Sugumarje, write the notes on daily life. He is well known as a caricature artist, live entertainment artist, writer, poet, yoga master, theology researcher, spiritual teacher, podcaster and youtuber. Founder of SEREVIYO.
வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒருநாள் திடீரென, தீட்சை எடுத்துக்கொண்டு, தவம் கற்றுக்கொண்டேன். ஆனால் தொடர்ந்து என்னால் செய்யமுடியவில்லை. என்னுடைய வாழ்க்கை சூழ்நிலை சரியில்லை, அமைதியான இடமும் இல்லை. அப்படியே விட்டுவிடலாமா? வேறு என்ன வழி? விளக்கம் தருக.
எல்லோருமே, தீடீரென ஒருநாள் தான், மாற்றத்தையும், உண்மையையும் உணர்ந்து, இனியாவது, வாழ்வில் திருத்தம் பெறவேண்டும் என்று, குருவை நாடி சரணடைகிறோம் என்பதுதான் உண்மை. நாம் தேர்ந்தெடுத்தது எதுவேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் குருவை நாடினால், அவரின் வழிகாட்டுதல் எந்தவகையிலும் நமக்கு துணை நிற்கும் என்பது உறுதி.
நீங்கள் மனவளக்கலை அன்பர் என்றால், உங்களுக்கான அடிப்படை பயிற்சிகள் போதுமானது. அதை உங்கள் வாழ்நாள் முழுவதுமே கடைபிடிக்கும் வகையில்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்திருக்கிறார். அந்த நிலையில் இருந்து நீங்களாகவே, உயர வேண்டும் என்று தீர்மானித்தால், அதற்கு அடுத்த பயிற்சிகளில் நீங்கள் இணைந்து, அகத்தாய்வு, பிரம்மஞானம், அருள்நிதி என்ற வகையில் உயரலாம். அது உங்கள் விருப்பம் மட்டுமே தவிர, கட்டாயம் இல்லை.
பொதுவாகவே, நீங்கள் சொல்லுவது போல, சிலர் தொடர்ந்து செய்வதில்லை. ஏதோ வாரம் ஒருநாள், மாதம் ஒருநாள் என்றுதான் போகிறது. காரணம், நீங்கள் சொன்ன அதே வாழ்க்கை சூழ்நிலைதான். இந்த பொருள்முதல்வாத உலகில், எல்லோருக்குமே நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரம் உறங்கி எழுவதற்கு கூட போதாமல் இருக்கிறதுதானே? வேறுவழியும் இல்லை.
ஆனால், இந்த உழைப்புக்கும், ஓட்டத்திற்கும் நம்முடைய உடல், மனம், உயிர் ஈடு கொடுக்க வேண்டுமே? அது முக்கியமாயிற்றே? அதற்கு வழி என்ன? அதற்குத்தான் இருக்கிறது வேதாத்திரிய மனவளக்கலை. அதனால், ஏதேனும் ஒரு வகையில் அரைமணியோ, ஒருமணியோ நேரம் ஒதுக்கி, பயிற்சி மற்றும் தவம் செய்ய முறைப்படுத்திக் கொள்ளவேண்டும். அது மிக மிக அவசியம். எனவே இன்றே திட்டமிடுங்கள்.
இந்த காணொளியும் உங்களுக்கு உதவக்கூடும்.
தீட்சை எடுத்துக்கொண்ட பிறகும் தவம் செய்யாமல் தவிர்க்கலாமா? #vethathiriyayoga #meditation #thavam
ஐயா, கிரகங்கள் எப்படி மனிதனின் பாவப்பதிவுகளை, கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறது? அது நம்பமுடிவதாக இல்லையே? மனிதனாகிய நமக்கும் கிரகங்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? ஏதோ கட்டுக்கதை போல இருக்கிறதே? வாழும் மனிதனை முடக்குவது போலத்தானே இந்த கிரகங்கள், கோள்கள், நட்சத்திரம், ஜாதகம் என்பதெல்லாம் இருக்கிறது? சரிதானே?
உங்களைப்பொறுத்தவரை அது சரி என்றே வைத்துக்கொள்க. ஆனால், அது பொய் என்றால், நீங்கள் ஆராய்ந்தீர்களா? விஞ்ஞான அறிவோடு, மற்றவர்களோடு கலந்து, சில வானியல் ஆராய்ச்சியாளர்கள், ஜோதிட ஆய்வாளர்கள் இவர்கள் தரும் கருத்துக்களையும் உள்வாங்கி ஆராய்ந்து முடிவு கண்டீர்களா? நீங்களே ஏன் ஜோதிடம் படித்து அதன் உண்மைதன்மையை அறிய முயற்சிக்க கூடாது? அட அது பொய்தான் என்று நிரூபணம் செய்வதற்காக படிக்கலாமே?
உங்கள் விஞ்ஞானத்தின், வானியல் ஆராய்ச்சியாளர், Brain Cox என்பவர், மனிதன், நட்சத்திரங்களில் இருந்து வந்தவன் என்கிறாரே? அது சரியா? மனிதனின் மூலம், நட்சத்திரங்களிடம் உள்ளது என்றும் அவர் சொல்லுகிறாரே? அது குறித்தாவது சிந்தனை செய்தீர்களா?
வழக்கமாகவும், ஏற்கனவே சொன்னது போலவும், இங்கே ஒன்றை சொல்லுகிறேன். நீங்கள் வாழ்வது ஒரு பூமியில். இந்த பூமி ஒரு கிரகம் என்பதை நம்புகிறீர்களா? இல்லையா? இது வான்வெளியில், சூரிய குடும்பத்தில் உள்ளது என்பது தெரியுமா? மிதந்து சுழன்று, உருண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?
தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அன்றுவந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா! அது உண்மைதானே? நீங்களும் நானும் பார்க்கும் நிலா என்ற சந்திரன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்து நிற்கிறது அல்லவா? நமக்குப்பிறகும் அது நிற்கும். அது தன்னுடைய ஒளியை, ஆற்றலை, அலைகளை பூமிக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கும். பாதிப்புக்களை தந்துகொண்டுதான் இருக்கும். அதை இந்த பூமியும், மனிதர்களும், உயிர்களும், பொருட்களும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கும் அல்லவா? இல்லை என்று மறுப்பீர்களா? உங்களுக்கு தெரியவில்லை என்பதால், இல்லை என்று மறுப்பது சரியாகுமா?
ஜோதிடம் ஒரு வழிகாட்டி. அப்படியாக புரிந்து கொள்ளாமல், அதை நம்பி முடங்கிக் கொள்வதுதான் முட்டாள்தனம். ஆனால், எனக்குப்பிடிக்காது என்று அதை அறியாமல், புரியாமல் ஒதுக்கித்தள்ளுவது அதைவிட கீழானதுதான். வேப்பங்காய் கசக்கும் பிடிக்காது என்றால், அதை நீங்கள் மருந்தாகவும் உட்கொள்ள முடியாது அல்லவா?
எனவே, இப்பொது உங்களுக்கு தேவை, புரிந்துகொள்வது முக்கியம். அதை உங்கள் அறிவால் ஆராய்ந்து பாருங்கள். அதில் ஏமாற்றம் வந்தால், பிறகு உங்கள் நிலைபாட்டை தொடரலாம். அது உங்கள் விருப்பம். இந்த காணொளி சில உண்மைகளை உங்களுக்குத் தரலாம்.
உங்கள் ஜாதகம் அதன் கிரக நிலைகள் உங்களுடைய பாவப்பதிவு கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறதா? #astrology
வேதாத்திரியம் எந்த வகையில் வாழ்க்கைக்கு துணை நிற்கிறது? அப்படியென்ன அதில் சிறப்பு இருக்கிறது? ஏற்கனவே பலரும் சொன்ன ஆன்மீக உண்மைகளின் தொகுப்புத்தானே? அதை வேதாத்திரியம் என்று சொல்லிக் கொள்வது எப்படி சரியாகும்? மக்களை ஏமாற்றுகிறீர்களா?
இந்த கேள்வியை வரவேற்கிறேன். வேதாத்திரியம் குறித்து சராசரி பதிவாக சொல்லுவதற்கு மாறாக, இப்படியான கேள்விக்கு பதில் தரும்பொழுதுதான், சிறப்பான உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். வேதாத்திரியம் என்பது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, தன்னுடைய முப்பத்தைந்து வயது முதல், தொன்னூற்றி ஆறு வயது வரை, உலக மக்களை, ஆன்மீகத்தில் உயர்வடையச் செய்து, இன்பம், பேரின்பம், அமைதி என்ற வகையில் வாழ்வதற்கு வழிவகை செய்தவர் ஆவார். இன்னமும் அவருடைய சேவை, என்னைப்போன்ற ஆசிரியர்களால் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
நீங்கள் சொல்லுவதுபோல, ஆன்மீக உண்மைகள் பல, இந்த உலகில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் சிதறிப்போய், உண்மை பலவாறாக திரிந்து போய்விட்டது. காரணம் எடுத்துச் சொல்லுபவர்கள், படித்திருக்கிறார்களே தவிர, உணர்ந்தறிந்தவர்கள் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்கள், மிகக் குறைவே. இதனால், யார் யாரோ, ஆன்மீகத்தின் வழியாக, உண்மை சொல்கிறேன் என்று, ஒப்பித்து, மக்களை, குறிப்பாக உங்களை ஏமாற்றிவிட்டார்கள். இந்த கேள்வி கேட்கும் நீங்களே ஏன் இந்த சேவையை, மக்களுக்குத் தரக்கூடாது? உங்களுக்குத்தான், பலரும் சொன்ன ஆன்மீகத்தின் தொகுப்புக்கள் குறித்த விபரங்கள் தெரிந்திருக்கிறதே? அந்த தகுதி போதுமே? அதைவிட்டுவிட்டு, வேதாத்திரியத்தை குறை சொல்வானேன்?
பக்தி, ஆன்மீகம், விஞ்ஞானம் என்று திசைக்கொன்றாக, பிரிந்துபோய், உண்மையறியாமல், வாழ்க்கைச்சூழலில் சிக்கித்தவித்த மக்களுக்கு, விளக்கம் அளித்திடவே, தான் அறிந்த மெய்ப்பொருள் உண்மையை விளக்கிட, உலக சமுதாய சேவா சங்கம் என்பதை துவங்கி, தன்னுடைய பயிற்சிகளை, முப்பத்தைந்து வயதிலேயே தொடங்கிவிட்டார். கவனிக்கவும், மெய்பொருள் உண்மையை நன்கு விளங்கிக் கொண்ட பிறகுதான். ஏதோ படித்தோம், பகிர்வோம் என்றில்லை.
தன்னுடைய அனுபவ விளக்கத்தை, மிகத்தெளிவாக வேதாத்திரி மகரிஷி பதிவு செய்கிறார். பக்தி கடந்த உண்மையே ஞானம் என்று வலியுறுத்துகிறார். எனினும் பருவத்திற்கு முன்பு வரை, பக்தி அவசியம் என்றும் சொல்லுகிறார். பருவம் வந்த அனைவருமே, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் தத்துவம் அறிந்து கொள்ள பயிற்சி வடிவமைத்தார். சித்தர்களின் வெட்டவெளி தத்துவத்தை, வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறறிவு, காலம் என்ற வளம் கொண்டதாக தெரிவிக்கிறார். காந்த தத்துவத்தையும், பிரபஞ்ச பரிணாமத்தையும், உயிரின பரிணாமத்தையும், உங்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டும் விளக்குகிறார். நான் யார்? என்ற கேள்விகான விடையை அறியத்தருகிறார். உண்மையை அறிய திணறும் விஞ்ஞானத்திற்கு, வழியும் காட்டுகிறார். அவ்வுண்மைகளை, உலக விஞ்ஞானிகள் கூட்டத்திலும் பகிர்ந்திருக்கிறார்.
