கூட அதை தொடரவும் முடியாது. ஒரு நாளோ, ஒருவாரமோ, ஒருமாதமோ செய்துவிட்டு முழுமையாக அதை கைவிட்டு போய்விடுவார் என்பதுதான் உண்மை.
உலகில் பெரும்பாலோர்க்கு கடவுள் நம்பிக்கையே, அவர்களுடைய சிதைந்து போய் இருப்பதால், யோகம் குறித்த எந்த நல்ல எண்ணமும் கருத்தும் இருக்காது என்றே கருதவேண்டும். உண்மையில் கடவுள் (கட+உள்) என்ற தத்துவமும், நம்பிக்கையும் உண்மையாகவேதான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பகல் வானில் நட்சத்திரங்களே இல்லை என்று வாதாடும் அன்பர்களை நாம் என்ன செய்துவிடமுடியும்? அதுபோலவேதான் நாம் கணக்கில் எடுத்துக் கொண்ட 99 அன்பர்களும் இருப்பார்கள். இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.
உங்களுக்கு வாய்ப்பிருந்தால், உங்கள் வாழ்க்கையையும், அவர்களுடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பணம், பொருள், வசதி அதுவெல்லாம் கணக்கில் இல்லை. அது யார்வேண்டுமானாலும், தகுந்த காலத்தில் சம்பாத்தியமாக கொண்டுவரலாம். அதற்கு தேவை உழைப்பும், விழிப்புணர்வும், முயற்சியும், ஆர்வமும் மட்டுமே. பரம்பரையாக செல்வாக்கோடு இருப்பவர், இப்போதும் உங்களைவிட பணக்காரராக் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அதனால் அந்த பொருள்நிலை செல்வாக்கை விலக்கிவிட்டு, அவர்களுடை எண்ணம், சொல், செயல், வழக்கம், பழக்கம், அணுகுமுறை, உதவும் குணம், நிறைவு, அமைதி என்பதெல்லாம் ஆராய்ந்து பாருங்கள். ஒவ்வொரு நாளையும், தன்னோடு இருக்கும் ஒவ்வொரு நபரையும் எப்படி நடத்துகிறார் என்று கவனியுங்கள்.
உண்மையாகவே, இந்த 99 அன்பர்களைவிட நீங்கள், வித்தியாசமாக, உள்ளுணர்வில் இருப்பதை மிக எளிதாக கண்டுகொள்வீர்கள். யோகத்தில் நீங்கள் இணைந்துகொண்டால், மிக எளிமையாக அளவு, முறை கண்ட வாழ்வில், தன்னை அறிந்து, இறை உண்மையும் அறிந்து, நிறைவாக, நிம்மதியாக, என்றும் மகிழ்வோடு வாழ்ந்து அதை பிறருக்கும் பகிர்ந்து வாழமுடியுமே?!
மேலும் பிறவி நோக்கமும் நிறைவேறிவிடும். இதுவரை இருந்துவந்த கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீங்கிவிடும். உங்களின் முன்னோர்களும், உங்கள் வழி வரும் தலைமுறையினரும் கூட நிறைவடைவார்கள். இயற்கையின் உன்னதமும் உங்களுக்கு புரிந்துவிடும். எனவே, யோகம் குறித்தான சிந்தனையில், விழிப்பாக இருங்கள்.
உடனே யோகத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லவும் மாட்டேன், கட்டாயப்படுத்தவும் மாட்டேன். அதை நீங்களே முடிவு செய்யலாம். காலமும் உங்களுக்கு துணை செய்யும்.
வாழ்க வளமுடன்.
-