How we try to control who always do correction meaningless?
நம்மோடு இருந்துகொண்டு நம்மை குறை சொல்லுபவர்களை திருத்துவது எப்படி?
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நம்மோடு இருந்துகொண்டு நம்மை குறை சொல்லுபவர்களை திருத்துவது எப்படி?
பதில்:
நம்மோடு இருப்பவர்கள் மட்டுமல்ல, நம் குடும்பத்தில் இருப்பவர்களே நம்மை குறை சொல்லுவார்கள் தானே?! அது இயல்புதான். பொதுவாகவே, நீ எனக்கு பின்னால்தான் பிறந்தாய், அதனால் உனக்கு அவ்வளவு அனுபவம் போதாது. என்னிடம் இருந்து கற்றுக்கொள் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். இல்லையென்றால், சில வயது கூடியவர்கள், படிப்பில் உயர்வு, பொருள் பணம் செல்வாக்கில் உயர்ந்தவர்கள் அப்படி மற்றவர்களை குறை கூறுவதை வழக்கமாகவே வைத்திருப்பார்கள். இவர்களின் அன்றாட வேலையே, யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பதுதான். அதுதான் அவர்களுக்கு திருப்தி அளிக்கும். ஒரு நீங்கள் உயர்ந்தால், அதாவது உங்கள் திறமையில் நீங்கள் உயர்ந்தால் கூட, உடனே, ‘பார்த்தாயா நான் சொல்லித்தான் நீ உயர்ந்தாய்’ என்று சொல்லுவார்கள். இதையே மற்றவர்களிடம் சொல்லியும் மகிழ்வார்கள்.
இவர்களை என்ன செய்யமுடியும்? நேரடியாக இவர்களிடம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. ஏனென்றால், நாம் சொல்லுவதையும், விளக்கம் தருவதையும் ஏற்க மாட்டார்கள். சில வேளைகளில் நாம் இவர்களை வேண்டவே வேண்டாம் என்று தவிர்க்கவும் முடியாது. அத்தகைய நிலையில், நீங்கள் அவர் சொல்லுவதை அப்படியே கடந்து போய்விட வேண்டியதுதான். காதால் கேட்டாலும் கேட்காதது போல விட்டுவிட வேண்டும். இப்படி சொல்லுகிறாரே என்று உங்கள் மறுமொழி இருக்கவேண்டியதில்லை. அவரைக்குறித்தும், அவரின் குறை வார்த்தைகளை குறித்தும் கவனம் கொள்ளத் தேவையில்லை. இதை அவருக்கு தெரியாமல், அறியாமல் செய்யவேண்டியது முக்கியம்.
இதுபோலவே நீங்களும் வேறு யாரையும், குறை சொல்லாமல் இருக்கவேண்டியது அவசியம். அந்த பழக்கத்தை உடனே தொடருங்கள். உங்களிடம் இருந்து பாராட்டு மட்டுமே கிடைக்கும் என்பதுபோல ஒரு பிம்பம் உருவாக்கிக் கொண்டால் நல்லதுதான். அது உங்களுக்கு நற்பெயரை உருவாக்கித்தரும். அப்படியில்லாமல், நீங்களும் மற்றவர்களை குறை கூற ஆரம்பித்தால், அவர்கள் உங்களை தனித்து இயங்கச் செய்துவிடலாம். தீடீரென்று ஏதேனும் உதவி கேட்டால் கூட எதும் செய்ய முன்வர மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.
இந்தமாதிரியாக குறை சொல்லுபவர்களை எப்படி சரி செய்வது என்று கேட்டீர்கள். அது உங்களால் முடியாது. யாராலும் முடியாது. சம்பந்தப்பட்ட அவரேதான் அவரை திருத்திக் கொள்ள முடியும். அவர் உங்களுக்கு மிக நெருக்கமானவர், வேண்டியவர், குடும்பத்தில் ஒருவர் என்றால், அவரை நீங்கள் பார்க்கும் பொழுதும், நினைக்கும் பொழுதும் ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தி வாருங்கள். இந்த வாழ்த்து உள்முகமாக அவரை மாற்றியமைக்கும் என்பது உறுதி. ஏதேனும் ஒருவகையில் உங்களுக்கும் அவருக்குமான இந்த குறை சொல்லும் நிலையை மாற்றி அமைக்கும். உங்களைக் குறித்த ஒரு புரிதல் அவருக்கு கிடைத்துவிடும். அவராகவே குறை சொல்லுவதை விட்டுவிடக்கூடும். எனவே இதற்காக நீங்கள் வேறெதும் செய்யவேண்டாம். அது உங்களுக்கு பாதகமான விளைவையும் தந்துவிடும்.
வாழ்க வளமுடன்.
-