நீங்கள் உங்கள் அறிவில், எல்லாம் ஏற்கனவே இருப்பதுதானே? இருந்தது தானே? என்று நினைத்தால் அது உங்களின் அறியாமை. எனினும், வேதாத்திரியத்தில் இணைந்து, இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் அழைக்கமாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்களின் உரிமை. ஆனால், விளக்கத்தை உங்களுக்குச் சொல்லவேண்டியது என்னுடைய கடமை. இங்கே ஒரு அன்பரின் வாழ்க்கை அனுபவ குறிப்பு காணொளி பதிவு, மற்றொரு புரிதலை உங்களுக்குத் தரலாம்.
உறவுகளோடு இனிய வாழ்க்கைக்கு வேதாத்திரியம் - pleasant life with relatives by Vethathiriyam
வாழ்க வளமுடன் ஐயா. என்னுடைய வாழ்க்கைத்துணை ஏன் என்னோடு முரண்பாடு கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தினமுமே ஒரு பிரச்சனை உண்டாகிறது. எங்கள் இருவருக்குள்ளும் சமாதானம் கிடைப்பதே இல்லை. இது எப்படி தீரும்? மூன்றாம் மனிதர் வந்துதான் தீர்த்துவைக்க முடியுமா? விளக்கம் தருக.
இல்லறம் என்பது நீண்ட கால தொடராக வரும் நிகழ்வு. ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்ற வகையில் வாழ்க்கைத்துணை அமைவதும் இயற்கையின் உன்னதம். யாருக்கு யார் என்பதும் ரகசியமாகவும் இருக்கிறது. நாமே விரும்பி காதல் கொண்டு, திருமணம் நிகழ்த்தி, இல்லற வாழ்வை தொடங்கினாலும்கூட, அதில் இயற்கையின் பங்கு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இல்லறமே சமூகத்தின் வளர்ச்சி நிலை என்று இருந்தாலும், சிலருக்கு திருமணம் தள்ளிப்போவதும் உண்டு, நிகழாமல் போய்விடுவதும் உண்டு. இதற்கும், நாம் அறியாத காரணம், நம்மோடு தொக்கி நிற்கிறது.
இல்லறம் என்பதின் நோக்கம், ஒருவரை ஒருவர் காத்துக்கொண்டு, அதன் வழியாக வாரீசுகளை உருவாக்கி, நிறைவாக வாழ்தல் ஆகும். இதில் வாழ்க்கைத்துணை என்பவர், நமக்கு சமமாக எப்போதும் அமைவதே இல்லை. நம்மைவிட உயர்வான, குறைந்த அறிவு, அனுபவ நிலை இதோடு கர்மா என்ற வினைப்பதிவு தாக்கமும், அதற்கான தீர்வும் என்றுதான் அமைவதுண்டு. ஒருவகையில் என்னிடம் இருக்கும் குறைகளை அவர் நிவர்த்தி செய்வார், அவரிடம் இருக்கும் குறைகளை நான் நிவர்த்தி செய்வேன் என்ற வகையில்தான், வாழ்க்கத்துணை அமைகின்றார். வெளிப்படையாக நமக்கு இது தெரியாவிட்டாலும்கூட, உள்ளாக இந்த ஏற்பாடுதான் இயற்கையால் அமைக்கப்படுகிறது.
இந்த ஏற்ற இறக்கம், உயர்வு தாழ்வு, பகிர்வு, சமன் செய்தல் என்பதை அறியாமல், என்னை திருத்துகிறாயா? என்று நாம் கேட்பதும். நீ சொல்லித்தான் நான் திருந்தவேண்டுமா? என்று முரண்படுவதும் அவசியமில்லை. கணவன் மனைவிக்குமான இல்லறத்தில் இன்பம் நிலைத்திருக்க, வேதாத்திரி மகரிஷி தரும் மூன்று முக்கியமான வழிமுறை 1) பொறுமை 2) விட்டுக்கொடுத்தல் 3) தியாகம் என்பவனவாகும். நான் இதையெல்லாம் செய்யமாட்டேன் என்று, கணவன் மனைவி இருவரும் முடிவெடுத்தால்? இல்லறம் எப்படி சிறக்கும்?
இருவரும் சண்டை போட்டுக்கொள்வது போல, அமைதியாக உட்கார்ந்து, ஏன் இப்படி நாம் சண்டை போடுகிறோம்? கடினமாக பேசிக்கொள்கிறோம் என்றும் விளக்கமாக கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், யார் இதை முதலில் ஆரம்பிப்பது என்றுதான் நாம் தள்ளிவைத்து, சண்டையை தொடர்கின்றோம் அல்லவா? நமக்குள்ளாக இருக்கும் பிரச்சனையை, எளிதில் நாமாகவே தீர்த்துக் கொள்ளமுடியும். மூன்றாம் மனிதர் தேவையில்லை. தேவையில்லாமல், அவருடைய பிரச்சனைவேறு உங்களோடு கலந்து, இன்னும் அதிகமாகலாம். உலக நாடுகளே சமாதானம் நோக்கி நகர்கையில், இரு நபர்கள், இல்லறத்தில் சமாதான தீர்வு காணமுடியாதா? நிச்சயமாக முடியும்.
வாழ்க வளமுடன் ஐயா, நவக்கிரக தவம் செய்தால், அது எப்படி நன்மை தருகிறது? ஜாதகத்திற்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா? இந்த தவம் ஒருவகையில் பரிகாரமாக செயல்படுமா? உண்மை என்ன? விளக்குக.
மனிதனின் பிறப்பு, அவனுடைய வாழ்வின் நோக்கம், அதிலிருக்கும் கடமை இப்படி எதுவுமே அறிந்துகொள்ளாது, பிறந்தோம் வாழ்ந்தோம் போகப்போகிறோம் என்று வாழும் மனித கூட்டம் ஒருபுறம். இறைவனாவது, இயற்கையாவது, கிரகங்களாவது, ஜாதகமாவது ஒன்றாவது, எல்லாமே நம்ம கையில்தான் என்று, தனித்து எல்லாம் அனுபவித்து வாழும் கூட்டம் ஒருபுறம். இவை எதையுமே கண்டுகொள்ளாமல், அடுத்தவரின் வளம் பறித்து தான்மட்டுமே வாழும் கூட்டம் இன்னொருபுறம். இப்படியாக பல்வேறு மனிதக்கூட்டம், நம்மோடுதான் வாழ்ந்து வருகிறது.
இந்த கூட்டங்களோடு, மனிதவாழ்வை உயர்த்திட விரும்பிய, சித்தர்கள், ஞானிகள், மகான்கள் அறிவுரை நாடிச் சென்று, தன்னையும், தன் வழியாக வரும் வாரீசுகளையும் நல்வழிப்படுத்த நினைப்பவர்கள் பலர். இந்த உலகம் இவர்களால்தான், இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. உண்மையை மறுப்பது என்பது வேறு, எது உண்மை என்று அறிந்து கடைபிடிப்பது என்பது வேறு. இந்த இரண்டுக்குமான வித்தியாசம் அறியாதவர்களின் வாழ்க்கைதான், இவ்வுலகில் ஏனோதானோ என்று இருக்கிறது. உண்மை என்னவென்றால், அது குறையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை. அதனால் அந்த மயக்கத்தில் இருந்து அவர்கள் விடுபடவும் வாய்ப்பின்றி வாழ்க்கை முடிந்துவிடுகிறது.
இந்த நிலையில், இப்படியான கேள்வியும், அதை அறிய விரும்பும் ஆர்வமும், மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மனித உயிர்கள் மட்டுமல்ல, இந்த உலகில், நாம் காணும் எல்லா பொருட்களும், உயிர்களும் உருவாகவும், இயங்கிடவும் ஒரு பேராற்றல் துணையாக இருக்கிறது. அதைத்தான் நாம் இறையாற்றல், மெய்ப்பொருள் என்று உயர்வாக சொல்லி வணங்குகிறோம். அந்த ஆற்றல், பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன்கள், சூரியன்கள், கோள்கள் இவற்றோடும் கலக்கிறது. பலவேறு தன்மைகள் கொண்ட அந்த ஆற்றல், நாம் வாழும் பூமியை வந்தடைகிறது. அதை நாம் பன்னிரெண்டு ராசிகளாக அமைத்திருக்கிறோம். அந்த ராசிகளை கடக்கும் கோள்களைக் கொண்டு, அதன் தன்மையை, நமக்கு கிடைக்கும் பாதிப்புக்களை, நன்மைகளை அறிந்து கொள்கிறோம். இது அடிப்படை தாக்கம் அல்ல எனினும் நமக்குள்ளாக தூண்டுதல் நிச்சயமாக இருக்கிறது. அதை ஜோதிட கலை வழியாக கணிக்கிறோம்.
இங்கே பரிகாரம் என்றால் அது நம்மை திடப்படுத்திக் கொள்வதுதானே தவிர தப்பிப்பது அல்ல. ஆனால், இவ்வுலகில் பரிகாரம் பலவகைகளில், பொய்யும் புரட்டும் கலந்து ஏமாற்றம் அளிக்கிறது எனலாம். இந்நிலையில்தான், வேதாத்திரிய பஞ்ச பூத நவக்கிரக தவம், பரிகார தவமாக அமைந்துவிடுகிறது. இங்கே நாம், நம்முடைய ஜாதகத்தை நினைப்பதில்லை. நேரடியாக அந்தந்த கிரகங்களை நினைத்து தவம் இருக்கிறோம். அதன் ஆற்றலோடு கலக்கிறோம். நன்மை செய்ய வேண்டுகிறோம். அதனால் இது பரிகாரமாகவே மாறிவிடுகிறது. மனம் ஒன்றி நின்று தவம் செய்வதைத்தவிர, இங்கே எந்தவித செலவும் இல்லை.
இந்த காணொளி வழியாக, இன்னும் சில உண்மைகளை அறிந்து கொள்க!
நவக்கிரக தவம் செய்வதில் ஏற்படும் நன்மைகள் உண்மையா? எவ்வாறு இத்தவம் உதவுகிறது?!
வாழ்க வளமுடன் ஐயா. சித்தர்கள் என்பவர் யார்? அது ஏன் தமிழக சித்தர்கள் மட்டுமே உயர்வாக பேசப்படுகிறார்கள்? இன்னமும் சித்தர்கள் இருக்கிறார்களா? அவர்களின் துணை நமக்கு எந்த அளவில் பயன்படுகிறது? விளக்குவீர்களா?
இந்த உலகில், பல்லாயிரம் ஆண்டு பரிணாம எழுச்சியில், இயற்கையின் உன்னதமாக, முழுமை வடிவமாக வந்த அமைந்த ஒரு ஜீவ, உயிரினம்தான் மனிதன். மனிதன் திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. யாரும் ஒருநாளில் உருவாக்கிடவும் இல்லை. ஒரு பெரிய மரத்தின் மூலம், சிறிதாக, அணுவாக இரு விதைக்குள் இருந்ததுதானே? அதுபோலவே மனிதனின் மூலமும், அணுவில் இருந்துதான் தொடங்கியது. அந்த அணு ஒருசெல் உயிரியாக மலர்ந்து, ஒர்ரறிவு தாவரமாக மலர்ந்து, ஐந்தறிவு விலங்கினங்களாக உயர்ந்து, அந்த அறிவு வேட்கை நின்றிடாமல், முழுமைபெற துடித்து, பல்வேறு பிறவிகளுக்கு அப்பால் வந்ததே, மனிதப்பிறவியாகும். ஆறாம் அறிவில் முழுமைபெற்று, தன் மூலம் நோக்கி நகர்ந்து நின்றவனே மனிதன்.
இந்த தற்கால, நவீன விஞ்ஞானம் சொல்லும் முன்பாகவே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சித்தர்கள் கண்டறிந்தனர். சும்மா வெறுமனே யூகமாக அவர்கள் சொல்லவில்லை. சித்து என்ற உயிரின் மூலம் எது? என்று தேடி அதை முழுமையாக அறிந்ததனால்தான், சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மனித பிறப்பின் ரகசியமும், நான் யார்? என்ற தேடல் முழுமையும், பொருளுக்கும், உயிருக்கும், இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும், மூலமாகவும் இருந்து, இயக்கிக் கொண்டும் இருக்குமந்த, மெய்ப்பொருளையும் கண்டார்கள்.
