What is lifeforce? Why it is separated? Can we protected?
உயிர் என்பது என்ன? அது ஏன் காலத்தால் போய்விடுகிறது? தடுக்கமுடியாதா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உயிர் என்பது என்ன? அது ஏன் காலத்தால் போய்விடுகிறது? தடுக்கமுடியாதா?
பதில்:
எளிமையாக கேள்வி கேட்டுவிட்டீர்கள், அதில் எவ்வளவு ஆழ்ந்த இயற்கை உண்மைகள், ரகசியங்கள் அடங்கியுள்ளன என்பதை அறிவீர்களா? இத்தகைய உயிர் குறித்த எல்லா உண்மைகளையும் சித்தர்கள் அறிந்து உணர்ந்து முழுமையும் அடைந்தார்கள். சித்து என்று அழைக்கப்படும் உயிரை அறிந்ததால்தான் ‘சித்தர்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர். விளக்கிட கடினமே என்றாலும் கூட, இந்த பதிவில் முடிந்தளவு எளிமையாக விளங்கிக் கொள்ள முயற்சிப்போம். எல்லோருக்குமே பயன்படும் வகையில் உதவும் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை வாழ்த்தி வணங்குவோம். குப்பையாக குழப்பிக் கிடந்த உண்மைகளை அழகாக, சிதையாமல் எடுத்து, அழக்குகளை நீக்கி மிக தெளிவாக, எளிமையும் செய்து, மாற்றுக்கருத்துக்கு இடம் தராமல், விளக்கித்தந்தவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
உயிர் என்று அழைக்கப்படும் ஆகாஷ் துகள்கள், பஞ்சபூத தத்துவத்தின் முதல் நிலையாகும். கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத நிலையிலும், கருத்துக்கும் மிக எளிதில் சிக்கிடாத நுண்ணியது இந்த உயிர்த்துகள்கள். இதை தமிழில், வேதாத்திரியத்தில் விண் என்றும் சொல்லுகிறோம். மனிதர்களாகிய, நம்முடைய உடல் மண் என்ற பஞ்சபூத தன்மை கொண்டது, அதனூடாக, நீராக இரத்தம், வெப்பமாக உடல் சூடு, காற்றாக மூச்சுக்காற்று ஆகிய நான்கு பஞ்சபூதங்கள் இருப்பதை நாம் அறிவோம். இதில் ஐந்தாவதாக, முதல் நிலை பஞ்சபூதமான உயிர் இணைந்தால், நாம் இந்த புவியில் உயிரோடு, உணர்வோடு வாழ்கிறோம் என்று அர்த்தமாகிறது.
இந்த உயிர் மிக மிக நுண்ணியதும், லேசானதும் ஆகும். எனவே இது இயற்கையின் சக்தியால் நீண்டகாலம் ஒரே இடத்தில் தங்கிட வாய்ப்பில்லை. ஆசான் திருவள்ளுவர், மிகத்தெளிவாக தன்னுடைய குறள் வழியாக இதை சொல்லுகிறார்,
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். (நிலையாமை, குறள் 334)
உயிரானது, ஒவ்வொருநாளும் இந்த உடலைவிட்டு நகர்ந்து போய்க்கொண்டேதான் இருக்கிறது. ஒருநாள் என்பது உடலையும் உயிரையும் இணைக்கும் இணைப்பை வாளால் அறுத்துக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்வாக பெற்று அறிந்து கொள்ளுங்கள். என்று குறளில் சொல்லுகிறார்.
இதன்படி காலத்தால், இயற்கையாகவே உயிர் உடலைவிட்டு நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ ஒருநாளில் முழுதாக போய்விடுகிறது. அன்றைக்கு ஒருநபர் இறந்துவிடுகிறார் என்று புரிந்துகொள்கிறோம். இதில், இந்த இயற்கைக்கு முன்பாக, அதன் விதிக்கு முன்பாக நாம் ஒன்றுமே இல்லை. அதனால் அதன்போக்கில் நிகழும் ஒன்றை தடுக்கவும் வழியில்லை. ஆனால் இது ஏன் நிகழ்கிறது? இந்த பிறப்பும் இறப்பும் எதனால்? என்ற கேள்வி உங்களுக்கு எழுமானால், யோகம் அதற்கான பதிலை தரும். வாழ்கின்ற நாளுக்குள் அதை அறியவும் முயற்சிக்கலாம் என்பதும் உறுதி.
ஆசான் திருவள்ளுவர், தன் குறள்வழியாக தருகின்ற இன்னொரு உண்மையையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (நிலையாமை, குறள் 340)
உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? என்ற விளக்கத்தை - மு. வரதராஜன் அவர்கள் தருகின்றார்.
உயிர் குறித்த உண்மைகளை எடுத்துரைத்த ஆசான் திருவள்ளுவரையும், ஔவையார், சித்தர்கள், ஞானியர்கள், மகான்கள், யோகியர்கள், ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களையும் மீண்டும் வாழ்த்தி நினைவு கூர்வோம்.
வாழ்க வளமுடன்.
-