Why some of disease and problem not cure by the simplified exercise?
சில உடல் உபாதைகள், நோய்கள் எளியமுறை உடற்பயிற்சியால் குணமாகவில்லையே? காரணம் என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, சில உடல் உபாதைகள், நோய்கள் எளியமுறை உடற்பயிற்சியால் குணமாகவில்லையே? காரணம் என்ன?
பதில்:
அன்பரே, உங்களுடைய வயது தெரியவில்லை, எப்போது முதல், இந்த வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வருகிறீர்கள்? ஏற்கனவே உங்களுக்கு என்ன மாதிரியான உடல் உபாதைகள், நோய்கள் இருந்தன? எந்தவகையான மருந்துகள் எடுத்துக்கொண்டீர்கள்? சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை வைத்தியம், மூலிகை வைத்தியம், யுனானி, அலோபதி இப்படி எந்தப் பிரிவு மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்று கடைபிடித்து வருகிறீர்கள்? அதன் விளைவு, மாற்றம் எப்படி இருக்கிறது? இருந்தது? மருத்துவம் தொடர்கிறதா? நிறுத்திவிட்டீர்களா?
நீங்கள் தினமும் வேதாத்திரியம் வழங்கும் எளியமுறை உடற்பயிற்சி செய்து வரவேண்டும் என்பதே அதன் பலன் தருவதின் சிறப்பாகும். அப்படி அதனை தொடர்ந்து வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வருகிறீர்களா? என்பதான இத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை. அதை நீங்களே ஒரு ஆராய்ச்சி குறிப்பாக எழுதி தயாரித்து, நேரடியாக ஆசிரியரிடம் கேட்டும் உண்மை அறியமுடியும்.
நிச்சயமாக, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் வழியாக பலன்கள் செய்துவருவதால் மட்டுமே கிடைக்கும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அதை, எளியமுறை உடற்பயிற்சியை வடிவமைத்த பொழுது, அந்தந்த பயிற்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து, செய்யச்சொல்லி, மாற்றத்தை கணித்து, தானும் செய்து பார்த்து விளைவுகளை கண்டு, பயிற்சியிலும் தேவைப்படும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும், 96 வயது வரையும் இதை கடைபிடித்தார். தன்னோடு இருக்கும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டும் திருத்தி அமைத்தும் கொண்டார்.
பொதுவாகவே இளமைக் காலத்திலும், பருவம் வந்த வயதுகளிலும், மனமும், உடலும் மிக மிக உற்சாகமாக இருக்கும். உறக்கமும் மிகச்சரியாக இருக்கும். இருபது வயதை கடந்து, உலக கடமைகளில் நம்மை இணைத்துக்கொண்டு பயணிக்கும் பொழுது, உணவாலும், அதிக உழைப்பாலும், தூக்கமின்மையாலும், அன்றாட இன்ப நுகர்வுகளாலும், ஓயாத சிந்தனையாலும் நம்முடைய உடலும், மனமும் கெடுகின்றது. தானாகவே நோயை வரவழைத்துக் கொள்கிறோம். மேலும் வித்துவழியாக பரம்பரை நோய்களும் நம்மிடம் எட்டிப்பார்க்கிறது. நம்மைச் சுற்றியுள்ள சுழல், கிரகங்களின் அலைத்தாக்கம், தொற்று நோய்கள் வழியாகவும் பாதிக்கப்படுவோம்.
இவ்வளவுக்கும், துணையாக நிற்கும் தீர்வு என்றால், பருவ வயதில் வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி கற்றுக்கொண்டால் சிறப்பு. உடல் உபாதை, வலி, பிரச்சனைகள், நோய்கள் எல்லாம் உருவாகி நம்மை வருத்தி, அதனால் மருத்துவ ஆலோசனை பெற்று, மருந்துகள் எடுத்துகொண்டிருக்கும் நிலையில், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது தவறு. வருமுன் காப்பதும், வந்ததை ஓரளவில் தடுத்துக் கொள்வதுமே நன்று. இடைப்பட்ட காலத்தில், 30, 40 வயதுகளில், வயோதிகத்தில் நம்மால் இதைத்தான் பெறமுடியுமே தவிர, முற்றாக நோயை தீர்க்க முடியாது. ‘குணப்படுத்துவதை விடவும், தடுப்பதே சிறப்பு’ என்று மருத்துவ சொல் இருக்கிறது.
உண்மையாக, நீங்கள் எதிர்பார்ப்பு ஏதுமின்றி, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வாருங்கள். உங்களுக்கான உடல் உபாதை, வலி, பிரச்சனை, நோய்க்கான மருந்து என்னவோ அதையும் எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை பெறுவீர்கள் என்பது உறுதி!
வாழ்க வளமுடன்.