தன் ஆரம்ப புள்ளியை, அதில் கண்டு, உண்மை அறிந்து அதுவே மனித பிறப்பின் நோக்கமும், முடிவும், கடமையும் என்று, உலக மக்களுக்கு அறியத்தந்தார்கள். விரும்பியோர்க்கு யோகமாகவும், எளியோருக்கும், பாமரரருக்கும் பக்தியாகவும் தந்தார்கள்.
சித்தர்கள், தங்களை ஒழுக்கம், கடமை, ஈகை வழியாக, உலகோர்க்கும் சேவை செய்வதையே முழுமையாக்கிக் கொண்டார்கள். இன்றும் பலப்பல சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால், நீங்களும் நானும் நினைப்பதைப்போல அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இப்படியான சித்தர்களை தமிழ்நாடு கொண்டது, மிகச்சிறப்பு. தமிழ்நாட்டின் காலநிலையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. சித்தர்களால், நாம் பெருமைமட்டும் அடையவில்லை. வாழ்வின் முழுமையையும் அடைகிறோம்.
இந்த காணொளி வழியாக இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்வோம்.
தமிழக சித்தர்களின் கடவுள் தேடல்! The search for God by the Siddhars of Tamil Nadu! Part 01
பத்தோடு பதினொன்றாக, அரைகுறையாக ஏதோ சொல்லுகிறீர்கள். இதில் வேதாத்திரியம் என்று பெயர்வேறு? உங்களுக்குத் தோன்றுவதை சொல்லி பெரிய ஆளாக நினைக்கிறீர்கள். பதிவுகளில் உண்மை இல்லாமல், வளவள என்று பிதற்றலாக இருக்கிறது. பதிவுகள் இப்படி இருக்க, இதில் அடிக்கடி ஜாதகம் பார்க்கிறேன் என்று காசு வேறு கேட்கிறீர்கள். பதிவுகளை காண மெம்பராகவும் ஆகவேண்டுமா? யோகம் இலவசமாக எல்லோருக்கு போய்சேர வேண்டும் என்று உங்கள் மகரிஷி சொல்லவில்லையா? இதில் முகத்தை வேறு காட்டுகிறீர்கள், சகிக்கவில்லையே. பேசாமல் சும்மா இருக்கலாம்!
வழக்கமாக, ஒரு கேள்விக்கு பதில் தருவதற்கு பதிலாக, கருத்து பதில் தருவது இந்தப்பதிவாகும். மேலே நீங்கள் படித்த கருத்து, ஒருவர் தந்ததல்ல. என்னுடைய வேதாத்திரிய காணொளி பதிவுகளை கண்டுவிட்டு, சில அன்பர்கள் தந்த பின்னூட்டத்தின் தொகுப்பு இது. பல்வேறு காலங்களில் இப்படியான பின்னூட்டங்களும், இதைவிட பலமான பின்னூட்டங்களும் வந்தன. இப்போதும் ஏதோ ஒரு சில பின்னூட்டங்கள் இப்படி வருவதுண்டு. அவைகளை, நான் பொதுவெளிக்கு வரமால் தடுத்து அழித்துவிடுகிறேன். ஆனால் குறிப்பாக எடுத்து வைத்துக் கொள்வேன்.
இத்தகைய நபர்கள், தங்களின் ஈகோ என்ற தன்முனைப்பை, இப்படி பொதுவெளியில் காட்டிக் கொள்கிறார்கள். கூடுதலாக, ஏன் இணைய பிச்சை எடுக்கிறாய்? என்றுகூட கேட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்லுவது, எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றுவது போலாகும். என்னுடைய கைபேசி எண் பொதுவெளியில் தான் இருக்கிறது. அதோடு, கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக, உலக அளவில், இணைவழியில்தான், என் ஓவிய வேலைகள், கட்டண சேவையாக நடந்துகொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில், காசுக்காக, இந்த வேதாத்திரிய சேவை என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் கைபேசி எண் கொடுத்தால், நான் பேசி பதில் தரவும் தயார், ஆனால் அவர்கள் அதை தருவதில்லை.
வேதாத்திரியத்தில், என்னுடைய பதினெட்டு வயதில், இணைந்து தீட்சை பெற்றுக்கொண்டு, இன்றுவரை (2024 வரை) கிட்டதட்ட, முப்பத்தியாறு ஆண்டுகள் அனுபவம் எனக்குண்டு. சும்மா வெறுமனே, வேதாத்திரியா காணொளி சேவை ஆரம்பிக்கவில்லை. அப்படி இருக்குமானால், நான் உங்களோடும், வேதாத்திரியாவோடும் ஏழு ஆண்டுகள் பயணத்தை பெற முடிந்திருக்குமா? ஆம். வேதாத்திரியா ஏழாவது ஆண்டில் பயணிக்கிறது.
வேதாத்திரி மகரிஷியிடம் ஒரு அன்பர் கேட்டார். ‘சுவாமிஜி, நீங்கள் ஆரம்ப காலத்திலே சொன்னதிற்கும், இப்போது சொல்லுவதற்கும் மாற்றமே இல்லையே. அதே கருத்தையே விளக்கிச் சொல்லுவதாகவே அமைகிறதே எப்படி?’
இதற்கு வேதாத்திரி மகரிஷி ‘நான், எல்லாமே முழுமையாக உணர்ந்த பிறகுதான், எழுதினேன், சொன்னேன். அதனால் அதில் உண்மை மட்டும் தான் இருக்கிறது. அதுதான் இன்னமும் தொடர்கிறது. மற்றவர்கள், தங்கள் ஆரம்ப காலத்தில் ஒருவகையிலும், உண்மை உணர்ந்த பிறகு மற்றொருவகையாகவும் சொல்லுவார்கள். ஆனால் நான், உண்மை உணர்ந்து கொள்ளாமல் எதையுமே பகிரவில்லையே’ என்று சொல்லுகிறார்.
இந்த அடிப்படையில்தான். நானும், 1988ம் ஆண்டு தீட்சை பெற்று, 1991ல் ஆசிரியர் பயிற்சி பெற்று, 1993 வரை, கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக சேவையில் இருந்தும், பொதுவெளியில் எதுவும் சொன்னதில்லை. 2018ம் ஆண்டு, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொண்ட பிறகுதான், வேதாத்திரியா எனும் காணொளி தளத்தை ஆரம்பித்து, என் பதிவுகளை தந்தேன். எனக்கு இணையத்தில் கிடைத்த ஏமாற்றம், மற்ற அன்பர்களுக்கு கிடைக்கவேண்டாமே? என்ற நோக்கத்தில்தான், வேதாத்திரிய அன்பர்களுக்கு உதவும் வகையில், பதிவுகளை தந்துகொண்டு இருக்கிறேன்.
வேதாத்திரிய தத்துவ உண்மை மாறாமல், அதன் வழியிலே மட்டும் நின்று, வேறெந்த யோக, வேத, புராண, இதிகாச, யோகி, முனிவர், ஞானி, மகான், சாதனையாளர், தத்துவமேதை இப்படி எந்த கருத்துக்களையும் இணைக்காமல், எடுத்துக்காட்டாமல் பதிவுகளை தருவது வழக்கம். அந்த வகையில்தான். இந்த ஏழு ஆண்டு பயணம் தொடர்கிறது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில்தான், கிட்டதட்ட 38 ஆயிரம் அன்பர்கள், பகிர்வாளர்களாக இருக்கிறார்கள்.
வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்களை தருவதில், இது பத்தோடு பதினொன்றுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. எனக்கு தோன்றுவதை சொல்லாமல், என் அனுபவத்தை, வேதாத்திரியத்தோடு சொல்லுகிறேன். அதுதான் உண்மை. நான் யார்? என்று எனக்குத் தெரியும். நான் எளியவன். எனக்கென்று பிம்மத்தை கட்டிக்கொண்டிருப்பவன் அல்ல. பதிவுகள் பிதற்றல் என்றால், ஏழு ஆண்டு பயணம் இருக்கமுடியுமா? அன்றாடம் வளரமுடியுமா?
கர்ம வினை குறித்த ஜோதிட ஆய்வு என்பது நன்கொடை சேவை. இதில் என்னுடைய பல்லாண்டுகால அனுபவ அறிவு, நேரம், ஆராய்ச்சி, முடிவு, திருத்தம், அதை ஒழுங்கு செய்து, கட்டுரையாக மாற்றுதல் என்று பல்வேறு செலவுகளும், வேலைகளும் இருக்கின்றன. உங்களுக்கு சும்மா தந்தால், எனக்கு கிடைப்பதெல்லாம் சும்மா இல்லையே?! அதற்கு நீங்கள் மாற்றுவழி செய்வீர்களா? விருப்பம் உள்ளோருக்கான அழைப்பு என்றுதான் தலைப்பு தந்திருக்கிறேன். அதை நீங்கள் படிக்கவில்லையா?!
வேதாத்திரிய பதிவுகள், முன்கூட்டியே பார்க்க, உறுப்பினர் சேவை உண்டு, இது யூடுயூப் தரும் சேவைதானே தவிர நான் ஏற்படுத்தவில்லை. என்வழியாக, யூடுயூப் நிறுவனமும் காசு பார்க்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?
யோகம் இலவசமாக எல்லோருக்கும் போய்சேர வேண்டும் என்று உங்கள் மகரிஷி சொல்லவில்லையா? இந்த கருத்தை, நீங்கள் ஆழியார் சென்று, அங்கே உள்ள தலைமை குழுவிடம் சொல்லுங்களேன். நான் ஒரு சாதாரணன். என்னிடம் சொல்லி பிரயோஜனம் இல்லை.
முகத்தை காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணமும் முடிவும். ஆனால், என் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை தீர்மானிக்க முகம் அவசியம் என்பது எனக்குத்தெரியும். உங்களுக்கு சகிக்கவில்லை என்பதற்காக, நான் முகத்தை மாற்றிக்கொள்ளவும் முடியாது. நீங்கள் இனி பார்க்காதீர்கள், என் முகத்தை இணையத்திலும், நேரிலும் கூட. போதுமா?!
இப்படியெல்லாம் பதில் சொல்லி, ஏனெய்யா உன் நேரத்தை வீணாக்குகிறாய்? என்று என் நண்பர் கேட்டார். ஆனால் இந்த பதிலை எல்லாம், அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த தூண்டுதலும், URGEம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. இனி அவர்கள் திருப்தி அடையலாம். இனி பின்னூட்டம் தந்தாலும், அதற்கும் பதில்தர நான் தயார்.
வேதாத்திரிய காணொளி சேவையின் பயணம் குறித்த காணொளி, இதோ.
வேதாத்திரியாவும் நீங்களும் உண்மை தத்துவ விளக்கமும் ஏழாமாண்டு பயணமும் Vethathiriya & Your Realization
ஐயா. எனக்கு யோகம் குறித்த ஆர்வம் உண்டு. எனினும் அதில் நான் இன்னும் இறங்கிடவில்லை. ஏனென்றால், நான் பார்த்தவரையில், இங்கே யோகம் குறித்து பொய்யும் புரட்டும்தான் இருக்கிறது. அதனாலேயே கற்றுக்கொள்ள ஆர்வமும் இல்லை. நல்ல சிறந்த யோகவழி எது என்று சொல்லுவீர்களா? ஒருவேளை அப்படியே நான் கடந்துபோய்விடுவது நல்லதா? எனக்கு என்ன பாதிப்பு வரும்? விளக்கம் தருக.
இந்த கேள்வி கேட்டதற்காக உங்களை பாராட்டுகிறேன். உங்களைப்போலவே பலரும் இங்கே இருக்கிறார்கள். அவர்களின் தாத்தா, பாட்டி, உறவினர் சொல்லக்கேட்டு, பக்தி கடந்த யோகத்தில் ஆர்வம் வருவதுண்டு. அந்த பெரியவர்களே அதை தேடமுடியாமல், கைவிட்டுப்போனதை, உங்களுக்கு கடத்திவிட்டார்கள். நீங்களும் அவர்கள் சொன்ன அதே போன்ற, எதிர்பார்ப்பில், இப்போதும் யோகத்தை தேடுகிறீர்கள். அவர்கள் சொன்ன யோகம் எப்படிப்பட்டதென்று ஓரளவில் என்னால் யூகிக்க முடியும். எனினும் அதை இங்கே விளக்கிட வேண்டியதில்லை.
