கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உலகில் எல்லா வசதிகளோடு வாழும் ஒருவர், கடவுள் மறுப்பாளராகவும் இருக்கிறார். அவருக்கு யோகம் தேவையில்லையா?
பதில்:
இந்த கேள்விக்கான பதிலை நாம் பார்க்கும் முன்பாக, நீங்கள் எப்போதும், இன்னொரு மனிதரோடும், அவர் வாழ்க்கையோடும், பணம், பொருள், வசதியோடும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது நிச்சயமாக உங்களுக்கு ஒரு பிரச்சனையை, வலியை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கை நிறைவான வாழ்க்கையாக உணர்ந்தால் பரவாயில்லை. ஆனால் குறையான வாழ்வாக நினைத்துக்கொண்டால், அதில் நீங்கள் தன்னம்பிக்கை இழந்துவிடுவீர்கள் என்பது உறுதி. எனவே கவனமாக இருங்கள்.
உலகில் பிறந்த ஓவ்வொருவரும் வாழவேண்டும். உலகநடைமுறையில் வாழ பணமும் சம்பாதிக்க வேண்டும். அது சம்பளம் வழியாக, தொழில் முலமாக, வியாபாரத்தினால் இன்னபிற வழிகளால் கிடைக்கவும் வேண்டும். ஏழையாக இருந்தாலும் தன் தேவைகளை தானே நிறைசெய்ய உலகில் பலப்பல வழிகளும் உண்டு. ஏற்கனவே பரம்பரைவழி, பெற்றோர்வழி செல்வந்தர்களாக இருந்தால், பிறக்கும் குழந்தைக்கும் அச்செல்வம் தொடரும். ஏழையாகவே இதுவரை இருந்தாலும், இப்பொது பிறக்கு குழந்தை அந்த நிலையை மாற்றியும் அமைக்கலாம், ஏழ்மை என்பது விதியும் அல்ல.
குறுகிய காலத்தில் நியாயமாக முன்னேறுவோரும் உண்டு, குறுக்குவழியில் முன்னேறுவோரும் உண்டு. குறுக்கு வழியில் பணம் பொருள் ஈட்டவேண்டும் என்பதற்காக, தவறான வழிகளை தேடி பயணிப்பார்கள், அதில் வெற்றியும் அடைவார்கள்.
நம்முடைய பார்வைக்கு அவர்களின் வளர்ச்சியும் தெரியும், அதில் இருக்கும் ரகசியமும் தெரியும் என்பது உண்மைதான். அதோடு அவர் தன்னை கடவுள் மறுப்பாளராகவும் காட்டிக்கொள்கிறார் என்றும் சொல்லுகிறீர்கள். கடவுள் மறுப்பாளர்களை கடவுள் என்ற இறையாற்றல் கைவிட்டுவிடுமா? இல்லையே, நம்மை காப்பதுபோலவே அவர்களையும் காக்கும். ஆனால் ஓவ்வொரு மனிதனுக்குள்ளாக, கடந்து உள்ளே இருக்கின்ற மனமும், அதன் முடிவில் இருக்கும் கருமையமும் எல்லாவற்றையும் பதிவு செய்கிறது. அதுவே கர்மா என்ற வினைப்பதிவாகவும் மாறிவிடுகிறது. மேலும் அவர்களிடைய அறிவு களங்களோடும் இருக்கிறது. அந்த கர்ம வினைப்பதிவுகளும், களங்கமும் காலத்தால் தீர்க்காது அவர்களின் பிறவிக்கடமை முழுமையும் அடையாது. பிறவி வழியாக தொடரவும் செய்யும்.
ஆனால் நாம் யோகத்தின் வழியாக, நம்முடைய களங்கங்களை தூய்மை செய்து, கர்ம வினைகளை தீர்த்து, பிறவிக்கடனான ‘நான் யார்?’ என்று உண்மையறிதலை நோக்கி செயல்படுகிறோம். நமக்கு கிடைத்த வரம் அல்லவா இது?!
இந்தப்பிறவியில் அவருக்கு கடந்து உள்ளே போக ஆர்வமில்லை. அதனால் யோகமும் அவசியமில்லை. அவருக்குப் பின் அவர்வழியாக வரும் பேரனோ பேத்தியோ, ஏதோ ஒரு தலைமுறையினரோ தீர்க்க முயற்சிப்பார்கள் என்பது காலமே முடிவு செய்யும். எனவே நம் கவலை அதுவல்ல.
நாம் நம்முடைய வாழ்வில் எப்படி இருக்கிறோம்? என்று ஆராய்ந்து, வாழ்க்கைக்கு நிறைவான பணம், பொருள், அதை பெறுகின்ற வகையில் வாழ்வேண்டும். இந்த வாழ்வை வீணாக்காது, யோகத்தின் வழியாக தன்னையும் அறியவேண்டும். மெய்ப்பொருள் உண்மையையும் உணரவேண்டும். இப்படி அடுத்தவர்களை ஆராயவேண்டியதில்லை, முடிந்தால் அவர்களையும் வாழ்த்தி மகிழ்வோம்.
வாழ்க வளமுடன்.
-