Invitation for Friend and Followers | CJ

Invitation for Friend and Followers

Invitation for Friend and Followers


அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒர் அழைப்பு!


Facebook, Twitter, Instagram, WhatsApp and Telegram, YouTube, SnapChat,  Etc. ஆகிய அனைத்து சமூகத்திற்கு,

வயது வித்தியாசம் இன்றி, ஒரே கருத்துப் பரிமாற்றம், எனக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரு உள்ளார்ந்த விருப்பம், எதிராளை பாராட்டுதல், ஊக்குவித்தல், இப்படியான நோக்கம் அமைந்து, சமூக இணையதளங்களில் கலந்திருக்கிறோம். ஒவ்வொருநாளும் முடிவின்றி அது தொடர்கின்றது.

நாம் இங்கே, நட்பாக இணைந்திருக்கிறோம். எத்தனை ஆண்டுகால நட்பில் நெருங்கி உறவினர்கள் போலான நெருக்கத்தையும் பெற்றிருக்கிறோம். நேராகவும் பார்த்து, எந்த வித்தியாசமும் இன்றி பழகுகிறோம். அன்பு பாராட்டுகிறோம். அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்தும் கொள்கிறோம். அதுமட்டுமே, மகிழ்ச்சி, பூரிப்பு, சந்தோசம், கவலை, துக்கம், சினம், வெறுப்பு, சிரிப்பு, மெல்லிய நகைச்சுவை, கேலி, கிண்டல் இப்படி எல்லா உணர்வுகளையும் கூட பகிர்ந்துகொள்கிறோம். பிடிக்கவில்லை என்றால் கண்டிப்பும் காட்டுகிறோம். அதை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் பிளாக்செய்து நீக்கியும் விடுகிறோம், நீங்கியும் விடுகிறோம்.

நமக்கென்று இருக்கின்ற, இருந்த பிரச்சனைகளில் சிக்கினாலும் கூட தனித்து நின்று, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதைச்சொல்லி புலம்பாமல், இன்னொருவரையும் கஷ்டப்படுத்தாமல், பேஸ்புக் சமூக குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழந்தால் பரிதவிக்கிறோம், அஞ்சலி செலுத்துகிறோம். அவர் ஆன்மா சாந்தியடைய இறையை வேண்டுகிறோம். ஒரு குழந்தை பிறந்தால் மகிழ்கிறோம். அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். நண்பர்களின் பிறந்தநாளில் நாமும் குதூகலம் அடைகிறோம். 

ஒருவருக்கொருவர் வேற்றுமையில் ஒற்றுமை என்று சொன்னால் மிகப்பொருத்தம். பால்பேதம் அற்றும்கூட பழகுதல் இங்கேதான் சாத்தியமாகிற்று என்றும் சொல்லலாம்.

அதுபோக உலகில் நாம் காணும், வஞ்சம், பழிவாங்குதல், ஏற்றத்தாழ்வு, மதியாதிருத்தல் அனுபவங்களும் கூட லேசாக உண்டுதான் எனினும் அவர்களை எளிதாக விலக்கியும், கடந்தும் வந்திருக்கிறோம். நட்பு எண்ணிக்கை அதிகம் ஆகிவிட, அரசியல் மேடையாகிப் போனது என்பது சோகம் தான். எனினும் அவர்களோடு நட்பை முறித்துவிடவில்லையே?! இங்கே இதுவரை சொன்ன எல்லாமே இன்னமும் தொடர்கிறதுதான். எனினும்... ஏதோ ஒன்றை விட்டுவிட்டு கலந்திருக்கிறோம் என்று மனம் உறுத்துகிறது. அது என்ன?

ஒரு நட்பாக நாம் இங்கே இணைந்திருந்தாலும், ஓவ்வொருவராக இழந்துகொண்டும் வருகிறோம், காலத்தால், அவர்களின் வயதால், உடல் பிரச்சனைகளால், பொருந்தாத சூழ்நிலைகளால்! அப்படியான சூழல் நம்மை சூழ்ந்துவிடுவதற்கு முன்னால், எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நாம், நம்மை யார்? என்று அறிவதற்கான பகிர்வை பகிர்ந்தோமா? அதுகுறித்து உண்மைகளை அறிந்தோமா? என்றால் இல்லைதானே?

ஒரு மனிதனாக, இந்த உலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து, நட்பாகி, அனுபவித்து, பகிர்ந்து, பெற்று வாழ்ந்து மறைவது மட்டுமா? இந்த பிறப்பு ஏன் நிகழ்ந்தது? பிறப்பில் ஏதேனும் கடமை இருக்கிறதா? நோக்கம் இருக்கிறதா? மனிதனானவன் யார்? நான் யார்? பிறக்கும் முன் எங்கிருந்தேன்? எங்கே போகப்போகிறேன்? அவ்வளவுதானா? வேறேதேனும் உண்மை உள்ளதா? கடவுள் உண்டா? இல்லவே இல்லையா? இருந்தால் எப்படி இருக்கிறது? இல்லையென்றால் எப்படி நிரூபணம் செய்வது?  மிதக்கும் உலகை தாங்கிப்பிடிப்பது யார்? அது இயற்கை என்றால் இயற்கை என்பது என்ன? இப்படி பலவாறாக கேட்டுக்கொண்டோமா? அதை மற்றவர்களிடம் கேட்டோமா? பதில் அறிய முயற்சித்தோமா? தெரிந்த பதிலையாவது சொன்னோமா? என்ற கேள்விகள்தான் என்னுடைய மனதை உறுத்துகிறது.

இங்கே நான் ஏதோ எனக்கு தெரிந்த வழியில் சொல்லுவதாக நினைக்காமல், இதே பதிவையே நீங்கள் எழுதியதாக நினைத்து, உங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கலாம் என்பதும், பகிர்வுகள் இல்லாமல் நீங்களாகவே தேடிக்கொள்ளலாம் என்பதும் என்னுடைய விருப்பம்.

ஒருவேளை இந்த மாற்றத்திற்கான விதையை நானும் விதைக்காமல் போனால், இதை, இப்படி ஒரு திருத்தத்தை, வழியை, யோசனையை, இப்படியும் ஒரு வாழ்கைக்கான நோக்கமும் பாதையும் உண்மையும் இருக்கிறது என்றுகூட சொல்லாமல் ஏமாற்றிவிட்டானே என்று நீங்கள் சொல்லக்கூடும். ஏமாற்றியதற்காக நானும் ஏதோ ஒருநாளில் வருந்தக்கூடும். சரிதானே?!

இன்றோ, நாளையோ, எதாவது ஒருநாளோ, இனி நம்மை அறிந்து உணர விருப்பம் கொள்ளலாமா? யோசித்து முடிவெடுங்கள்! இதெல்லாம் ஆகாத வேலை என்றால் கடந்தும் விடலாம், தவறில்லை. நமக்காக வேறு யாரேனும் ஒருவர் நம் குடும்பத்திலேயே பிறவி வழியாக பிறந்து வந்து நம் கடனையும் சேர்த்து அவரின் கடன் தீர்ப்பார் என்பதுதான் உண்மை!

-