இந்தியநாட்டில்தான் இப்படி யோகம், கர்மா, பிறப்பு நோக்கம், கடமை, வழிபாடு அது இது என்று இருக்கிறது. வெளிநாட்டு மக்கள் இதில் தப்பிவிடுகிறார்கள் அல்லவா? உண்மை என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்தியநாட்டில்தான் இப்படி யோகம், கர்மா, பிறப்பு நோக்கம், கடமை, வழிபாடு அது இது என்று இருக்கிறது. வெளிநாட்டு மக்கள் இதில் தப்பிவிடுகிறார்கள் அல்லவா? உண்மை என்ன?
பதில்:
முகம் மலர்ந்த சிரிப்போடு இந்த கேள்வியை வரவேற்கிறேன். நல்ல கேள்விதான். ஆனால் இதில் மிகப்பெரிய பிழை இருப்பதை அறியாமலேயே நீங்கள் கேட்டுவிட்டீர்கள். தவறில்லை. நாம் உண்மை என்ன என்று அலசி ஆராய்ந்துவிடலாமே?
இப்போது நாம் ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்கு போய்விடலாமா? நார்வே (Norway) என்ற நாட்டை தேர்ந்தெடுத்து ஓஸ்லோ என்ற நகரத்திற்கு (Oslo) பயணித்துவிடலாம். இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் இருந்து கிட்டதட்ட 7700km தூரம் இருக்கிறது. விமானத்தில் செல்ல 13Hr நேரம் ஆகலாம். பயணச்சீட்டிற்கு 60k ஆகலாம். நாம் எண்ணித்தின் வழியாக செல்வதால் ஒரு செலவும் இல்லை. இன்றைய நாளில் அங்கே, கால நிலை, குறைபனி -2 என்று சொல்லுகிறார்கள் (March 13'2024). அங்கே வாழ்கின்ற மக்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள்? அங்கே காற்று இருக்கிறது. தினமும் ஒரு நாளில், நாம் காண்பதுபோலவே சூரியனின் வெளிச்சம் இருக்கிறது. ஆனால் வெப்பமில்லை. சந்திரன் ஒளிர்கிறது. காலையும் உண்டு, இரவும் உண்டு. அங்கே வாழும் மக்களுக்கு உடலும் உண்டு, குடலும் உண்டு, மனமும் உண்டு. பசி எடுக்கும் சாப்பிடுவார்கள். மனமிருப்பதால், வாழ்க்கையின் இன்பம் துன்பம், மகிழ்ச்சி வருத்தம், கவலை, சினம் வந்துகொண்டுதான் இருக்கும். காதலும் உண்டு, காமமும் உண்டு, திருமணமும், இணைந்த குடும்ப வாழ்க்கையும் உண்டு, அதில் பிரச்சனைகளும், சண்டைகளும் உண்டு, பிரிவும் உண்டு,
தங்கள் வாழ்க்கையையும், குழந்தையின் எதிர்காலத்தையும் திட்டமிட்டு உழைப்பார்கள், பணமும் பொருளும் சம்பாதிப்பார்கள். உழைப்பின் மிகுதியால் சோர்வும், அசதியும், தூக்கமும் வரலாம். குளிரை தாங்கமுடியாமல், சூடாகவும், சூட்டை ஏற்படுத்தி தாங்கிக்கொள்ள, அவர்கள் புகைக்கலாம், மதுபானங்கள் குடிக்கலாம். காய்கறிகள் சாப்பிடலாம். மாமிசம் மட்டுமே முழுநேர சாப்பாடாகவும் இருக்கலாம். அது அந்த நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாச்சாரம். அதன்வழியே இன்பமும் வரலாம் துன்பமும் வரலாம், பிரச்சனைகளும், நோய்களும், பெரும் செலவும் வரலாம்தானே? குணப்படுத்தலாம், அதுமுடியாமல் இறக்கவும் நேரலாம்.
ஆக அங்கேயும் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. சிலருக்கு இறை வழிபாடு இருக்கலாம். யாருக்குமே நம்பிக்கையின்றி அதில் ஏமாற்றமும் இருக்கலாம். எனினும் தெய்வீகம் என்ற மெய்ப்பொருள் அதன் இயல்பில் மாறிக்கொள்வதில்லை. அவர்களும் நாம் வாழும் பூமியில் தான் இருக்கிறார்கள். வேறெரு கோளிலோ, கிரகத்திலோ இல்லை. அவர்களுக்கும், காலநிலை, பருவமாற்றம் எல்லாமும் உண்டு.
