கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பக்தியிலும், யோகத்திலும் ஆர்வமில்லாதவர்கள், அதை எதிர்ப்பவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிலை என்ன?
பதில்:
மிக விரிவாகவே பதில் தரக்கூடிய கேள்வி, எனினும் சுருக்கமாகவே இங்கு காண்போம். இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும், அவரவர் அளவில் அனுபவங்கள் உண்டு. அந்த அனுபவம், தங்கள் எண்ணம், சொல், செயல் இவற்றாலும், எதிர்பார்பதாலும் வரும். முக்கியமாக, ஒரு விளைவு என்பது தானாக வருவது என்பது இல்லை. இந்த இயற்கை மட்டுமே தானாக எதேனும் ஒரு விளைவை நொடிகொருதரம் தந்துகொண்டே இருக்கும்.
எந்த ஒரு மனிதனும், இன்னொரு மனிதனுக்கு துன்பம் நேரடியாக தருவதில்லை. ஒரு தலைமை, அதிகாரம், ஆளுமை, நீதி, சட்டம் என்ற உலக அரசு, அலுவலகம், பொது வாழ்வில் முறை என்ற வகையில்தான், நம்மை ஆளுமை செய்வார்கள். அதில்கூட துன்பம் என்பது, நாம் மீறினால்தான் வரும். மற்றபடி அது எல்லா மக்களுக்கும் பொதுவானதுதானே?!
ஒரு மனிதன், பக்தியிலும், யோகத்திலும் ஆர்வமில்லாது இருந்தாலும், அதை எதிர்த்தாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட அவர்களுக்கு துன்பம் வந்துவிடுவதில்லை. இயற்கையும் தனியாக தண்டிப்பதில்லை. ஆனால், இவைகளுக்கு எதிராக, இதை கடைபிடிப்பவர்களுக்கு எதிராக, தன் கருத்தை திணிக்கும் பொழுதான் அது முறையற்ற செயலாக மாறுகிறது. இங்கேதான் இருபக்கமும் துன்பம் எழுகிறது. மேலும், எதிரான நிலையுள்ளவர்கள், நேர்மையாக, இயல்பாக, இயற்கைக்கு மாறான கருத்து இல்லாது செயலாற்றவேண்டியது அவசியமாகிறது. அதை மீறினால் அவர்களுக்கு அவர்களாலேயே துன்பம் எழுந்துவிடும்.
என்றாலும், பக்தியில் உள்ளவர்கள் தன்னை, தனக்கு மேலான ஒரு சக்தியிடம் தன்னை ஒப்படைத்து சரணாகதி அடைகிறார்கள். யோகத்தில் உள்ளவர்கள் தன்னையே உள் கடந்து, அந்த சக்தி எது என்பதை அறிந்து தன்னிலே முழுமை அடைகிறார்கள். அவர்களின் மனம் விரிந்த நிலையில், உலக விசயங்களில் இருந்து விடுபட்டு, உண்மை இன்பம், பேரின்பம் பெற்று அமைதியும், அதன் வழியே சாந்தியும் பெறுகிறது. எனவே, இந்த இரண்டிலும், மனிதனாக பிறந்த பிறவியின் கடன் தீர்க்கப்படுகிறது.
எதிர்தரப்பினர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை. அதனால், இந்த இயற்கை அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துகொண்டே இருக்கும். உள்முகமாக வருத்தங்களையும், துன்பங்களையும் உருவாக்கிக் கொண்டே இருக்கும். எப்படியாவது, எக்காலத்திலாவது உண்மை உணர்க என்று வலியுறுத்திக் கொண்டே வரும். ஆனால் இது எதையும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். உதாசீனமும் செய்வார்கள். இதனால் அவர்களின் பிறவி நீண்டுகொண்டே போகும். கருத்தொடரின் காலமும் கூடும். சரி, அது அவர்களின் கவலையும், நிலையும் தானே?! அவர்களுக்கு இயற்கை கைவிடாமல் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கும். நாம் கடந்து செல்வோம்!
வாழ்க வளமுடன்.
-