Why need to call that one is the God, Almighty, Supreme Power, and Divine?
இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன், இப்படி சொல்வதெல்லாம் அவசியமானதுதானா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன், இப்படி சொல்வதெல்லாம் அவசியமானதுதானா?
பதில்:
இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன் என்ற வார்த்தைகள் தரும் உண்மையை நீங்கள் இன்னும் அறியவில்லை. அறிந்துகொள்ளவும் மறுக்கிறீர்கள். ஒன்றும் தவறில்லை. இந்த வார்த்தை மற்றும் உண்மையில் உங்கள் அனுபவம் அப்படி இருக்கிறது. மேலும் நீண்டகாலமாக சில கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் உடனடியாக மாற்றிக் கொள்ளவும் முடியாது. அதோடு உங்கள் பார்வையில், பொய்கள் தான் கண்ணில் பட்டிருக்கிறது. அதனாலும் கூட நீங்கள் இந்த கருத்தில் இருக்கலாம். வேறு யாரெனும் ஒரு வழிகாட்டியின் அறிவுரையாலும் அப்படியாக கருத்தில் நின்றிருக்கலாம். உங்களைப்பொறுத்தவரை அப்படி சொல்வது அவசியமில்லைதான்.
இதற்கு விளக்கமாக, குரு மகான் வேதாத்திரி சொன்ன உண்மைகளையே இங்கே குறிப்பிடுகின்றேன். ஒரு பொருளை நாம் தூக்குவது என்றால், நம்மால் எவ்வளவு தூக்கமுடியுமோ அவ்வளவு எடை கொண்ட பொருளைதான் தூக்க முடியும். காய்கறி அங்காடியில் உள்ள ஒரு மனிதர், தன் முதுகில் கிட்டதட்ட 50 கிலோ முதல் 100 கிலோ வரை தூக்கமுடியும். அதை நாம் வழக்கமாக பார்க்கிறோம். அதற்குமேல் என்றால் யாராலும் முடியாது. உங்களால் முடியும் என்றால் முயற்சிப்பதில் தவறில்லை. இப்போது ஓர் உண்மை நமக்கு தெரியவரும். தூக்கும் பொருளைவிட நாம் வலுவாக இருந்தால்தான், அந்த பொருளை தூக்கமுடியும். ஒரு மேஜைமேல் பத்து மூட்டைகளை அடுக்கினால் மேஜை உடைந்து நொறுங்கிவிடும் அல்லவா?
இப்போது உங்களுக்கு ஒரு காட்சி தருகிறேன். இந்த பூமி எவ்வளவு வலு உடையது என்பது உங்களுக்கு தெரியுமா? எத்தனையோ கோடி டன் எடை இருக்கலாம். அத்தகைய பூமியை தாங்கிக் கொண்டிருப்பது யார்? உடனே இதற்கு இயற்கை என்று நீங்கள் பதில் தருவீர்கள். ஆம் இயற்கைதான், தன்னிலே இந்த பூமியை மிதக்கவிட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த இயற்கைக்குத்தான் மதிப்பு கொடுத்து, வார்த்தைகளாலும் மதிப்பு கொடுத்து, இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன் என்று பலவிதமான் பெயர்களில் அழைக்கிறோம். அந்த வார்த்தை இருக்கின்ற மதிப்பை உணராதவர்களுக்கு, அது மிக சாதாரணமான ஒலியாகவும், வார்த்தையாகவும் தான் தெரியும்.
நம்முடைய வாழ்வில் இன்று ஜனநாயகம் வந்துவிட்டதால், எந்த நாட்டு மக்களும் (ஒரு சிலர் தவிர) அவர்கள் நாட்டின் ஜனாதிபதியையும் மதிப்பதில்லை, பிரதமரையும் மதிப்பதில்லை. ஆனால் அந்தக்காலத்தில் அரசன், அரசி என்றால் பெரும் மதிப்பு கொண்டிருப்பார்கள். இப்போதும் சிலர் தங்களை அரச பரம்பரை என்று சொல்லிக் கொள்வதை கவனிக்கலாம். அதில் அவர்களுக்கு பெருமை கிடைத்துவிடுகிறது. அந்தவகையில், அரசன், அரசி என்று நேரில் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அந்த மதிப்பை நாம் வழங்குவோம் இல்லையா?! (ஒரு கற்பனையாக அந்தக்காலத்தில் நீங்கள் வாழ்வதாக நினைத்துப்பாருங்கள்).
இதுபோன்றதான உயர்ந்த மதிப்புத்தான், இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன் என்ற சொல்லிலும் அடங்கி இருக்கிறது. எனினும் உங்களுக்கு என்ன விருப்பம் இருக்கிறதோ அப்படி அழைக்கலாம். யாரும் உங்களை குறை சொல்லப்போவதில்லை. என்றாலும் உணர்வால் நீங்களே உங்களையறியாமல் அப்படி சொல்லும் காலமும் வரலாம்!
வாழ்க வளமுடன்.
-