அவர்கள் எதைச்செய்தாலும் நல்லவிளைவுகள் மட்டுமே வருமா? விளைவறிந்து தான் எதையுமே செய்வார்களா? உணர்ச்சியும், சிந்தனையும், நோக்கமும் எப்போதும் நேர்மையாக தெளிவாக இருக்குமா? சினம், கோபம் என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பார்களா? தங்களுக்குள் தாக்கிக் கொள்ளாமல், மரியாதையாக நடந்துகொள்வார்களா? எப்போதும் அன்போடும், நட்போடும், கருணையோடும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்களா? இப்படியாக எத்தனையோ கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?
இவ்வளவு இருக்கும் பொழுது எப்படி அவர்கள், மனிதப்பிறவியின் நோக்கத்தில் இருந்தும், மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தில் இருந்தும் தப்பிவிடுகிறார்கள் என்று கருதுகிறீர்கள்? உங்கள் பார்வைக்கு ஒரு உண்மை தெரியவில்லை என்றால் அது இல்லவே இல்லை என்று கருதிவிட முடியுமா? எங்கும் நிறைந்துள்ள, உலகையும், சந்திரனையும், சூரியனையும், அவைகளைப்போல பலதுமாக இருக்கும் கிரங்களையும், நட்சத்திரங்களையும், மண்டலங்களையும் மிதக்கவிட்டு, தாங்கிக்கொண்டிருக்கும் அந்த மெய்ப்பொருளை, கண்ணால் பார்க்கமுடியவில்லை என்பதால், இல்லை என்று சொல்லுவது பொருந்துமா?
இதுபோலவே, நாமும் பிறமக்களும் வாழும், இந்த பூமியில் இருக்கின்ற எந்த ஒரு வெளிநாட்டையும், மனிதர்களையும் சிந்தித்துப்பாருங்கள். உங்களால் முடிந்தால் கடல்கடந்து, வான்கடந்து சென்று, நேரிலே, நிஜமாக அவர்களோடு பேசி பழகி கேள்விகள் கேட்டு, உண்மையை அறியுங்களேன்.
மனிதனின் மூலம் என்ன? அவன் யார்? என்பதை தானாகவே அறியும் வழிதானே ‘கடவுள்’. அதை உலகில் பிறந்த ஆறாவது நிலை அறிவைக்கொண்ட மனிதன் அறியவேண்டும் என்பதுதானே அந்த பரிணாமத்தில் பொதிந்துள்ள உண்மை. அதை மறந்து, மறுத்து வாழ்ந்துவிட்டால், தப்பிப்பதாக அர்த்தமா?
அப்படித்தானே நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்தார்கள், இன்னும் சிலர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாமும் இந்த முயற்சியை விட்டுவிடலாமா? இருக்கும் நவீன விஞ்ஞான அணுவியல் கருவிகளை அனுபவித்துக்கொண்டு, உண்டு, உறங்கி, எழுந்து, வாழ்ந்து மடிந்து போகலாமா? அப்படியானால், நமக்கும் நமக்கு கீழான உயிரினங்களுக்கும் என்ன வித்தியாசம்?
உங்கள் பார்வையை மாற்றி, வெளிநாட்டு மக்களை, உள்நோக்கி அவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். உண்மை தானாகவே உங்களுக்கு புரியும். அவர்களும் விதிவிலக்கல்ல. உலகில் எந்த மனிதர்களுமே விதிவிலக்கல்ல. அவர்கள் உங்களைவிட, யோகம் குறித்த உண்மையை அறியாது இருக்கலாம் அல்லவா? உங்களால் முடிந்தால், அவர்களை, அவர்களின் மனதின் தரத்தை இன்னும் உயர்த்தலாமே? அப்படியொரு உயர்ந்த வேலையும், பொறுப்பும் சக மனிதாகிய உங்களுக்கும் இருக்கிறதே? யோகத்தில் உயர்ந்த பிறரைப்போல நீங்கள் உயரவேண்டும் என்று நினைப்பது போலவே, அவர்களுக்கும் வழிகாட்டலாமே? சிந்தித்துப் பாருங்கள்.
வாழ்க வளமுடன்
-