Why no mind peace when we worship in temple too? What can be done?
மன அமைதிக்காக ஏதேனும் கோவிலுக்கு சென்றாலும்கூட அமைதி கிடைக்கவில்லையே? என்ன செய்வது?!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மன அமைதிக்காக ஏதேனும் கோவிலுக்கு சென்றாலும்கூட அமைதி கிடைக்கவில்லையே? என்ன செய்வது?!
பதில்:
இந்தக்கேள்வியின் உள்நிலை அறியும் பொழுது, நீங்கள் வீட்டிலேயே தவம் செய்துவருகிறீர்களா? அதைவிட்டு விட்டீர்களா? என்று தெரியவில்லை. என்றாலும், யோகத்தில் இணைந்து தவம் கற்றுக்கொண்ட ஒருவர், முற்றிலுமாக கோவிலுக்கு போவதை, அங்கே வழிபாடு செய்வது விட்டுவிட வேண்டியதில்லை. அதில் எந்த வித மாற்றுக்கருத்தும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்னதுமில்லை. என்றாலும், அந்த வழிபாடுகளில் இருக்கின்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுறுத்துகிறார். அதனால், யோகத்திற்கு வந்த பிறகு கோவிலுக்கு செல்வது அவரவர் விருப்பமே. ஆனால் அதற்காக, கற்றுக்கொண்ட யோகத்தை விட்டுவிடவும் கூடாது. அதுதான் பிறப்பை மறுபடியும் சிக்கலாக்கிவிடும்.
உங்கள் கேள்வியின் வழியாக, இரண்டு விசயங்களை புரிந்து கொள்ளமுடிகிறது. உங்களுக்கு வீட்டில் தவம் செய்தாலும் அமைதி கிடைக்கவில்லை, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும் அமைதி கிடைக்கவில்லை. இப்பொழுது இதற்கு காரணம், ஏற்கனவே உங்கள் மனம் அமைதியின்று தவிக்கிறது என்றுதான் கருதவேண்டும். உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கலாம். அது தினமும் தொடர்கிறது என்றுதான் நினைக்கிறேன். அது குடும்பத்தில் இருக்கலாம், குடும்ப நபர்களில் இருக்கலாம், உங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கலாம், உங்களின் தொழில், வியாபாரம், வேலை இவற்றிலும் கூட சிக்கல் இருக்கலாம்.
எனவே முதலில், இந்த சிக்கல், மன குழப்பம் தருவது எது என்று ஆராயுங்கள். ஒருநாளை இதற்கென்று ஒதுக்கி, ஏதேனும் தனிமையில் உட்கார்ந்து யோசியுங்கள், சிந்தனை செய்யுங்கள், முதலில் உங்கள் கைபேசி, மற்ற இதர உபயோகங்களை ஒருநாள் தவிர்த்துவிடுங்கள். வெறும் ஆளாக அமர்ந்து, யாரையும் அருகில் விடாமல் தனியாக, உங்கள் வீட்டிலே கூட அமைதியாக இருந்து சிந்தித்துப் பாருங்கள். இதைத்தான், வேதாத்திரியத்தில் ‘அகத்தாய்வு எனும் தற்சோதனை’ என்றும் சொல்லுகிறோம். உங்களுக்கு தவம் செய்ய வாய்ப்பிருந்தால், முதலில் துரிய தவம் செய்துவிட்டு பிறகு இந்த சிந்தனையை தொடருங்கள். நிச்சயமாக விடை கிடைக்கும்.
அந்த சிக்கல், அதன் தன்மை, யாரால் வந்தது?, எதனால் வந்தது? எப்படி தீர்க்கலாம்? யார் உதவுவார்கள்? எவ்வளவு காலம் ஆகும்? நீடித்தால் என்னாகும்? விலக்கிவைக்க முடியுமா? ஏற்று வாழ முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு அந்த பதிலை எழுதியும் வையுங்கள். மறுபடி ஆராயுங்கள்.
மற்றபடி பிரச்சனையும், சிக்கலும், குறையும் மனதில் சுமந்து கொண்டு இருக்கிற நிலையில், நீங்கள் வீட்டில் தவம் செய்தாலும் அமைதி கிடைக்காது. கோவிலுக்கு சென்று வணங்கி, வழிபாடு செய்தாலும் அமைதி கிடைக்காது. பிரச்சனை உங்கள் தவத்தில் இல்லை, கோவிலிலும் இல்லை. அது அந்த பிரச்சனை உங்களுடைய மனதில்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மை அறிந்தால் அந்த அமைதியை நீங்கள் அறிந்து அதை அனுபவிக்கலாம்.
வாழ்க வளமுடன்.
-