கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஜீவாத்மா, பரமாத்மா என்பதும், ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்பதையும் யோகத்தில் விளக்க முடியுமா?
பதில்:
மிகப்பெரும் இறை தத்துவ மேதைகள் காலம் காலமாக சொல்லிவரும் விளக்கம் ஆகும். பக்தி மார்க்கத்தின் மூலம், வைஷ்ணவத்தின் வழியாக, முழுமையை மக்களுக்கு, எளிமையாக அளித்த, விசிஷ்டாத்துவத்தின் உண்மையை அருளிச்செய்த மகான் இராமானுஜனாச்சாரியார், ஜீவாத்மா, பரமாத்மா என்பதையும், இந்த ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்ற உண்மையையும் விளக்கித்தந்தார். பெரும்பாலான எல்லா வைஷ்ணவ பெரியோர்களும், ஆழ்வார்களும் பாடல்கள் வழியாக விளக்கியும் உள்ளார்கள். அதை இங்கே விளக்கமாக காண்பது கடினமே. அப்படி விளக்கினாலும் முழுமையாக புரிந்து கொள்வதும் கடினமே.
ஏனென்றால், உணர்வு பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டியதை, எழுத்தாலும் வார்த்தைகளாலும் புரியவைக்க முடியாது. அந்த விளக்கமும் முழுமையாக உங்களை வந்தடையாது. ஒரு மலர் மலர்ந்து நறுமணம் வீசுகிறது என்று எழுதினால், அந்த பூவும், அதன் நறுமணமும் எப்படி உங்களுக்கு உணர்வாக கிடைக்கும்? உலகில் சாதாரணமாக நாம் காண்கின்ற பூவும், நுகர்கின்ற நறுமணமும் கூட இங்கே வார்த்தையால் விளக்கிட முடியவில்லை அல்லவா? அப்படியான நிலையில், இந்த கேள்விக்கான பதிலை விளக்கிவிடுவதும் கடினம்.
என்றாலும், அதில் சொல்லப்படும் உண்மை என்ன என்று பார்க்கலாம். ஜீவாத்மா என்பது, நாம் தான். ஒரு ஜீவன், மனிதன் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். ஐந்தறிவு ஜீவன்களுக்கு அடுத்துவந்த, ஆறறிவான மனிதனுக்கு மட்டுமே ஆத்மா என்பது சிறப்புத்தகுதி பெறுகிறது. மனிதன் ஒரு ஜீவன் என்பதால், ஜீவாத்மா. ஒரு மனிதனாவன், உடல், மனம், உயிர் என்பதைக் கடந்து ஆத்மா என்ற நிலையிலும் இருக்கிறான். அத்தகைய ஆத்மாவின் களங்களை போக்க வேண்டும் என்பதற்காகவே பிறவி எடுத்துள்ளான் என்பது கருத்து. அந்த களங்கள் என்பது என்ன? கர்மா என்ற வினைப்பதிவுகள் தான்.
இங்கே பரமாத்மா என்பது, இறையாற்றலை குறிக்கிறது. பரம் என்றால் முதன்மையான, முழுமையான, வேறெதும் ஈடாக சொல்ல இயலாத தனித்த ஒன்று என அர்த்தமாகிறது. அத்தகைய பரமாத்மாவோடு, ஜீவாத்மாவை ஒன்றிடச் செய்வதுதான் பிறவிக்கடன் என்பதே இதன் உண்மையாகிறது. இங்கே ஜீவன், ஆத்மா, பரமாத்மா என்ற மூன்று நிலைகள் உள்ளன.
சித்தர்கள் துவைதம், விசிஷ்டாத்துவைதம் என்பதையெல்லாம் கடந்து அத்வைதம் என்ற நிலையில் தங்களை நிறுத்திக்கொண்டார்கள்.
ஆதிசங்கரரும் அத்வைதத்தில் பெரும்பங்கு ஆற்றியவரே எனினும் பாமர்களுக்காக பக்தியிலும் பல பகிர்வுகளை தந்திருக்கிறார். சித்தர்களின் வழியான யோகத்தில் ஜீவாத்மா, பரமாத்மா என்பதும், ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்பதும் வேறெரு வகையாக விளக்கமளித்து பின்பற்றப்பட்டு வருகிறது.
நீங்கள் யோகத்தில் இணைந்து, தகுந்த குருவின் வழியாகவே இந்த உண்மைகளை புரிந்துகொள்ள முடியும்.
வாழ்க வளமுடன்
-