Why not any changes on my worries in life after yoga?
யோகத்திற்கு வந்தபிறகும் கூட வாழ்க்கைக் குறித்த கவலை மாறவில்லையே? எப்போது மாறும்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்திற்கு வந்தபிறகும் கூட வாழ்க்கைக் குறித்த கவலை மாறவில்லையே? எப்போது மாறும்?
பதில்:
பெரும்பாலான மக்களின் நிலை அதுதான். சிலர் வெளியே சொல்லுவார்கள், சிலர் தனக்குள்ளாக புலம்பி தவிப்பார்கள். சிலர் அதை மறக்க நினைத்து புகை, குடி, போதை போன்ற இன்னும் பல தவறான பழக்கங்களுக்குள் சிக்கி விடுவார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி, யோகத்திற்கு இவர் வந்துவிட்டார் என்பது ஓர் ஆறுதல்தான். ஒரு மனிதன் யோகத்தில் இணைவதற்கு என்ன தகுதி வேண்டும்? என்று, வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் கேட்ட பொழுது, அவர் ‘உடல், மனம், உயிர் வேண்டும்’ என்றுதான் பதில் தந்தார். அதனால் உங்கள் கவலையால் ஏற்பட்ட, தவறான பழக்க வழக்கம் சூழல் என்றாலும், அது யோகத்திற்கு தடையை ஏற்படுத்தாமல், விட்டு விலக்கி விடாமல் இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் யோகத்தின் வழியாக உங்களை நீங்களே, நல்லவழியில் செல்ல திருத்திக்கொள்ள முடியும் அல்லவா?
யோகத்தில் வழியாக, நாம் நம்முடைய மனதைத்தான் முதலாவதாக சீர் செய்கிறோம். இதுவரை நாம் நம்முடைய உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும், ஆன்மாவுக்கும் செய்துவந்த தவறுகளை திருத்துகிறோம். ஏற்கனவே நம்மோடு கலந்து இருக்கும், பிறவி வழியாக வந்த கர்மா என்ற வினைப்பதிவுகளை திருத்தி அமைக்கிறோம். வாழும் வாழ்க்கையில் நம்கூடவே வாழும் இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் நன்றிக்கடனையும் செலுத்துகிறோம். இயற்கையை மதித்து அதனோடு நல்லுறவு பேணுகிறோம். இந்த பயணத்தில் உடனடியாக நமக்கான மாற்றம் வந்துவிடுவது சாத்தியமில்லை.
ஏனென்றால் நம்முடைய சுமை, கர்ம வினைகளினால் ஆன சுமை, எவ்வளவு என்பது நமக்கு தெரியாது. எத்தனையோ தலைமுறைகளாக, நம்முடைய பரம்பரையினர் தீர்க்காத நிலையில், இப்பொழுதான், நாம் இந்த முயற்சியை எடுத்து, முடிவாக யோகத்தில் இணைந்து பயணிக்கிறோம். அந்த வகையில், இதற்கான ஒரு உந்துதலை உருவாக்கித்தந்த அந்த முன்னோர்களை வாழ்த்தியும் வணங்குவோம்.
இப்படியான, வாழ்க்கைக் குறித்த கவலை, வாழ்க்கை சிக்கல் என்பதெல்லாம், நாம் யோகத்தில் இணைந்த உடனே மாறிவிடும் என்று எதிர்பார்ப்பது தவறு. அது தானாக நிகழும் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். மனதோடு வாழும் நாம், என்றுமே ஒர் எதிர்பார்ப்பிலேயே வாழ்வதற்கு பழகிவிட்டோம். அதை நாம் திருத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம். அதற்கு யோகசாதனையில் தவம் நன்கு உதவிடும். நம்முடைய மனம் என்றுமே, கடந்த காலத்தையும், நாளைய நாளையும் இணைத்துக் கொண்டே, காட்சியாக காட்டிக் கொண்டே, இன்றை நாளை மறுத்துக் கொண்டே வருவதை நாம் அறிவோம்.
அந்த நிலை மாறி, இன்று, இப்பொழுது என்று விழிப்படைவதற்கு மனம் பழகவேண்டும். அப்படி பழகிவிட்டால், உங்களுடைய கவலை, வாழ்க்கை சிக்கல் அகன்று, அதை தீர்ப்பதற்கான வழிகளும் பிறப்பதை காண்பீர்கள். இதற்கு அன்றாடம் நாம் செய்யும் தவம் உதவுகிறது. அந்த தவத்தின் வழியாகவே முன்னேற்றமும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது. தீர்வுகளும் உருவாகிறது. மனம் தளராமல் தொடர்ந்து யோகத்தில் பயணியுங்கள். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்.
-