What is called by Mahaakash, Boothaakash and Siddhaakash?
மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்றால் என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்றால் என்ன?
பதில்:
மெய்ப்பொருளாக உள்ள, முழுமுதற்பொருளையும், அதன் பரிணாமத்தையும் விளக்கும் வகையில் சித்தர்கள் நமக்குத்தந்த நிலைகள்தான் இந்த மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்பதாகும். இறை, இறையாற்றல், மெய்ப்பொருள், வெட்டவெளி, சுத்தவெளி என்று பலவாறாக உயர்ந்த கருத்தில், மதிப்புத்தந்து அழைக்கக்கூடிய ஒன்றை, முழுமுதற்பொருளை, எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், காத்து, அன்பும், கருணையோடும் இருந்துவரக்கூடியைத்தான், கட+உள்=கடவுள் என்று அழைத்து, யோகத்தின் வழியாக அறியவும் முடியும் என்று வகை செய்தனர் சித்தர்கள்.
எவ்வகையிலும் உருவமில்லா மெய்யை, எளியவர்கள் உணரவே கருத்துருவாக இருப்பதை, உருவ வழிபாடாக சிவம் என்பதை சிவனாக அமைத்தார்கள், பின்னாளில் வந்தோர் சிவத்தின் இயக்கத்தை நாராயணன் என்று அமைத்தார்கள். பின்னாளிலும், இந்நாளிலும் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆகாசம் என்ற வார்த்தையில் குறிப்பிடப்படுவது, மெய்ப்பொருளின் பரிணாமத்தில் வந்த காட்சியாக வந்த, எழுந்த முதற்பொருளாகும். இந்த ஆகாசம் வடமொழி சொல்லாகும். தமிழில் இதை விண் என்று அழைக்கிறோம். இப்படி ஆகாசம் என்ற ஒன்றை முந்தைய நிலையை, பரிணாமத்தில் எழுச்சி பெறாமல், மாற்றம் அடையாமல், உள்ளடக்கமாக, மெய்ப்பொருளாகவே இருந்த நிலையைத்தான் சித்தர்கள் ‘மகாகாசம்’ என்று அழைத்தனர். மகா என்றால் மிகப்பெரிய, அளவிட முடியாத, விரித்துச் சொல்லமுடியாத என்று அர்த்தமாகிறது.
அடுத்து வரும் ‘பூதாகாசம்’ என்பது மெப்பொருள், தன்னிறுக்கத்தால், நொறுங்கி, எழுச்சிபெற்று, பரமாணுவாக தோன்றி, அந்த பரமாணுவின் கூட்டாக அமைந்த ஆகாசம் என்ற பொருளாக, முதல் பஞ்சபூத (பௌதீக) தோற்றமாக மலர்ந்ததை சொல்லுவதாகும். இந்த ஆகாசம் என்பதற்கு பிறகுதான், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற மற்ற நான்கான, காற்று, வெப்பம், நீர், மண் என்ற் பஞ்சபூத தோற்றங்களாக வந்தது. இந்த ஐந்தும் கூட்டாகவும், இவற்றில் சில பல கூட்டாக இணைந்து உருவான பிரபஞ்சப் பொருள்கள், இயற்கைப் பொருட்கள் அனைத்தும் ‘பூதாகாசம்’ என்று குறிப்பிடுகின்றனர். பஞ்ச பூதங்களை, அதனால் ஆன ஆகாசம் என்ற தோற்ற முதற்பொருளை உள்ளடக்கியது என்று அர்த்தமாகிறது.
அடுத்ததாக வரும் ‘சித்தாகாசம்’ என்பது உயிராக மாறிய ஆகாசம் என்ற கருத்தில் சொல்லப்படுவதாகும். பூதாகாசத்தின் பரிணாமத்தில் இருந்து, அதன் தன்மாற்றமாக, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்து உணர்வை அறியும் வகையில் அடுத்தாக எழுந்ததே ‘மனம்’ ஆகும், இதை உள்ளடக்கமாக, மனம் என்பதைக் கொண்டு மலர்ந்தது ஜீவன்கள் ஆகும், இவை ஓர் அறிவுமுதல், ஆறறிவு மனிதன் வரை முழுமையடைந்து நிற்பதாகும். மனம் என்பது, ஆகாசத்தின் படர்க்கை நிலையே ஆகும். மனம் அதன் ஆழ்நிலையில் கருமையமாகவும் அமைகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சித்து என்றால் உயிர் என்றும் பொருளாகும். உயிராக மாறிய ஆகாசம் என்ற பொருளில்தான் ‘சித்தாகாசம்’ என்று அழைத்தனர். இந்த சித்து என்று உயிரை உணர்ந்தால்தான், சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதையும் அறிந்துகொள்ளலாம்!
வாழ்க வளமுடன்.