கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பொங்கல் பண்டிகை குறித்த உண்மை என்ன? இது தேவைதானா?
பதில்:
மனிதர்களாகிய நமக்கு தேவைதான். பண்டிகை என்றால் பண்டு+ஈகை= பண்டிகை என்றாகிறது. சமூகத்தில் இருக்கின்ற மனிதர்கள் ஒருவருக்கொருவர் பொருட்களை, முழுமனதோடு பகிர்ந்து அளிப்பது என்று பொருள்தரும். இங்கே ஈகை என்பது, எதிர்பார்த்து கொடுப்பது அல்ல, தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலும் அல்ல. தன்னிடம் இருக்கின்ற மிகுதியை பிறருக்கு அளிப்பது என்று அர்த்தமாகிறது. இது தமிழர்களின் சிறப்பம்சம், சித்தர்கள் வகுத்த வாழ்க்கை நெறியின் அடிப்படையில் மலர்ந்தது என்றும் சொல்லமுடியும். ஏனென்றால் சித்தர்கள், தங்களுடைய வாழ்வில், ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்று நிலைகளின் அடிப்படையில்தான் வாழ்ந்தார்கள், அதையே மக்களுக்கும் தந்து முறைப்படுத்தினார்கள்.
இங்கே பொங்கல், என்பது இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி போற்றும் விதமான ஒரு வழிபாட்டு நிலை என்பதையும் நாம் குறிப்பிடவேண்டும். பொதுவாகவே மனிதன் தன்னளவில், இயற்கையக் போற்றி வந்தவன். தன்னை காப்பதும் இந்த இயற்கைதான் என்று அறிந்துகொண்ட மனிதன், இயற்கையை தெய்வமாக வணங்குவதில் தவறு இல்லையே? அந்த நிலையில், தினமும் எழுந்து மறைந்து, மீண்டும் தோன்றும் சூரியனுக்கு வணக்கமும், நன்றியும் தெரிவிக்கும் நாளாக, பொங்கல் அமைந்திருக்கிறது.
இது தமிழர் திருநாள் என்று சொல்லுவதற்கு சான்றாக, பழங்கால சங்கப்பாடல்கள் நமக்கு உதவுகிறது எனலாம். இங்கிருந்து மக்கள் உலகெங்கும் புலம் பெயர்ந்ததில், இந்த பொங்கல் பண்டிகையும் பலவேறாக திரிபு பெற்று வெவ்வேறு நிலைகளிலும், பெயர்களிலும் மாறி இருக்கவும் வாய்ப்புள்ளது.
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், இந்த பொங்கல் நாளில், அதன் சிறப்பு குறித்தும், யோகத்தோடு இணைந்து நிறைய கவிகள் படைத்துள்ளார்.
“பொங்கிடுவோம் உயிர் உணர்ந்து
புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம் நாடனைத்தும்
பொறுப்பாட்சி வளம் கண்டு
பொங்கிடுவோம் சமுதாயப்
பொருள் துறையில் நிறைவு கண்டு
பொங்கிடுவோம் மக்கள் குலம்
போர் ஒழித்து அமைதி பெற."
"பயிர் விளைந்த மகிழ்ச்சியிலே உழவர் பொங்க
பங்கீடு பெற்றவர்கள் பயனால் பொங்க
உயிரறிந்த உவப்பினில் யான் உளத்தில் பொங்க
உலகெங்கும் வளம் பெறவே வாழ்த்து கின்றேன்."
இன்னொரு சிறப்பு என்னவென்றால், சூரியனின் வானியல் நகர்வு முக்கியமானது. ஒருமாத காலம், தனுசு ராசி நட்சத்திர கூட்டத்தில் இருந்துவந்த சூரியன், மார்கழி மாதம் என்ற தெய்வீக தன்மைகொண்ட காலம் முடித்து, தன்னை மீண்டும் பொலிவோடு, மகர ராசி நட்சத்திரக் கூட்டத்திற்கு நகர்கிறது. அதுவே தை மாதம் முதல் நாளாகிறது. இன்னொரு சிறப்பாக, சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வும், நின்று இனி தெற்கு நோக்கி நகர்ந்திடும். இதை உத்தராயணம், தெட்சினாயணம் என்றும் சொல்லுவார்கள். அதையும் அறிந்துணர்ந்த தமிழ் முன்னோர்கள், சூரிய வழிபாட்டு நாளாகவும், பொங்கல் பண்டிகை நாளாகவும் அமைத்தார்கள். மேலும் அந்த நாளின் சூரியன், மனிதர்களின் உயிருக்கும், அதே நேரத்தில் சந்திரன் மனிதர்களின் மனதிற்கும் ஊட்டமளிக்கிறது.
எனினும் இதையெல்லாம் மறுத்து, அதெல்ல, இதெல்ல, அப்படி, இப்படி என்று மறுத்துப்பேசுபவர்களை விட்டுவிடலாம். அவர்களின் உரிமையில் அது தேவையில்லை என்றால் விட்டுவிடோம். உங்களுக்கு விருப்பம் இருக்கும் நிலையில், உண்மை அறிந்த நிலையில் கொண்டாடுவது தவறில்லை. இந்த பண்டிகை வழியாக, இந்த ஒரு நாளில், உங்கள் மனதை மாற்றியமைக்கிறீர்கள் என்ற உண்மையையும் புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
-