Home » Archives for February 2025
Is death the only freedom from pleasure and pain? Or is it possible to be liberated while alive by some other means? Give an explanation.
February 02, 2025 Sugumarje
வாழ்க வளமுடன் ஐயா, இறப்பு என்பதுமட்டும் தான் இன்ப துன்பங்களில் இருந்து விடுதலை தருகிறதா? அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலம், வாழும்பொழுதே விடுதலை பெறமுடியுமா? விளக்கம் தருக.
We who live on this earth become attached to everything and are trapped in material life. Is there any way to change this? How can we bring about that change?
February 01, 2025 Sugumarje
வாழ்க வளமுடன் ஐயா, இந்த பூவியில் வாழும் நமக்கு எல்லாவற்றின் மீதும் பற்று வந்து, பொருளியல் வாழ்வில் சிக்கித்தவிக்கிறோமே? இதில் ஏதேனும் மாற்றம் காண வழியுண்டா? எப்படி அந்த மாற்றத்தைக் கொண்டுவரலாம்?
நல்ல கேள்வி. ஆனால், இந்த கேள்வியும், அதற்கான ‘வழக்கமான பதிலும்’ பலருக்கு கோபத்தை, சினத்தை உண்டு செய்யும். அதனால், சில விளக்கங்களை மட்டும் இங்கே அறிந்துகொள்ளலாம். அதற்கான பதிலை நீங்களே அறிந்து கொள்ளலாம். நான் தனியாக பதில் சொல்ல தேவையில்லை. முதலில் என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதில் தரவேண்டும்.
உங்கள் வாழ்வு எத்தகையது? கூட்டுக் குடும்பமா? தனிக்குடும்பமா? தனியாளாக இருக்கிறீர்களா? அரசாங்க வேலையா? தனியார் நிறுவன வேலையா? சொந்த தொழிலா? வியாபாரமா? நல்ல படிப்பும், அனுபவமும் உள்ளவரா? வேலைகளோடு நீங்கள் பொருந்தி இருக்கிறீர்களா? போதுமான வருமானம் உள்ளதா? சேமிப்பு செய்கிறீர்களா? கடன் தொல்லை இருக்கிறதா? வசிப்பது கிராமமா? நகரமா? தலை நகரா?
இந்த கேள்விக்கான பதிலும், விளக்கத்தை தர துணையாக இருக்கும். எப்படி தெரியுமா? இந்த உலகில் வாழும் எல்லா மனிதருக்கும், பொருளியல் நிலை என்றவகையில், முழுமை அல்லது நிறைவு இருக்கவேண்டும். அந்த நிலை வராமல், பொருள் பற்று குறையாது. எல்லாம் இருந்தும்கூட, இன்னமும் வேண்டும் என்று வாழ்வது அவரின் அறியாமை.
பசியை அடக்கிட, உணவு உண்கிறோம், பசி தீர்ந்தால்தான், அடுத்து உணவு குறித்த எண்ணம் எழாமல் இருக்கும். அதுபோலவே, பொருளியலில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாமல், அதில் திருப்தியையும், போதும் என்ற மனநிலையை உருவாக்கிட முடியாது. மேலும், இந்த உலகில் வாழும் வரை, பொருள் ஈட்டுதலை, பொருள் சேமிப்பை. பொருளின் பயன்படுத்துதலை உதாசீனம் செய்திடவும் முடியாது. அந்த பொருள் இன்றி, நாம் உலகில் வாழவும் முடியாது.
ஆனால், விழிப்புணர்வு எங்கே வேண்டும் என்றால்? இந்த அளவில் போதும் என்று நிறைவான மனம் கொள்ள வேண்டும். அதுவரை நாம் முயன்று நேர்வழியில், பொருள் ஈட்டியே ஆகவேண்டும். பரம்பரை வழியாக எல்லாம் இருந்தாலும், உங்கள் அளவிலும் அதை நிறைவு செய்து கொள்வதுதான் நல்லது ஆகும்.
இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கடைசி மூச்சுவரை, பொருளை தேடிக்கொண்டே இருந்தால், இருப்பதையும், பெற்றதையும், கிடைத்ததையும் உதாசீனம் செய்கிறோம் என்று அர்த்தமாகிறது. அந்த நிலைமைக்கு நாம் செல்லக்கூடாது. என்வாழ்வில், எனக்கு, இந்த அளவு போதும் என்ற நிலைக்கு, உயரவேண்டும்.
பொதுவாகவே மனிதனுக்கு அறியாமை உண்டு. சிறிய சங்கிலி, யானையின் காலில், சுற்றப்பட்டு ஒரு சிறிய கல்லோடு இணைத்து இருந்தால், அந்த யானை, தன்னால் எங்கும் ஓட முடியாது, இந்த சங்கிலியை தன்னால், கழற்றிட முடியாது. அந்த கல்லை எடுத்து வீச முடியாது என நினைக்குமாம். அதுபோல பொருளிலும் பொருளியல் வாழ்விலும் மனிதன் சிக்கிவிடக்கூடாது. பார்ப்பதெல்லாம் பெரிது, கடினம், என்னால் முடியாது, எனக்கு அவசியமில்லை என்பது, மாற்றத்தை எதிர்நோக்கி வாழாத, வாழ முடியாத தன்மையாகும்.
என் பிறப்பைவிட வாழ்வு பெரிது, வாழ்வை விட பணமும் பொருளும் பெரிது என்று நினைப்பது முற்றிலும் அறியாமை. பிறப்பின் உண்மையும், நோக்கமும் மறந்த செயல்பாடாகும். இப்படி அறியாமையில் இருப்பவர், அதே தன்மையிலேயே வாழ்ந்து, மடிந்தும் போகிறார்கள் என்பது சோகம். இதை, வரும்போது எதுவும் கொண்டுவந்ததில்லை, போகும்பொழுது ஏதும் கொண்டுபோவதுமில்லை என்ற மூத்தோர் மொழிவழக்கில் திருத்துவார்கள். ஆனால் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.
பொன்னும், பணமும், பொருளும் பெரிதென மதிப்போர்க்கு, வாழ்வும் பூமி பெரிதென தோன்றலாம். ஆனால் அந்த பூமி எவ்வளவு சிறிது என்பதை, வெளியே இருந்து பார்த்தால்தான் தெரியும். இதோ இந்த ஒளிப்படம் காணுங்கள். சனி கிரத்தின் ஓரத்தில் இருந்து பூமி எப்படி தெரிகிறது? பூமி உண்மையிலேயே பெரிதா? பூமியே இத்தனை சிறிதாக இருந்தால், மற்றதெல்லாம்?
Source: Hashem Al-Ghaili |
இப்படியாக, இந்த சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலம், அதுபோல பலப்பல அண்டங்கள், இவை எல்லாம் அடங்கிய பிரபஞ்சம் என்று இங்கிருந்தவாறே மனதை விரித்தால், பூமி எத்தனை சிறியது என்பது நமக்கு புரியவரும். அப்படியானால்? நாம் மதித்து போற்றி வாழும், பொன்னும், பொருளும், பணமும் எத்தகையது? சிந்தனை செய்துபார்க்கலாம். அதன் வழியாக ஏதேனும் புது சிந்தனை உங்களுக்கு எழுந்தால், என்னிடம் தெரிவியுங்கள்.
வாழ்க வளமுடன்.
-