கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதே ஏன்?
பதில்:
இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதாக ஏன் உங்களுக்குத் தோன்றுகிறது? என்று எதிர் கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? பொதுவாகவே அறிவுரையும், ஆலோசனையும் மிக எளிது என்று எல்லோரும் சொல்லுவார்கள். அதை சொல்லுபவர்களே கடைபிடிக்கிறார்களா என்பதும் சந்தேகமே!
ஆனால் மனித வாழ்க்கைக்கான தத்துவங்களும், உண்மைகளும், வழிமுறையாக தந்த போதனைகளும், தன்னையும், இயற்கையையும் உணர்ந்தறிந்த ஞானிகளால், மகான்களால், மேதைகளால் வழங்கப்பட்டது, இன்னும் வழங்கப்பட்டுக் கொண்டும் வருகிறது, அவர்கள் வழி நடக்கும் உயர்ந்தோர்களாலும், ஆசான்களாலும். நம் தமிழ்நாட்டில் சங்ககாலம் என்று சொல்லப்படுகின்ற கிட்டதட்ட ஆறாயிரம் ஆண்டுகளாகவே, வாழ்க்கை நெறிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
அவற்றையெல்லாம் தொகுத்தளித்த ‘தொல்காப்பியம்’ எனும் நூல் மூன்றாயிரம் ஆண்டுக்கால நிறைவை பெற்றிருக்கிறது. இவை எல்லாம், மன வாழ்வியலை இயற்கைக்கு ஒத்த தன்மையோடும், மதித்து வாழும் நிலையையும், மக்களோடு மக்களாக தானும் எப்படி வாழ்ந்து இன்பமே கண்டு நிறைவடையலாம் என்றும் வழி சொல்லுகிறது. தொல்காப்பியம் என்பது பல ஞானிகளில் கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பு என்றும் சொல்லுகிறார்கள். சித்தர்கள் வழங்கிய பல குறிப்புக்கள், மனித வாழ்க்கையை ஒழுங்கு செய்வது மட்டுமல்லாமல், மனிதனின் மூலமான உண்மையை அறியவும் வழி தருகிறது. அதை ஏற்கமுடியாதவர்களுக்கு பக்தி என்ற வழிமுறையையும் கொடுக்கிறது.
ஆசான் திருவள்ளுவர் இராயிரம் ஆண்டுகள் முன்பாக, பல்வேறு தலைப்புக்களில் வாழ்க்கை நெறிமுறைகளை தருவதை நாம் சிறுவயது பள்ளிப்பாடங்களில் இருந்தே அறிவோம். எனவே வாழ்க்கைக்கான போதனைகள் நிறைய, நிறைய, நிறைய இருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை ஏற்று, புரிந்து, வாழ்வில் பயன்படுத்துகிறோமா? என்பதுதான் சந்தேகத்திற்குறியது.
நீங்கள் இந்தக்காலத்தில் என்று சொல்லுகிறீர்கள், ஏன் மனிதன் ஒவ்வொரு காலமும் மாறிவிடுகிறானா? இல்லையே? அவன் வாழ்க்கை முறையும், பொருள் வயப்பட்ட, உயயோகப்படுத்தும் கால நிலைகளும், விஞ்ஞான முன்னேற்றமும் தான் மாறிக்கொண்டே வருகின்றன. மனிதன் உடல், மனம், உயிர், கற்றறிவு, அனுபவ அறிவு, குடும்பம், உறவுகள், சமூகம், உலகம், சராசரி வாழ்நாள் காலம் என்பதில் எந்த மாற்றமும் வருவதில்லையே.
ஆனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால், வாழ்க்கைக்கான போதனை என்றால், எப்படி பணமும் பொருளும் பெறவேண்டும்? மகிழ்ச்சியை நீடித்து அனுபவிக்க என்ன வழி? என்ன செய்தாலும், எதை சாப்பிட்டாலும் நோயில்லாமல் வாழ்வது எப்படி? என்ன செய்தாலும் குறையில்லாமல் நீண்ட நாள் வாழ்வது எப்படி? இன்னும் பலப்பல, என்பதாகத்தான் எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்பார்ப்பதுதான் நம் குறையே தவிர, போதனைகளில் எந்தக்குறையும் இல்லை. சிந்தித்துப்பாருங்கள்!
வாழ்க வளமுடன்.
-