ஒரு ஆப்பிள் என்ன சுவை தரும் என்பதைக்கொண்டு, ஒரு கூடை ஆப்பிளையும் தீர்மானிக்க முடியாது. அதில் அதிக இனிப்பும் இருக்கலாம், புளிப்பு, கசப்பு சுவை கொண்டதும் இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒரு கூடை ஆப்பிளையும் ருசி பார்த்திடவும் முடியாது. அது காலவிரயம் என்பதோடு, வயிற்றுக்கும் கெடுதல். அதுபோலவே, யோகம் பல்வேறு நிலைகளில், பல்வேறு மகான்கள், ஞானிகள், யோகிகள் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். ஆனால் பாதைகள் வேறு. இதில் எது சிறந்தது என்று நான் கூறவேண்டிய அவசியமும் இல்லை. நான் வேதாத்திரியத்தில் இருப்பதால், அதை கடைபிடிப்பதால், அதுவே சிறந்தது என்றும் சொல்லிவிட மாட்டேன். என்னளவில் அது சிறப்பு அவ்வளவுதான். நீங்கள் எதை தேர்ந்தெடுத்தாலும் அதில் கொஞ்சகாலம், பயணிக்கவும் வேண்டும். பிறகுதான் அது சரியான பாதையா? என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். நானே உங்கள் கையைப்பிடித்து, ‘வேதாத்திரியத்திற்கு வாருங்கள்’ என்று அழைப்பது முறையல்ல.
யோகசாதனை அமைப்புக்கள், வேதாத்திரியத்திற்கு முன்பாக பல இருந்தன, வேதாத்திரியத்திற்கு பின்பாகவும் பல இருக்கின்றன. இதுதான் காலத்தின் நியதி. உங்கள் விருப்பம், தேர்வு, அதில் கிடைக்கும் அனுபவம் ஆகியன மட்டுமே, சிறந்தது எது என்று தீர்மானிக்கும். எனவே என்னிடம் கேட்கவேண்டாம். நான் சொல்லவும் தயாரில்லை.
யோகம் குறித்த விளக்கங்களில் பொய்யும் புரட்டும் தருகிறார்கள் என்றால் அவர்கள் அதில், ஆழ்ந்து போகவில்லை என்பதுதான் குறை. ஏதோ நூல்களில் படித்ததையும், சினிமாவில் பார்த்ததையும், புராண கதைகளை கேட்டும், பிறர் சொல்லக்கேட்டும் இவர்களாகவே, இட்டுக்கட்டும் கதைகள் உண்டு. ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்’ என்ற ரீதியில் புட்டுபுட்டு வைப்பார்கள். இவர்களையும், இவர்கள் கருத்துக்களையும் புறம் தள்ளுவதே நல்லது. இவர்களைப்பார்த்து, உங்களுக்கு சூடு வைத்துக்கொள்ள தேவையில்லை. உண்மை எது என்று தேடுங்கள். ஆர்வத்தை இதனால் தொலைக்காதீர்கள்.
ஏதோ சிறிதளவாவது யோகம் என்பதை அறிந்த நீங்கள், இந்த பிறப்பை வீண் செய்வதில் அர்த்தமில்லை. பிறவியின் நோக்கமும், கடமையும் தீராமல், உங்கள் பிறவி முழுமை அடைவதில்லை. வாழும் காலம் போதுமானது. அதை தேடுதலில் வீணாக்காமல், விருப்பமான ஏதோ ஒரு யோகசாதனையில் இணைந்துகொள்க. கற்றுக்கொண்டு பயன்பெறுக. அது உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், தெரிந்த அளவில் உள்ள அனுபவத்தால், மிகச்சிறந்த இன்னொரு யோக சாதனையை பெற்றுக்கொள்ள தயாராகுங்கள். இதில் எந்த இழப்பும் இல்லை. இழப்பின் வழியாக, மிகச் சிறந்ததை அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அந்தவகையில், வேதாத்திரியாவையும் ஒருகை பார்த்துவிடுங்களேன். சரியா?
கூடுதலாக இந்த காணொளி பதிவு உங்களுக்கு உதவலாம்.
யோகம் குறித்த பதிவுகளை நான் தவிர்ப்பது ஏன்? Why do I avoid the any posts on yoga?
உண்மையிலேயே கிரகங்கள், கோள்கள் நம்மை பாதிக்கிறது என்றால், நாட்டில் எல்லோரும் ஒரே மாதிரிதானே இருக்கவேண்டும். நல்லவனுக்கு ஒருமாதிரியும், கெட்டவனுக்கு ஒருமாதிரியும் தானே நடக்கிறது? இன்னும் சொல்லபோனால், கெட்டவனுக்குத்தான் நல்ல காலமாகவும் இருக்கிறது. இதற்கும் கிரகங்கள் என்ன செய்கிறது? ஒவ்வொரு மனிதனுக்கும் அது எப்படி பாதிப்பை தரும்? வேடிக்கைதான். எனினும் விளக்குவீர்களா?
பொதுவான கேள்வி என்றாலும், விளக்கம் தரவேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்துக் கொள்கிறேன். உங்கள் கேள்வியில், தெளிவான புரிதல் இல்லை. கிரகங்கள் கோள்கள் குறித்த விளக்கமும் இல்லை. வாழ்கின்ற மனிதர்கள் குறித்த விளக்கமும் இல்லை. காலம் குறித்த தெளிவும் இல்லை. எல்லாவற்றிலும் கிடைத்த அரைகுறை அறிவை, அனுபவத்தில் ஒன்றாக்கி, குழப்பமாக இந்த கேள்வி கேட்கிறீர்கள். எனினும் இதற்கான பதில் இருக்கிறது.
முதலில், நீங்களும் நானும் வாழ்கின்ற, இந்த பூமி ஒரு கிரகம் தான் நினைவிருக்கிறதா? இல்லையா? இந்த பூமி, சந்திரனை தன்னோடு இணைத்துக் கொண்டு சுற்றுவதை நீங்கள் அறீவீர்களா? நம்முடைய (?!) பூமி சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக, 9 கோடி மைல் தூரத்தில் அமைந்திருக்கிறது. பூமிக்கு முன்பாக இரண்டு கோள்களும், பூமிக்கு அடுத்தாக மூன்று கோள்களும், ராகு கேது எனும் நிழல் கோள்களும் இருக்கின்றன. யுரேனெஸ், நெப்டியூன், புளூட்டோவும் உண்டு. ஆனால் இவை, ஜாதக அறிவியலில் இல்லை. என்ன ஜாதக அறிவியலா? ஆம்.
ஒரு விதை முளைக்க, மண்ணும், தண்ணீரும் போதும் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை. அதை விதைக்க ஒரு காலம் வேண்டும். அது வளரவும், முழுமை பெறவும், நல்ல விளைச்சலை தந்து, பூ, காய், கனி, விதை என்று வழங்கிடவும் காலம் வேண்டும். காலம் என்பது எதனால் ஏற்படுகிறது? கோள்களின் சுழற்சியால் தானே? நீங்கள் பூமியில் நிலையாக இருப்பதால், எதுவும் சுற்றவில்லை என்று நினைத்துக் கொள்வீர்களோ? பூமி தன்னையும் சுற்றுகிறது, இந்த சூரியனையும் சுற்றுகிறது. நிலவு, பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலே சுற்றிக்கொண்டிருக்கிறது.
வேறு எங்கும் போகவேண்டாம். அமாவாசையிலும், பௌர்ணமியிலும் உங்களுக்குள் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையா? இல்லை என்றுதான் ஆணித்தரமாக சொல்லுவீர்கள் என்று எனக்குத் தெரியும். சரி எது ஏனென்ய்யா கடல்நீர், கரைதாண்டி பொங்குவதும், கரை கடந்து உள்வாங்குவதும் நிகழ்கிறது? நீங்கள் யாராவது ஆள்வைத்து இதை செய்கிறீர்களா? இல்லைதானே? பெருங்கடல் இந்த பாதிப்புக்கு உள்ளாகுமானால், மனிதன் 73% நீரை தனக்குள்ளே வைத்திருக்கிறானே? அவனுக்கு பாதிப்பு ஏற்படாதா? நிச்சயமாக நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் மட்டும் அற்புத பிறவி ஆகிற்றே?!
இப்படியாக, விளக்கிக் கொண்டே போகலாம். நாம் வாழும் இந்த பூமி, பேரண்டத்தைப் பொறுத்தவரை, மிக மிக சிறியது. அதில் வாழும் நாம் எங்கனம்? ஜூம் அவுட் செய்தால், இந்த பால்வெளி மண்டலமே சிறியது. பல கோடி நட்சத்திர மண்டலங்கள், அவை கணக்கில் அடங்கா. இன்னமும் விஞ்ஞானம், சூரியகுடும்பத்தைத் தாண்டி செல்லவே இல்லை. விஞ்ஞானத்திற்கு எட்டாததை எல்லாமே பொய் என்பது உங்கள் வாதம். ஆனால் அதில் உண்மை இருக்கிறது என்பதுதான் மெய்ஞானத்தின் வாதம். எனினும் மெய்ஞானம் கட்டாயப்படுத்துவதில்லை. புரியவில்லை என்றால் விட்டுவிடு என்றுதான் சொல்லுகிறது. இந்த காணொளி, ஏதேனும் வகையில் சில உண்மைகளை விளக்கும் என்று நம்புகிறேன்.
எளியமுறை உடற்பயிற்சியை யார்வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியுமா? அல்லது இதெற்கென்று வயது இருக்கிறதா? உடல் பலவீனமானவர்கள், உடல்நிலை சரி இல்லாதவர்களும் செய்யமுடியுமா? விளக்கம் தருக.
உடற்பயிற்சிகள் என்பது, மனிதனுக்கு ஊக்கமளிக்கும் செயல்தானே தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் உடற்பயிற்சிகளை, தற்கால GYM பயிற்சிகளோடு முடிச்சுபோடக்கூடாது. கனமான பொருட்களை, தூக்குவது, சுழற்றுவது, தாங்குவது. இழுப்பது என்பது, உடலுக்கு வேறுமாதிரியான அழுத்தங்களை உருவாக்குவதாகும். ஆனால், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி என்பது, முற்றிலும் இயல்பான அசைவுகளைக் கொண்டது. மேலும், எந்த அளவுக்கு உடல் தாங்குமோ அதற்கு ஏற்றபடியே, எல்லாவிதமான அசைவுகளை தந்து, உறுத்தலோ, வலியோ இல்லாமல் பயிற்சியாக செய்வதாகும்.
பதிநான்கு வயது நிரம்பிய சிறுவர், சிறுமியர் செய்யமுடியும். அந்த வயதில் இருந்து, எளியமுறை உடற்பயிற்சிகளை செய்துவந்தால், மிகச்சிறப்பான உடல், மன அமைப்பை பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பது உறுதி. இந்த வயதில், உடற்பயிற்சிகளில் ஆர்வம் இருக்காது, என்றாலும், பெற்றோர்கள் அவர்களை ஊக்கப்படுத்தி கற்றுக்கொள்ளச் செய்யவேண்டும்.
பொதுவாகவே, எளியமுறை உடற்பயிற்சி வயது எத்தடையும் இல்லை. யார்வேண்டுமானாலும் கற்றுக் கொண்டு, செய்துவரலாம். ஒருநாளைக்கு ஒரு முறை, அதுவும் காலை, வெறும் வயிற்றில், காலைகடன் முடித்ததும் செய்து முடித்துவிட்டு, குளியல் என்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். மாலையில் எந்த பயிற்சியும் உடலுக்கு தருவது, சோர்வை தரும். ஆனால் தவம் செய்யலாம்.
