Why can not practice meditation at home and is not satisfied too?
எவ்வளவோ முயற்சித்தாலும் வீட்டில் தவம் செய்யமுடியவில்லை. செய்தாலும் திருப்தி இல்லை ஏன்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, எவ்வளவோ முயற்சித்தாலும் வீட்டில் தவம் செய்யமுடியவில்லை. செய்தாலும் திருப்தி இல்லை ஏன்?
பதில்:
இன்றைய காலகட்ட விஞ்ஞான வளர்ச்சியில், அதன் முன்னேற்றங்களை நாம் எல்லோருமே இங்கே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவழியாக வந்த பொருட்கள், வாகனங்கள் என்றும் நம்மிடையே குவிந்து கிடக்கிறது. இன்னமும் வந்துகொண்டேதான் இருக்கிறது. அதனுடைய தேவைகளும் நமக்கு வேண்டியதாகவும் உள்ளது. இவ்வளவுக்கு இடையிலும் நாம், நம்முடைய வாழ்க்கையை அமைத்து அதை திறமாக நடத்தவேண்டியுள்ளது, அதோடு அதில் விளையக்கூடிய பிரச்சனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மேலும் உள்முக தேடலுக்கான தவமும் செய்ய விரும்புகிறோம். தடையாகிறது.
உதாரணமாக, அதிகாலை எழுந்து, தவம் செய்ய அமர்ந்துவீட்டீர்கள். கண்கள் மூடி சில நொடிகளில், உங்கள் கைபேசி அழைக்கிறது. அதை கவனம் செலுத்தாமல் தவம் செய்கிறீர்கள். இப்போது அழைப்பு நின்றுவிட்டது. ஆனால் மறுபடி அழைக்கிறது. இப்போது நாம் அதை எடுப்பதா? விடுப்பதா? குழப்பம்தானே வரும்?
இதுபோல, வண்டி, வாகனங்களின் ஒலி, இரைச்சல், சாலை வியாபார குரல்கள், எங்கேயோ இருந்து குரைக்கும் நாய்கள் அதன் சண்டை ஒலி, உங்கள் வீட்டில் சமையலையில் இருந்து, தீடீரென்று வரும் ஒலிகள். உங்கள் குழந்தைகளின், அவர்களுக்கிடையேயான பிரச்சனையில் அடிதடி சண்டை ஒலிகள். அழுகைக் குரல், எதிர்பாரமல், உங்கள் மடியில் வந்து உட்காரும், குழந்தை, செல்லப்பிராணிகள் என்று இப்படி இன்னும் பல உண்டு. இவையெல்லாம் கடந்து, அமைதியாக தவம் இயற்றுவது என்பது கொஞ்சம் கடினமே!
உங்களின் தவத்திற்கான நேரத்தை, அதிகாலை 04:30 முதல் 05:30 மணிக்குள்ளாக முடித்துவிட முடிந்தால் மிக நல்லது. வாய்ப்பிருந்தால், அருகில் உள்ள, தவ மையத்திற்கு சென்று கூட்டுத்தவம் செய்துவரலாம். அதற்கென்று உங்கள் வேலைகளை, கடமைகளை கெடுத்துக்கொள்ளாது இருக்கவும் வேண்டும். உங்களை வருத்திக் கொள்ளவும் கூடாது. இதற்காக தனிமையான இடம் தேர்வு செய்வது கடினம், அது நல்லதும் இல்லை. கோவில், வழிபாடு தளங்களில் செய்யலாம் என்றாலும் அதுவும் பிரச்சனையாகலாம்.
உண்மையிலேயே உங்கள் இல்லம் போன்ற அமைதியான, பாதுகாப்பான, இடம் இந்த உலகிலேயே இல்லை என்பதே பொதுவானது.
இவ்வளவு பிரச்சனைகளையும் ஏற்று, கடந்து தவம் செய்தாலும், மனம் அதில் நிலைப்பது மிக கடினம். ஏனென்றால், தவத்தின் வழியாக, மனதை அதன் இயல்புக்கு திருப்ப முயற்சிக்கிறோம். ஆனால் சூழலின் காரணமாக அது மேலும் கொந்தளிக்கிறது என்பதால் அந்த தவம் உங்களுக்கு உதவாது. அதனால்தான் முன்பைவிடவும் குழப்பமாகிறது. திருப்தி அளிக்காது. நிம்மதியற்றும் போகிறது. இந்த தவம் இயற்ற தடையாக இருப்பது எல்லாம் என்ன? என்று ஒரு ஆராய்ச்சி செய்யுங்கள். எதையெல்லாம், எவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்று முடிவு செய்யுங்கள். அதை சரி செய்யுங்கள். உங்களால் எதுவும் செய்யமுடியாது என்றால், தவம் செய்து உங்களை, உங்கள் இயல்பை கெடுத்துக்கொள்ளாமல், தவத்தையே கொஞ்ச காலத்திற்கு தள்ளிவைத்து விடுங்கள். அதுதான் நல்லது. சூழல் சரியானால் பிறகு ஆரம்பியுங்கள். தவறில்லை!
வாழ்க வளமுடன்.
-