Shall we get Ashtamasiddhi by joining yoga? Is it true and how?
யோகத்தில் இணைவதால் அஷ்டமா சித்தி, சித்துக்கள் இப்படி எத்தனையோ அதிசயங்கள் நிகழும் என்கிறார்கள் உண்மைதானா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைவதால் அஷ்டமா சித்தி, சித்துக்கள் இப்படி எத்தனையோ அதிசயங்கள் நிகழும் என்கிறார்கள் உண்மைதானா?
பதில்:
ஆம், சித்தர்கள் இதை, தங்களுடைய கவிதை நூல்கள் வழியாக, புரிந்துகொள்பவர் அறிந்துகொள்வார் என்ற குறிப்பாக எழுதி வைத்தார்கள். அதை அக்காலம் முதல் இக்காலம் வரை நேரடியாக அர்த்தம் புரிந்து கொள்ளாமல் பரப்புரை செய்பவர்கள் மிகுந்திருக்கிறார்கள். இப்போதைய தேடுதலில் கிடைத்த விபரம் என்ன என்று இங்கே பகிர்கின்றேன். படித்துப்பாருங்கள்.
அஷ்டமா சித்துக்களும், மூலிகை மந்திரங்களும்
அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்,
-
உச்சாடனம் - மூலிகைகளால் மந்திரித்து வியாதிகள், பேய், பிசாசுகள், மிருகங்கள், எதிரிகள், உடலில் ஏறிய விஷங்களை விரட்டும் செயலே உச்சாடனம்.
ஆகர்ஷணம் - துர்தேவதைகள், தேவதைகள், இறந்து போன ஆன்மாக்கள் போன்றவற்றை அழைத்துப் பேசுவது.
பேதனம் - ஒன்றை வேறொன்றாக மாற்றிவிடுவது. மனிதர்களை, மிருகங்களைப் பேதலிக்கச் செய்வது.
மோகனம் - மயங்கச்செய்வது.
வசியம் - மனிதர்களை, விலங்குகளை வசியம் செய்வது.
வித்துவேஷணம் - விருப்பமில்லாமல் செய்வது அல்லது வெறுப்பை உண்டாக்குவது.
மாரணம் - எதிரிகளை மிரட்டி, கொல்வது.
தம்பனம் - பிற மனிதர்களின் செயல்களை. இயக்கங்களை தடுப்பது.
(நன்றி: இணையதளங்களின் பகிர்வுகள்)
-
இவை எல்லாமே பொதுவாகவே சித்து என்றுதான் அழைக்கப்படுகிறது. இது செயல்படுகிறதோ இல்லையோ? புரிந்து செய்யமுடியுமோ இல்லையோ? பொருந்துமோ பொருந்தாதோ? எப்படி இருந்தாலும் கூட, இதை நாம் பொய் என்றால், நம்மை ஒருவழி செய்துவிடுவார்கள். அதனால் நாமும் நம்பிக்கொள்ளலாம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மக்கள் மனதை மயக்கி, மயக்கத்தில் ஆழ்த்தும் சித்துக்கள் வேண்டாம் என்று சொல்லுகிறார். உண்மையாகவே, நீங்கள் மேற்சொன்ன பட்டியலை படித்துப்பாருங்கள்.
இதனால் உண்மையிலேயே உங்களுக்கு ஆவதென்ன? ஏதேனும் பிரயோஜனம் உண்டா? மக்களுக்கு நன்மை ஏற்படுமா? இதனால் நீங்கள் உயர்வை அடைந்துவிடுவீர்களா? எந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கை நலம் பெறும்? மக்களின் அன்பை பெறமுடியும்? பொன்னும் பொருளும் புகழும் அதிகாரமும் நிறைய கிடைத்துவிடுமா? என்றெல்லாம் கேட்டு ஆராய்ச்சி செய்து அதற்கான பதிலை கண்டுபிடியுங்கள்.
முக்கியமாக, இந்த பட்டியலில் இருக்கின்ற எந்த ஒரு சித்து வேலைக்கும், ஆதாரம் ஏதுமில்லை. இதற்கெல்லாம் முழுமையான பாடம் உண்டா? யாரிடம் கற்பது? சொல்லித்தரும் நபர்கள் உண்டா? அவர் என்ன செய்கிறார்? எப்படி அதை பிறருக்கு கற்றுக்கொடுப்பார்? எதன் அடிப்படையில் அதை பிறருக்கு வழங்குவார்? என்பதும் தெரியவில்லை.
யோகம் என்றாலே எதோ மாயாஜாலம், சித்தர்கள் என்றாலே வித்தைக்காரர்கள் என்று கருத்து மேலோங்கி பரவிவிட்டது. நீங்களும் நானும் நம்பும் அளவிற்கு. ஆனால் சித்தர் என்றால், சித்து என்ற உயிராற்றலை உணர்ந்து அறிந்தோர் என்பதுதான் சித்தர் ஆகும். அந்த உண்மையை எல்லா யோகசாதனை அமைப்புக்களும் தருகிறது. வேதத்திரியமும் அதில் உண்டு.
ஏற்கனவே கர்மா என்ற வினைப்பதிவுகளால் சிக்கித்தவிக்கும் ஒருவருக்கு, இந்த சுமைவேறு தேவைதானா? இருக்கிற வாழ்நாளில் இதை தீர்க்கவே காலமில்லாதபோது, அஷ்டமா சித்துக்களும் அவசியம் தானா? நான் யார்? என்ற பிறவியின் கடமையும், நோக்கமும் நிறைவேற்றுவதை விட்டு, இதற்காக காலம் கடத்துவது சரியானதுதானா? தன்னை அறிதலையும், இயற்கையின் உன்னதம் அறிவதையும், இறையுணர்வு பெறுவதையும் விட முக்கியத்தும் வாய்ந்ததா? இதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
-