ஏற்கனவே உடல் நலமின்மை, நோய் தொந்தரவுகள் கொண்டோர் கூட எளியமுறை உடற்பயிற்சி கற்றுக்கொண்டு, பயன்பெறலாம். எனினும் இங்கே ஆசிரியரின் ஆலோசனை தேவைப்படும். மற்ற எந்த பயிற்சிகளையும் விட, எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு. காரணம், வேதாத்திரி மகரிஷி அவர்கள், அடிப்படையில், சிறப்புத்தகுதி வாய்ந்த மருத்துவர். அதனால், இப்பயிற்சிகளை, முறையாக திருத்தி வடிவமைத்தே நமக்கு தந்துள்ளார்.
இந்த எளியமுறை உடற்பயிற்சியில் உள்ள, உடலுக்கான ஓய்வு என்ற பயிற்சியை, எழுந்து நடமாட முடியாத, படுத்த படுக்கையான மனிதரும் செய்யமுடியும் என்பது சிறப்பு. அதன் வழியாக அவர், மன அமைதியும், உடல் அமைதியும் பெறலாம். அந்த நோய் தாக்கங்களில் இருந்து விடுபடவும் வாய்ப்பு உண்டாகலாம்.
புதிதாக எளியமுறை உடற்பயிற்சி கற்க விரும்புவோருக்கு, இந்த காணொளி உதவும்.
எளியமுறை உடற்பயிற்சி கற்பதற்கு முன் நீங்கள் முக்கியம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
வாழ்க வளமுடன் ஐயா, இன்றைய காலத்தில், பக்தி என்பது காலாவதி ஆகிவிட்டதே? இது எங்கே போய் முடியுமோ? என்று கவலையாக இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும் பக்தி இல்லாமலேயே வளர்கிறார்களே? இது சரிதானா? வேதாத்திரியம் என்ன சொல்லுகிறது? விளக்கம் தருக.
இந்த கேள்வி, எந்த காலகட்டத்திலும் உருவாக் கூடிய கேள்விதான். பொதுவாக மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்று அடிக்கடி சொல்லுவார்கள். அதுபோல, இவ்வுலகில் மக்களின் வாழும் முறை, அனுபோகம், அனுபவம் எல்லாமே மாறிக்கொண்டேதான் இருக்கும். நேற்றையபோல இன்று இருப்பதும் இல்லயே! அப்டேட் என்று சொல்லக்கூடிய, இருக்கும் நிலைக்கு தகுதி உயர்த்திக் கொள்ளுதல் அவசியமாக இருக்கிறது.
இந்த மாற்றங்கள் குறித்து நாம் கவலைப்பட ஏதுமில்லை. நாமும் இந்த சமூகத்தில் ஓர் அங்கமே என்றாலும் கூட, தனியாக சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. அதற்குப் பதிலாக, நாம், நம்முடைய குடும்பத்தில் மாற்றத்தை செயல்படுத்திக் கொண்டால் போதுமானது. ஆம், நம்மை எப்படி, நம்முடைய பெற்றோர்கள், வழிப்படுத்தினார்களோ, அதுபோல நாம், நம்முடைய வாரீசுகளை, வழிப்படுத்திட வேண்டும்.
இந்த உலகில் பெரும்பான்யோரும், பெரியோர்களும், பெற்றோர்களும். குழந்தைகளை வழிப்படுத்திட தவறுகின்றனர். தனக்குத் தெரிந்ததை, குழந்தைகளும் தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுகின்றனர். இப்படியான நிலை கூடாது. எந்தெந்த வயதில் எதை அறிந்துகொள்ள வேண்டுமோ. அவ்வப்பொழுது அறிந்துகொண்டால் போதாதா?
பக்தி என்பது உண்மையாகவே காலாவதி ஆகிவிட்டது என்று தோற்றமளிக்கிறது. ஆனால், தன்னாலும், மற்றவர்களாலும் எதுவுமே முடியாது என்ற நிலை வரும்பொழுது, கைகள் தானாக குவிந்து, ‘கடவுளே’ ‘இறைவா’ என்று வணங்குவதை தவிர்க்க முடியாது. இதை நீங்கள் கூட அனுபவத்தில் கண்டிருக்கலாம். ஆனால், நமக்கு உண்மைகளை உதாசீனம் செய்துதானே பழக்கம்?
நாம் ஏதேனும் விளக்கம் சொன்னால், ‘அப்படியானால், கடவுளை, இறைவனை காட்டு’ என்று நம்மிடம் வம்புக்கு வருவார்கள். விஞ்ஞானம் சொல்லுகிற, ஒரு அணுவைக்கூட உன் கண்ணால், பார்க்கமுடியாதே? விஞ்ஞானிகளும், இன்னமும் அணுவை முழுமையாக பிரித்து பார்த்திடவும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? அணுவிலும் அணுவாய், வெட்டவெளியாக இருப்பதை எப்படி காண்பாய்? உண்மையாகவே, அதை நீ பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாய்! ஆனால், அதை நம்பவும் மறுக்கிறாய்! சரிதானே?
இந்த நிலையில்தான், நாம், நம்மளவில், திருத்தங்களை ஏற்படுத்திக்கொள்வது சிறப்பு. இதை வேதாத்திரி மகரிஷி, தன்னுடைய கவிதையிலும் சொல்லுகிறார்.
உருவ வழிபாடு சிறுகுழந்தைகட்கு மட்டும்
உயர்ந்த முறை; மனதுவளம், அடக்கம் இவைபழக
பருவமடைந்தோர்கட்கு பதினெட்டாண்டின் மேல்
பருப் பொருட்கு மூலநிலை விண்ணுணரும் அறிவும்
அருவநிலை அகத்துணரும் அகத்தவம் இப்பார்
அனைத்தும் வாழ்மக்களுக்கும் பொதுத்தேவை உய்ய
கருவழியே நற்பிறப்பும் மும்மலங்களான
கறை மறைந்து மனிதகுலம் மேன்மை வளம் எய்தும்.
குழந்தைகளை நல்வழிபடுத்த, வருங்காலத்தில் சிறப்பாக வாழ, எது நல்லது தரும்? என்பதை புரிந்து கொண்டு சிறக்கவும், முன்னேறவும், பக்தி அவர்களுக்கு அறிமுகப்படுத்தபட வேண்டும். இங்கே உருவ வழிபாடு கொஞ்சகாலத்திற்கு அவசியம். தானாக சிந்திக்கும் ஆற்றலும், தெளிவைத்தேடி பயணிக்கும் விருப்பமும் வந்துவிட்டால், குறைந்தபட்சமாக பதினெட்டு வயது எனலாம். இந்த வயதில் அவர்களை பக்தி கடந்த யோகத்தில், பயணிக்கச் சொல்லி வழிகாட்டலாம். எனவே, சமுகம் குறித்த அக்கறை இருந்தாலும்கூட, நாமும் அந்த சமூகத்தில் அங்கமாக இருப்பதால், நம்மளவில் மாற்றம் செயல்படுத்தினால் போதுமானது ஆகும். அதுவே மனதுக்கு நிறைவாகவும் இருக்கும்.
வாழ்க வளமுடன் ஐயா. தியானத்தில் உட்காரும் பொழுதுதான் முன்னைவிட மனம் அதிகமாக எண்ணங்களை கிளப்பி விடுகிறது. அதை தடுக்கவோ, மாற்றவோ வழியில்லை. வேதாத்திரியத்தில் சொல்லுவது போல அறிந்துகொள்ளவும் முடியவில்லை. ஏன் மனம் இப்படி செயல்படுகிறது? விளக்கம் தருக.
இந்த வாழ்வில், நாம் மனதைக் கொண்டுதான் வாழ்கிறோம். மனதின் வழியாகவே, இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் என்ற உணர்வுகளை பெறுவதற்கு பதிலாக, பலவித உணர்ச்சி போராட்டமான பேராசை, சினம், கவலை, வஞ்சம் இப்படியான அலைக்கழிப்புக்களை பெறுகிறோம். இதற்கிடையில், மனம் என்பது என்ன? என்பது குறித்து நாம் தெரிந்துகொள்ளாமலேயே இருந்துவிடுகிறோம் என்பதும் உண்மை.
மனம் என்பது இயற்கையின் தன்மைகளை தன்னகத்தே கொண்டது. ‘மனதின் அடித்தளமாக இருப்பது இறையே’ என்ற வேதாத்திரி மகரிஷியின் கருத்தையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவரே ‘மனிதன் என்றாலே, இதமான மனதைக் கொண்டவன்’ என்றும் சொல்லுகிறார். ஆனால், நமக்கோ மனம் போராட்டமாக இருக்கிறது.
பொதுவாகவே தினசரி நடவடிக்கைகளில், நாம் உணர்ச்சி வசப்பட்டே செயல்படுகிறோம். ஒரு ஆர்வமாக, எதிர்பார்ப்போடு ஒன்றை செய்கிறோம். பேசுகிறோம், எண்ணுகிறோம். இது எல்லாமே மனமும் கற்றுக்கொள்கிறது. அது பழக்கமாகவும் மாறிவிடுகிறது. பிறகு, நாம் போட்டுக்கொடுத்த பாதையில், நம்முடைய மனம் பயணிக்கிறது. ஆனால், அது நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. அதனால்தான், மனம் வேறு, நாம் வேறு என்று போராடிக்கொண்டு இருக்கிறோம்.
மனதிற்கு ஒரு வேலையை கொடுத்தால் அது, இருக்குமிடம் தெரியாது. ஆனால் சும்மா இருந்தால், அது, நீங்கள் சொல்லுவது போல, முன்னைவிட மனம் அதிகமாக எண்ணங்களை கிளப்பி விடுகிறது. உண்மைதான். ஆனால், நீங்கள், மனதை அறியமுயற்சித்தேன் என்றும் சொல்லுகிறீர்கள். அது நல்ல முயற்சி. எனினும் அதற்கு முன்பாக, ஆராய்ச்சிக்கு முன்பாக, மனம் என்பதை, இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த காணொளி உதவும்.
தியானம் செய்யும்பொழுது மனம் செயல்பாடு என்ன? உண்மை தெரியுமா? Mind status when we meditate.
வாழ்க வளமுடன் ஐயா, இறப்பு என்பதுமட்டும் தான் இன்ப துன்பங்களில் இருந்து விடுதலை தருகிறதா? அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலம், வாழும்பொழுதே விடுதலை பெறமுடியுமா? விளக்கம் தருக.
இந்த கேள்வியின் வழியாக, இரண்டு நிலைகளை அறிந்து கொள்ள முடியும். ஒன்று, வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதான, புரிதல் விடுதலை. இன்னொன்று முழுமையான விடுதலை. வாழும் பொழுதுதான் விடுதலை என்பது, தற்காலிகமானது. ஆனால், அதை புரிந்துகொண்டால், அடுத்து வரக்கூடிய அல்லது நிகழக்கூடிய இன்ப துன்பங்களை, விழிப்புணர்வாக ஏற்றுக் கொள்ள முடியும். அதை இயல்பாக கடந்து போகவும், பழகிவிடலாம். நாம் வருத்தப்படவும் வழியில்லை.
ஆனால், அப்படியில்லாமல், முழுமையான விடுதலை எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்கள், இப்படியான பதில் தருகிறார். ‘இந்த உலகில், தனியாக, நம்மை யாரும் காப்பாற்றிக் கொண்டிருக்கவில்லை. எல்லோரும் பிறந்தோம். வாழ்கிறோம். இறப்போம். இதற்கிடையில் உற்றார், உறவினர், நண்பர்கள் என்ற முறையில் சந்திப்புகள் நிகழ்கின்றன. அவை தினமும், நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை. ஆனால் தொடர்ச்சியாக நினைவில் பதிவாகின்றன. அது தொகுப்பாகவும் இருந்து விடுகிறது. உண்மைதானே?’
‘எப்போது நினைத்தாலும், அந்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அதில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. கூடுதலும் உண்டு, பிரிதலும் உண்டு. இழப்பும் உண்டு, பெறுவதும் உண்டு. எனினும் அவையெல்லாம், நடந்து முடிந்தவைதானே? அது இப்போது இல்லை. இந்த நொடியில் அது இல்லை. நம் வாழ்க்கையில் நடந்துதான். நாம் அனுபவித்ததுதான். என்றாலும், நம்மைவிட்டு கடந்துவிட்டது தானே? புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும், உண்மை இதுதான். உறங்கும் பொழுது, கனவு வருகிறது. ஆனால் அதை கனவு என்று கடந்துவிடுவதில்லை. அதிலும் எல்லா உணர்வும் உண்டு.’
