கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்?
பதில்:
மிகச்சிறந்த கேள்வி என்று கருதுகிறேன். பெரும்பாலான அன்பர்கள் குருவின் மீது பெரும்மதிப்பு கொண்டு, அவர்களின் வாழ்நாள் காலம் முழுவதுமே குருவோடு பயணிப்பார்கள் என்பது பொதுவானது. அது உண்மையும், இயல்பானதும் ஆகும். இத்தகைய மதிப்பு உலகில் உள்ள மற்ற எந்த தலைவருக்கும், பிற சிறப்பான மனிதருக்கும் ஈடு ஆகாத சிறப்பு பெற்றிருக்கும் என்பதும் உண்மை. என்றாலும் ஏறக்குறைய ஒன்றுபோல தோன்றும். மனிதர்களுக்கு என்றுமே தன்னை வழிநடத்தும் உயர்ந்த மனிதருக்கு, மதிப்பு தந்து, ஒழுங்குதல் இயல்பானது. அது யோகத்தில் இன்னமும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் வாழ்நாளில் நம்மை உயர்த்தி, பிறவிக்கடன் தீர்த்து, தன்னையறிதலையும், இறையுணர்வையும் பெற்றுத்தருபவர் ஆயிற்றே!
நாம் ஏதேனும் சுற்றுலாவிற்கு சென்றால் அங்கே ஒருவழிகாட்டி இருப்பார், அவர் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவராகவும் இருப்பார். தனியாக படிப்பறிவு இல்லாவிட்டாலும், பலமொழிகள் பேசி எல்லாமக்களுக்கும் வழிகாட்டியாக துணைசெய்து வருவார். இப்போது அதுவும் ஒரு கல்லூரி பாடமாகவும் உள்ளது. அந்த வழிகாட்டி, நாம் எங்கே ஆரம்பித்தோமோ, அங்கே வந்து முடிக்கும் வரை துணையாக இருப்பார், அதன்பிறகு அவர் பணி முடிந்துவிடும். அடுத்த நபர்களை நோக்கி அவர், நகர்ந்துவிடுவார். வேறு சில உலகியல், வாழ்வியல், மனித முன்னேற்ற தலைவர்களும் அப்படித்தான், ஒரு குறிப்பிட்ட நிலைக்கும் மேலாக அவரின் துணை நகர்ந்து, வேறு சில புதியவர்களுக்கு நகர்ந்துவிடும்.
ஆனால் யோகசாதனையில், குருவின் துணை என்றுமே நகர்ந்தும் விடாது, அகன்றும் விடாது. ஒருவேளை நாம் குருவை கைவிட்டால் கூட, அவரின் வார்த்தைகளும், அக்கறைகளும் நம்மைவிட்டு பிரியாது என்பதே உண்மை. இதை நீங்கள் அனுபவமாகவும் பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. இதில், இந்த துணையிருப்பில், குருவும், மற்ற எந்த தலைவர்களும் நம்முடைய எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். என்னோடு இரு என்று கட்டாயப்படுத்தவும் மாட்டார்கள். அங்கே ஒரு தனிமனித சுதந்திரமும் இருக்கும். சில உலகியல், வாழ்வியல் தலைவர்கள் விதிவிலக்கு.
அந்தக்கால யோகசாதனையில், குருவோடு பயணித்தல் என்பது, குருவின் காலம் முதல், அவருக்குப் பின்னாலும், அதை ஏற்று வழிநடத்தும் வகையில் இருந்தது. குரு என்ற உயர்ந்த தன்மை என்ற இடம், அடுத்து அடுத்து என்ற நிலையில் மட்டுமே இருந்துவந்தது. எனினும் காலமாற்றத்தில், ஒரு யோகசாதனையில் ஒரு குருவே தன் சீடரை தனக்கு நிகரான குரு அளவிற்கு உயர்த்தியும் வந்தார். இன்றோ, நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி, தன்னோடு பயணிக்கும் ஒவ்வொரு அன்பரையுமே தன்னைப்போல குருவாக உயர்த்தி மகிழ்கிறார். அதுவே அவருடைய நோக்கமாகவும் இருந்தது. அவர் தன்னை பிரபஞ்ச வான்காந்தத்தில் கலந்துகொண்ட பிறகும் அது தொடர்கிறது.
இந்த நிலையில், யோகசாதனையில், நம் உயிரோடு கலந்து நிற்கும் குருவானவரின் துணை, நம்முடைய வாழ்நாள் முழுவதுமே துணையாக வருகிறார் என்பதே உண்மை. நாம் குருவிடம், குருவோடு பயணிப்பது என்பது நம்முடைய நோக்கம், ஆர்வம், முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி, அனுபவம் என்பதை கொண்டுதான் அமையும். எனவே யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்? என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
வாழ்க வளமுடன்
-