‘நாம் கனவு காணும் போது, அதில் காணும் காட்சிகள், உண்மையாக, நடப்பவையாக தோன்றும். ஆனால் விழித்த பின்பு? மாயை என்று சொல்லும்படி ஒன்றுமே இருக்காது. எந்த ஒரு குறிப்பும், அடையாளமும் இருக்காது. அது போன்றே நம் வாழ்வை, நிரந்தரமானதாக நினைத்து, புலனலவில், அறிவில் கட்டுப்பட்டுச் செயல் புரியும் போதும் பல நிகழ்ச்சிகள் தொடர்பாக, உருவாகின்றன. பிறப்பிற்கு முன்னும், இறப்பிற்கு பின்னும், உயிரின் நிலையை யூகித்து உணர்ந்தால், உலக வாழ்க்கையில், நாம் உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்கள் எல்லாம், என்னவாகும் தெரியுமா?’
‘எல்லாமே, கனவில் நடந்த நிகழ்ச்சிகள் போல, வலுவற்றுப் போகும். எல்லா உயிர்கட்கும், எல்லா வகையான துன்பங்களிலிருந்தும், விடுபட, இயற்கை ஒழுங்கமைப்பால் அமைந்துள்ள, ஒரு நல்வரம் தான், இறப்பு. ஆம். மரணம்தான், சீவ இன இன்ப துன்ப, மாகடலைத் தாண்டும், உயர் நிகழ்ச்சி. என்று கவிதையில் எழுதியுள்ளேன்’ என்று வேதாத்திரி மகரிஷி பதில் தருகிறார்.
இந்த உலகில், ஆறாம் அறிவாக உயர்ந்து வாழும் நாம், அறியாமையில் சிக்கிவிடக்கூடாது. எனவே, அந்நிலை வரும்வரை காத்திருக்காமல், விட்டுவிடாமல், உண்மையை, சிந்தித்தும், யூகித்தும் அறிந்து, விழிப்புணர்வு பெறலாம். நமக்கு நிகழும் நிகழ்ச்சிகளை, ஒவ்வொடு கணமும் ஆராய்ந்து, விளங்கிக் கொண்டால், போதுமானதாகும்.
வாழ்க வளமுடன் ஐயா, இந்த பூவியில் வாழும் நமக்கு எல்லாவற்றின் மீதும் பற்று வந்து, பொருளியல் வாழ்வில் சிக்கித்தவிக்கிறோமே? இதில் ஏதேனும் மாற்றம் காண வழியுண்டா? எப்படி அந்த மாற்றத்தைக் கொண்டுவரலாம்?
நல்ல கேள்வி. ஆனால், இந்த கேள்வியும், அதற்கான ‘வழக்கமான பதிலும்’ பலருக்கு கோபத்தை, சினத்தை உண்டு செய்யும். அதனால், சில விளக்கங்களை மட்டும் இங்கே அறிந்துகொள்ளலாம். அதற்கான பதிலை நீங்களே அறிந்து கொள்ளலாம். நான் தனியாக பதில் சொல்ல தேவையில்லை. முதலில் என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதில் தரவேண்டும்.
உங்கள் வாழ்வு எத்தகையது? கூட்டுக் குடும்பமா? தனிக்குடும்பமா? தனியாளாக இருக்கிறீர்களா? அரசாங்க வேலையா? தனியார் நிறுவன வேலையா? சொந்த தொழிலா? வியாபாரமா? நல்ல படிப்பும், அனுபவமும் உள்ளவரா? வேலைகளோடு நீங்கள் பொருந்தி இருக்கிறீர்களா? போதுமான வருமானம் உள்ளதா? சேமிப்பு செய்கிறீர்களா? கடன் தொல்லை இருக்கிறதா? வசிப்பது கிராமமா? நகரமா? தலை நகரா?
இந்த கேள்விக்கான பதிலும், விளக்கத்தை தர துணையாக இருக்கும். எப்படி தெரியுமா? இந்த உலகில் வாழும் எல்லா மனிதருக்கும், பொருளியல் நிலை என்றவகையில், முழுமை அல்லது நிறைவு இருக்கவேண்டும். அந்த நிலை வராமல், பொருள் பற்று குறையாது. எல்லாம் இருந்தும்கூட, இன்னமும் வேண்டும் என்று வாழ்வது அவரின் அறியாமை.
பசியை அடக்கிட, உணவு உண்கிறோம், பசி தீர்ந்தால்தான், அடுத்து உணவு குறித்த எண்ணம் எழாமல் இருக்கும். அதுபோலவே, பொருளியலில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாமல், அதில் திருப்தியையும், போதும் என்ற மனநிலையை உருவாக்கிட முடியாது. மேலும், இந்த உலகில் வாழும் வரை, பொருள் ஈட்டுதலை, பொருள் சேமிப்பை. பொருளின் பயன்படுத்துதலை உதாசீனம் செய்திடவும் முடியாது. அந்த பொருள் இன்றி, நாம் உலகில் வாழவும் முடியாது.
ஆனால், விழிப்புணர்வு எங்கே வேண்டும் என்றால்? இந்த அளவில் போதும் என்று நிறைவான மனம் கொள்ள வேண்டும். அதுவரை நாம் முயன்று நேர்வழியில், பொருள் ஈட்டியே ஆகவேண்டும். பரம்பரை வழியாக எல்லாம் இருந்தாலும், உங்கள் அளவிலும் அதை நிறைவு செய்து கொள்வதுதான் நல்லது ஆகும்.
இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கடைசி மூச்சுவரை, பொருளை தேடிக்கொண்டே இருந்தால், இருப்பதையும், பெற்றதையும், கிடைத்ததையும் உதாசீனம் செய்கிறோம் என்று அர்த்தமாகிறது. அந்த நிலைமைக்கு நாம் செல்லக்கூடாது. என்வாழ்வில், எனக்கு, இந்த அளவு போதும் என்ற நிலைக்கு, உயரவேண்டும்.
பொதுவாகவே மனிதனுக்கு அறியாமை உண்டு. சிறிய சங்கிலி, யானையின் காலில், சுற்றப்பட்டு ஒரு சிறிய கல்லோடு இணைத்து இருந்தால், அந்த யானை, தன்னால் எங்கும் ஓட முடியாது, இந்த சங்கிலியை தன்னால், கழற்றிட முடியாது. அந்த கல்லை எடுத்து வீச முடியாது என நினைக்குமாம். அதுபோல பொருளிலும் பொருளியல் வாழ்விலும் மனிதன் சிக்கிவிடக்கூடாது. பார்ப்பதெல்லாம் பெரிது, கடினம், என்னால் முடியாது, எனக்கு அவசியமில்லை என்பது, மாற்றத்தை எதிர்நோக்கி வாழாத, வாழ முடியாத தன்மையாகும்.
என் பிறப்பைவிட வாழ்வு பெரிது, வாழ்வை விட பணமும் பொருளும் பெரிது என்று நினைப்பது முற்றிலும் அறியாமை. பிறப்பின் உண்மையும், நோக்கமும் மறந்த செயல்பாடாகும். இப்படி அறியாமையில் இருப்பவர், அதே தன்மையிலேயே வாழ்ந்து, மடிந்தும் போகிறார்கள் என்பது சோகம். இதை, வரும்போது எதுவும் கொண்டுவந்ததில்லை, போகும்பொழுது ஏதும் கொண்டுபோவதுமில்லை என்ற மூத்தோர் மொழிவழக்கில் திருத்துவார்கள். ஆனால் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.
பொன்னும், பணமும், பொருளும் பெரிதென மதிப்போர்க்கு, வாழ்வும் பூமி பெரிதென தோன்றலாம். ஆனால் அந்த பூமி எவ்வளவு சிறிது என்பதை, வெளியே இருந்து பார்த்தால்தான் தெரியும். இதோ இந்த ஒளிப்படம் காணுங்கள். சனி கிரத்தின் ஓரத்தில் இருந்து பூமி எப்படி தெரிகிறது? பூமி உண்மையிலேயே பெரிதா? பூமியே இத்தனை சிறிதாக இருந்தால், மற்றதெல்லாம்?
Source: Hashem Al-Ghaili
இப்படியாக, இந்த சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலம், அதுபோல பலப்பல அண்டங்கள், இவை எல்லாம் அடங்கிய பிரபஞ்சம் என்று இங்கிருந்தவாறே மனதை விரித்தால், பூமி எத்தனை சிறியது என்பது நமக்கு புரியவரும். அப்படியானால்? நாம் மதித்து போற்றி வாழும், பொன்னும், பொருளும், பணமும் எத்தகையது? சிந்தனை செய்துபார்க்கலாம். அதன் வழியாக ஏதேனும் புது சிந்தனை உங்களுக்கு எழுந்தால், என்னிடம் தெரிவியுங்கள்.
தை அமாவாசையும் ஆடி அமாவாசையும் அப்படி என்ன சிறப்பு? எல்லா அமாவாசையும் ஒன்றுதானே? நம் மக்கள் எதற்கெடுத்தாலும் ஏதேனும் அதிசயமாக சொல்லிக்கொள்வது ஏன்? உண்மை விளக்குவீர்களா?
இப்படி அடிக்கடி, வருடத்திற்கு இருமுறை சொன்னாலாவது நீங்கள் ஆன்மீகத்திற்குள் வருவீர்களா? என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். உண்மையாக வழிபாடு யாருக்கு வேண்டும் தெரியுமா? பக்தி, யோகம், இவைகளை பொதுவாக சொல்லும் ஆன்மீகம் ஆகியவற்றில், முற்றிலும் ஈடுபாடு இன்றி, எதிர்புறமாக, பொருளியல் உலகில் ஓடுபவர்களுக்குத்தான் தேவை. இதென்னய்யா? பொருளியல் உலகை விட்டுவிட்டா ஆன்மீகத்திற்கு வரமுடியும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
எல்லா நேரங்களிலும் ஏன் அப்படி இருக்க வேண்டும்? பிறந்தது முதல், வாழ்நாளின் முடிவுக்காலம் வரை பொருள் அவசியமே. அதில் மாற்றுக்கருத்து இல்லை. தேவையை நிறைசெய்யும் வகையில், அன்றாடம் அதற்கென நேரத்தை செலவழித்துவிட்டு, நமக்காக, நம் உடலுக்காக, மனதிற்காக, உயிருக்காக, நம்முடைய முன்னோர்களுக்காக, வரக்கூடிய சந்ததியினருக்காகவும், கொஞ்சம் நேரத்தை ஒதுக்கித் தரலாம் அல்லவா? அதற்கும் வழியில்லை என்றால் எப்படி?
இந்த உலகிற்கு நாம் எதற்கு வந்தோம்? என்ற ஒரு கேள்விக்கான் சிந்தனையே இல்லாமல், ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மறைவோம் என்பது மட்டுமேதான் நம் வாழ்க்கையா? வேறு ஒன்றுமே இல்லையா? என்று என்றைக்காவது, உங்களுக்குள்ளாக கேட்டதுண்டா? நிஜமாகவே அப்படி ஒன்று இருக்கிறதா? ஆம் இருக்கிறது. ஒன்றல்ல மூன்று. அதென்னாய்யா அந்த மூன்று?
உங்கள் பிறவியின் நோக்கமும், பிறவியின் கடமையும் நிறைவேற்றிக் கொள்ளுதல், மெய்ப்பொருள் உண்மையை அறிதல் ஆகிய மூன்று ஆகும். ‘ஏங்க, இதெலாம் ஆகிற வேலையா? இதை தெரிந்து கொள்வது அவசியமா என்ன? எல்லோருமா தெரிஞ்சிகிட்டு போய் சேர்ந்தாங்க? அப்படி தெரிஞ்சிகிட்டு என்னதான்யா ஆகப்போக்குது? இதைச்சொல்லி உங்களுக்கு ஏதேனும் காரியம் ஆகனுமோ? என்கிட்ட அவ்வளவு பணமும் இல்லையே.’ என்று மறுபடி நீங்கள் சொல்லுவீர்கள் தானே?!
எனக்கு என் முன்னோர்கள் சொல்லிச்சென்ற வழிமுறைகளை, நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறேன். அவர்கள் என்னிடம் ஏதும் எதிர்பார்க்கவில்லை, நானும் உங்களிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை, இது ஒரு உண்மையை, வழி வழியாக கடத்துதல். எரியும் அகல் விளக்கு கொண்டு, நெருப்பு அணைந்திடாமல், இன்னொடு அகல்விளக்கை ஒளியேற்றி வைப்பது போலவே ஆகும். ஆனால் நீங்களோ ‘எனக்கு ஒளியும் வேண்டாம். அதுவும் வேண்டாம்’ என்றால், எனக்கொன்றும் குறையில்லை. அது உங்கள் விருப்பமே!
தை அமாவாசை என்பது, புத்துயிர் பெற்ற சூரியனின் நகர்வைக் கொண்டும், அந்த சூரியனோடு கலக்கும் சந்திரனையும் கருத்தில் கொண்டு, வணங்கிக் கொள்வதாகும்.
ஆடி அமாவாசை என்பது, இதுவரை நமக்கு புத்துயிர் தந்த சூரியன், தன்னை புதுப்பிக்க நகர்வதை வாழ்த்துவதும், அதனோடு கலந்து நிற்கும் சந்தினையும் கருத்தில் கொண்டு வணங்கிக் கொள்வதாகும்.
இந்த வழிபாட்டின் உண்மை, அமாவாசை என்பது புனிதம் தரும் நாள், அந்தநாளில், சூரியனும், சந்திரனும் இணைந்த வகையிலான ஆற்றல் பூமிக்கு வருகிறது. அந்த ஆற்றல், நம்முடைய பிறப்பின் நோக்கத்தையும், கடமையையும் எளிமையாக்கும். மெய்ப்பொருள் உண்மையை உணர்வதற்கான வழிகளை உண்டாக்கும். நம் முன்னோர்களுக்கு செய்யும் வணக்கமும், வழிபாடும் நம் வாழ்வை வளமாக்கும்.
பதிவின் நீளம் கருதி சுருக்கமாக தந்திருக்கிறேன். மேலும் உண்மை அறிவதென்றால், காத்திருங்கள். அடுத்த பதிவுலும் தொடரலாம்.
ஐயா, கர்மா என்பதே பொய், ஜாதகம், ஜோதிடம் என்பதும் பொய். அப்படி இருக்கையில், ஜாதகம் வழியாக கர்மாவை கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்புவது சரியா? எதற்கு இந்த ஏமாற்று வேலை?
நீங்கள் யாராக இருந்தாலும் சரிதான். என்னை ஆழம்பார்ப்பது மட்டுமில்லாமல், கர்மாவையும், கிரங்களையும், இயற்கையையும், மனித பிறப்பின் ரகசியத்தையும் ஆழம்பார்க்க நினைக்கிறீர்கள். நல்லதுதான், உங்கள் கேள்வியை வரவேற்கிறேன். அதில் உங்களுக்கு இருக்கிற அறியாமையை விலக்கிட, உண் மை விளக்கம் தர முயற்சிக்கிறேன். ஆம், ஒன்றை குறை சொல்லுவது என்றால், அதில் இருக்கிற உண்மையும் தெரியவேண்டும், பொய்யும் தெரியவேண்டும் அல்லவா? ஆனால் உங்களுக்கு அதில் இருக்கிற பொய்யை மட்டுமே அறிந்திருக்கிறீர்கள்.
நீங்கள் பிறந்து வாழும் இந்த பூமியாவது ஒரு கிரகம் என்பதை, அறிவீர்களா? இல்லையா? ஒவ்வொரு நாளும் இந்த பூமி, தன்னைச் சுற்றிக்கொண்டே, சூரியனை சுற்றுகிறது என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள் தானே? இரவும் பகலும், பருவகாலங்களும் ஆண்டுமாறாமல், வந்துகொண்டே இருப்பதை புரிந்து கொண்டீர்களா? இன்றைய மார்கழி, தை அல்லது டிசம்பர், ஜனவரி மாதங்களில் சூரியஒளி குறைந்து, குளிர்காலம் நிறைந்திருப்பது தெரியும் தானே? அதுபோலவே சித்திரை, வைகாசி அல்லது ஏப்ரல், மே மாதங்களில் சூரியஒளி அதிகரித்து வெப்பம் அதிகமாவதும் தெரியும் தானே? இவற்றிற்கு காரணம் சூரியனிடம் இருந்து வரும் வெப்ப அலைகள் தானே? இல்லை என்று மறுப்பீர்களா?
ஒவ்வொருநாளும் குளிர் வெப்பம் இருந்தாலும், சாராசரியாக ஒரு குளுமையை, பொருத்தமான வெப்பத்தை தரும் சந்திரன் என்ற நிலாவை நீங்கள் அறிவீர்கள் தானே? அது ஒரு நாள் ஒளிதராமல், தன்னில் இருளைக் கொண்டிருந்தாலும், இந்த பூமிக்கு தகுந்த வெப்ப நிலையை தந்து, நம்மையும் மற்ற உயிர்களையும் காக்கும் அலைகள் எங்கிருந்து வருகின்ற என்பதை நீங்கள் தெரிந்துகொண்டு இருக்கிறீர்களா?
இதையெல்லாம் ஏன் நீங்கள் ஏற்கவேண்டும்? இதையும் மறுத்து ஒதுக்கிட வேண்டியதுதானே? ஜோதிடம் என்பது நிஜம். அதை விவரித்து சொல்லுவதில்தான் மாற்றுக்கருத்தும், குழப்பமும், பொய்யும் கலந்திருக்கின்றன எனலாம். எப்போதுமே, எதிராளிடமும், அன்பர்களிடமும், மாணவர்களிடமும் ‘புரிகிறதா?’ என்று நான் கேட்பதே இல்லை. எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ளும் அறிவு, நிச்சயமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அதனால், அதை புரிகிறதா? என்று நான் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. அது கேட்பவரை கேவலப்படுத்தும் கேள்வி என்பதை நான் அறிவேன்.
அடுத்து கர்மா என்பதற்கு வரலாமா? ஒரு செயலுக்கு, ஆற்றலுக்கு எதிர்விளைவு உண்டு என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? ஆமாம். உங்களுக்கு பிடித்த ‘அறிவியல்’ விஞ்ஞானி நியூட்டன் சொல்லி இருக்கிறார். ஆனால் நீ ஒரு செயலை செய்தால், அதற்கு எதிர்விளைவாக, உனக்குள் கர்மா என்ற வினையாக பதிவாகிறது என்று முன்னோர்கள் சொன்னால் அது ‘பொய்’ ஆகிவிடுகிறது அல்லவா?
நல்லது செய்தால் ஏதும் குறையில்லை, ஆனால் தனக்கும், பிறருக்கும், இயற்கைக்கும் தீங்கிழைத்தால், அது கர்மா என்ற வினைப்பதிவாக, பாவப்பதிவாக, நமக்குள் பதிவாகிறது. அதை திருத்தும்வரை அது, நம்முடைய செயல்களில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை. இத்தகைய தொகுப்பு, பரம்பரை பரம்பரையாக, கருவழியாகவே நமக்கு தொடர்ந்து வருகிறது. அந்த உண்மையை கண்டு அறிவதுதான் இந்த ‘ஜோதிட ஆய்வு’ ஆகும்.
ஒரு மனிதனின் பிறப்பில், இந்த கர்மா என்ற வினை முக்கியத்துவம் பெறுகிறது. நீங்கள் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அது இருக்கும். உங்களிடமிருந்து வெளிப்படும். அது உங்கள் உடல், மனம், உயிரை, பாதிக்கும். உங்களைச் சார்ந்தோர் வழியாக எதிரொலிக்கும். இந்த விளக்கங்களை மேலும் அறிய, இந்த காணொளி பதிவை காணலாம்.
உங்கள் ஜாதகம் அதன் கிரக நிலைகள் உங்களுடைய பாவப்பதிவு கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறதா?
என்னுடைய மனம் ஏன் என்னை அடிக்கடி குழப்புகிறது. என்ன செய்தாலும் மனம் அடங்க மறுக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டு, வழக்கமான செயலை செய்து கொள்ளலாமா? மனதை பிரித்து வாழ முடியுமா? மனம் என்பதை ஏன் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை?
மனமும் மனிதனும் இணைபிரியாத கூட்டணி ஆகும். எந்த வகையிலும் பிரிக்கமுடியாது. விலகி நிற்கவும் முடியாது. ஏதோ ஒரு சில நொடி மனம் இல்லாதது போலவும், பிரிந்து நிற்பது போலவும் தோன்றலாம். ஆனால் அது மாயை. மனதை விட்டு விலகி நின்று வாழ முயற்சிப்பது என்ற செயல் கேலியானது. மனம் இன்றி மனிதனே இல்லை என்ற நிலையில், இது எப்படி நிகழும்? விலகினாலும் அது உங்களோடுதான் இருக்கும். மனம் இல்லை என்றால், அவன் ஒரு ஜடப்பொருளாகி விடுவான். அதாவது உயிரற்ற தன்மைக்கு போய்விடுவான் என்பதுதான் உண்மை.
இங்கே, நான் மனதை வென்றுவிட்டேன். மனதை தள்ளி வைத்துவிட்டேன், என் வழக்கமான வேலைகளை உற்சாகமாக கவனிக்கிறேன். எனக்கு எந்த தடையும் இல்லை என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதற்கென்று பயிற்சிகளும்கூட கிடைக்கிறது. நல்லதுதான். அப்படியான மாற்றம் பெற்றவர்களை நான் வாழ்த்துகிறேன். ஆனால், அந்த நிலையில் அவர்கள், எவ்வளவு காலம் நீடித்து இருக்கிறார்கள்? வாழ்நாள் முழுவதும் அதே நிலைமையில் தொடர்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் இல்லை. அப்படி மனதை தள்ளி வைத்துவிட்டு, என்னதான் செய்கிறார்கள்? என்றும் தெரியவில்லை. உண்மையாக இது மிகப்பெரிய ஏமாற்றுவித்தை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. எனினும், ஏதேனும் ஒருவகையில் மனம் குறித்த விளக்கம், உங்களுக்கு கிடைத்தால் சரிதான். நல்லதும் கெட்டதும் அனுபவபட்டால்தானே தெரியும்? அதனால் நான் வரவேற்கிறேன்.
மனதை புரிந்துகொண்டு, அறிந்துகொண்டு, அதன் இயக்கத்தோடு கலந்து, அதன் உண்மையை, அந்த மனதிற்கே புரியவைத்துவிட்டால் மட்டுமே, அது தானாக தன்னை முழுமை செய்துகொள்ளும். அப்போது அது உங்களோடு கைகோர்க்கும். இதற்கு தியானம் என்ற தவம், அகத்தாய்வு எனும் தற்சோதனை மிக முக்கியமாகும்.
மேலும் மனம் குறித்த உண்மைகள் அறிய, இந்த காணொளி உதவிடும்.
மனம் என்பது உங்களுக்கு இத்தனை அவசியமா? உண்மை விளக்கம் - Importance of the Mind
வாழ்க வளமுடன் ஐயா. என் உடலை நல்ல வகையில், உடற்பயிற்சி செய்து காத்து வந்தாலும் கூட ஏதேனும் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? சில மருந்துகளும் தீர்வு தரவில்லையே? விளக்கம் தருக.
நீங்கள் உடற்பயிற்சி என்று மட்டும் சொல்லி இருக்கிறீர்கள். எனினும், என்னிடம் கேள்வியாக கேட்ட காரணத்தால், அது வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியாகவே இருக்கும் என்று நம்புகிறேன். இதற்கு விளக்கம் தரும் முன்பாக, நான் சில கேள்விகளை உங்களிடம் கேட்க வேண்டுமே? சரியா? அந்த கேள்விகள் இதுதான்.
உடற்பயிற்சி என்றைக்கு இருந்து தொடங்கினீர்கள்? என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.
இந்த வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பாக, என்ன நிலைமையில் உங்கள் உடல் இருந்தது?
இதற்கு முன்பாக ஏதேனும், உடல் பிரச்சனைக்காக மருந்து எடுத்துக்கொண்டீர்களா? இல்லையா?
தேவையான மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டீர்களா?
நீங்களாகவே ஏதேனும் நண்பரின் ஆலோசனை தொடர்கிறீர்களா?
வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை தொடர்ந்து செய்துவருகிறீர்களா?
இந்த கேள்விகளுக்கு நீங்களே பதிலை, தனியே எழுதிக் கொள்ளுங்கள். இப்போது இதற்கான பதிலை நானே யூகித்து அதற்கான விளக்கமும் தந்துவிடுகிறேன்.
வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் பொதுவாக, நல்ல நிலைமையை நமக்கு உணர்த்தவும், அதை அறியவும், குறைந்தது ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருக்கவேண்டும். ஒருநாளில், ஒருவாரத்தில் முன்னேற்றம் என்பதெல்லாம் தவறான கருத்தாகும்.
ஏற்கனவே உடல் பாதிப்பு, உடலுறுப்பு பாதிப்பு இருந்தால், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்த உடனே சரியாகிவிடும் என்று யாருமே சொன்னதில்லை. அப்படி நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதுவும் தவறான கருத்தாகும்.
உங்கள் உடலின் பிரச்சனை கருதி, மருத்துவரின் ஆலோசனையில், மருந்துகள் எடுத்துக்கொள்வதுதான் சிறப்பு. யாரோ சொன்னார்கள், உயிருக்கு உயிராக பழகும் நண்பர் சொன்னார் என்பதெல்லாம் சரிப்பட்டு வராது. அது உங்களை மேலும் சிக்கலில் சிக்கவைக்கும். உடல் மேலும் பாதிப்படையலாம். அதனால் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனை ஒன்றே மிகச்சிறந்த வழியாகும்.
வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை, தினமும் அதிகாலை 4:30 மணி முதல் 7:30 மணிக்கு முடிக்கலாம். அதிகபட்சமாக காலை 11:00 மணி என்பதுவரை சரிதான். ஆனால், வெறும் வயிற்றில் என்பதும் முக்கியமானது. நொறுக்குத்தீனியும், Tea, Coffee என்று நிரப்பிய வயிறுடன் செய்வது, உடற்பயிற்சி ஆகாது. அதுப்போலவே மாலையில் உடற்பயிற்சி என்பது அவசியமில்லை. காலையில் ஒரு நேரத்தில், ஒருநாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானதுதான். ஒருநாள் விட்டு ஒருநாள், வாரத்தில் ஒருநாள், கிடைக்கும் நேரத்தில் ஏதோ ஒருநாள் என்று வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்துவந்தால், அதன் பலனை நாம் எதிர்நோக்கிடவும் வழியில்லை.
அடிப்படையில் உங்கள் உடல்போல இன்னொருவருக்கு இருப்பது இல்லை. ஓவ்வொருவருக்கும் தனித்தனி தன்மை இருக்கிறது. பொதுவான உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஆனால், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி முற்றிலுமாக, எல்லா வயதினருக்கும், எல்லா அன்பர்களுக்கும் பொருத்தமானது. மேலும் 14 வயது சிறுவர் சிறுமியும் செய்துவரலாம். முதுமையிலும் செய்ய முடிந்தவர்கள் செய்யலாம், எல்லோருக்குமான மாற்றம் பொதுவானதே ஆகும். அத்தகைய சிறப்பு வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில் உண்டு.
எனவே நீங்கள், உங்கள் ஆசிரியரை சந்தித்து, உங்கள் நிலைமையை சொல்லி நேரடியாக ஆலோசனை பெறலாம். வாய்ப்பிருந்தால் என்னையும் நீங்கள் சந்திக்கலாம். உங்களுக்காக, ஒரு காணொளி பதிவை தருகிறேன், மேலும் பல விளக்கங்களை அறிந்து கொள்க.
உடலில் நோய் உருவாக முக்கிய காரணம் என்ன? உண்மை விளக்கம் - Main cause of disease in the body?
மனிதனுடைய வாழ்க்கைப் பிரச்சனையை அலசி ஆராய்ந்து தீர்ப்பதற்கு முயற்சிக்காமல், சும்மா சங்கல்பம் செய்தால் எப்படி தீரும்? கொஞ்சம் அறிவோடு யோசிக்கவேண்டும் அல்லவா? கதைவிடாதீங்க! என்ற இந்த பின்னூட்டத்திற்கு விளக்கம் காணலாம்.
பொதுவாக எல்லாவற்றையும் அறிவுக்கண்ணோட்டத்தில் பார்க்கிறேன் என்று இருப்பவர்கள்தான் இப்படியான கருத்தை, பொதுவெளியில் சொல்லுவார்கள். அதாவது ‘உன்னைவிட நான் சிந்திக்கிறேன். அதுவும் என் மூளையை கசக்கி யோசிக்கிறேன், அதுவும் சயின்ஸ் என்ற அறிவியல் (?!) துணையோடு செயல்படுகிறேன்’ என்று தனக்குள்ளும், மற்றவர்களிடமும் சொல்லிக் கொள்வார்கள். இருக்கட்டும் இது மிகச்சிறந்த செயல்பாடுதான். வரவேற்கலாம்.
ஆனால், இவர்கள் அடிப்படையை விட்டுவிட்டு, வேறெதோ பின்னால் செல்கிறார்கள் என்று சொல்லலாம். கிராமத்து சொல்வடை என்ற பழமொழிகளில் ஒன்றான ‘தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற’ ஆட்கள்தான் இவர்கள்.
சங்கல்பம் என்பது, ஒரு ஆரம்ப புள்ளியாகவும் இருக்கலாம். ஒரு செயல், நடவடிக்கை, பொதுவான நிலை என்ற வகையில், சங்கல்பம் செய்து ஆரம்பிக்கலாம். ஏதேனும் இடைப்பட்ட சிக்கலில், பிரச்சனையில், அதன் தீர்வுக்காக சொல்லி வரலாம். பிரச்சனையின் தாக்கம், பொருந்தா விளைவு வந்தாலும் கூட, அந்த இடத்திலும், சங்கல்பத்தை சொல்லி தீர்வுக்கு வழி தேடலாம். இப்படியாக, சங்கல்பம் என்பது எல்லா வகையிலும், எல்லா நிலைகளிலும் சொல்லி வரலாம் என்பதுதான் உண்மை. சங்கல்பம் இயற்கையோடு மனதை ஒன்றிணைக்கும் ஓர் பயிற்சி. இயற்கையின் ஆற்றலோடு நாம், நம்மை இணைத்துக்கொள்ளும் ஓர் முயற்சி. இது உண்மைதானா? என்றால். அதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். இனி இங்கே நாம் எழுத்தால் விளக்கிச் சொல்வதை விட, இந்த கருத்தில் நாம் ஏற்கனவே, @Vethathiriya காணொளியாக வழங்கி உள்ளேன். இதோ இந்த இணைப்பு வழியாக காணலாம். உண்மை விளக்கத்தை காணலாம்.
என்னுடைய பிரச்சனையை தீர்க்க தவம், சங்கல்பம் உதவுமா? Will Meditation Sankalp help to fix My problems?
உடற்பயிற்சி செய்வதை இவ்வளவு பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. இது பொதுவான விசயம் தானே? ஆர்வமிருந்தால் செய்து கொள்ளட்டும். அதை ஏன் அடிக்கடி சொல்லி மக்களை தூண்டவேண்டும்? அப்படி என்ன அவசியம்? அதில் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? கேள்வி தவறென்றால் மன்னிக்கவும்.
ஒரு கேள்வி எப்போதுமே தவறாக இருக்கமுடியாது. அந்த கேள்விக்கான பதில்தான் தவறாக இருக்கும் என்பது பொதுவானது. எனவே நிச்சயமாக இந்த கேள்வியை எடுத்துக்கொண்டு, அதற்கான பதிலை தருகிறேன்.
நீங்கள் மனவளக்கலை அன்பராகவும் இருக்கலாம், பொதுவான அன்பராகவும் இருக்கலாம். அது பிரச்சனையில்லை. ஆனால் உடற்பயிற்சியால் என்ன நிகழ்கிறது? என்பதை மேலோட்டமான அறிவாக மட்டும் கொண்டிருக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. முக்கியமாக, உடற்பயிற்சி என்பது, ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. அதிலும், இந்த உலகில் நன்றாக வாழ நினைக்கும் அனைவருக்குமே தேவையும் அவசியமும் ஆகும். உண்மையாக, உடற்பயிற்சி என்பது, ஏதோ ஒருவர் மற்றவருக்காக செய்யும் பயிற்சி அல்ல.
தன்னுடைய உடலுக்கு, உடலுறுப்புகளுக்கு ஊக்கம் தந்திடும் ஒரு செயல், 24 மணி நேரத்தில் சில நிமிடங்களை, உடற்பயிற்சியில் செலவழிக்கலாம். அதில் ஒரு இழப்பும் இல்லை. அதிகாலை உடற்பயிற்சி என்றால், அன்றைய நாள் முழுவதுக்குமான சக்தியாற்றல் கிடைத்துவிடுகிறது. உற்சாகமாக இரவு வரை, இயல்பாகவும் இருக்க முடிகிறது. இரவில் நல்ல தூக்கமும், அதுபோலவே அதிகாலை விழிப்பும் வந்துவிடுகிறது. இது உடற்பயிற்சி செய்துவருகின்ற ஒவ்வொரு அன்பரின் அனுபவமே ஆகும்.
மனித வாழ்வில், அவனுடைய ஆயுட்காலம் தனியாக யாருமே கணித்திட முடியாது. வாழும்வரை, இருக்கும்வரை, இயற்கைக்கு முரண்படாமல் வாழவேண்டும் அல்லவா? முரண் எங்கே எழுகிறது? இந்த இயற்கை அமைப்பை மீறிடும் பொழுது வருகிறது.
உங்களை விட, உங்கள் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும், இயற்கையோடு இணைந்து செயல்படும் தன்மையும், அறிவும் உண்டு. ஆனால், நீங்கள்தான் உங்கள் விருப்பத்தின் வழியால், ஆர்வத்திலும், செயல்பாட்டிலும் அந்த ஒழுங்கமைப்பை கெடுத்துவிடுகிறீர்கள். இதனால் உங்கள் உடலின், உடல் உறுப்புக்களின் கட்டமைப்பு குலைந்து விடுகிறது. ஒரு நாளின் உணவு முறை, உடல் இயக்கம், தூக்கம் எல்லாம் மாற்றிவிடுகிறீர்கள். இதனால் உங்கள் உள் கட்டமைப்பு சிதறுகிறது. உடலுக்கும் மனதிற்கும் உள்ள ஒத்துழைப்பும் தடுமாறுகிறது. இப்படியான நிலை வந்துவிட்டால், மனிதனின் வாழ்நாள் குறுகிவிடும். அதனால், உங்கள் பிறப்பின் நோக்கம், கடமை அறியமுடியாது என்பதுதான், தன்னையறிந்த சித்தர்கள், யோகியர்கள், மகான்கள் ஆகியோரின் வார்த்தைகளாகும். அதனால்தான் உடற்பயிற்சியை, முதல் பாடமாக வைத்தார்கள்.
இப்பொழுது உங்களுக்கு உண்மை தெரியவரும் என்று நினைக்கிறேன். இதனோடு, இந்த காணொளியும் நல்ல விளக்கத்தை தரும். இதோ அதன் இணைப்பு...
எளியமுறை உடற்பயிற்சி வழியே நிறைவேறும் பிறப்பின் நோக்கம் என்ன? உண்மை ரகசியம் - Purpose Truth Secret
வாழ்க வளமுடன் ஐயா, மனதை அப்படியே விட்டுவிடுங்கள். அது அகத்தில் எப்படி இருக்கிறதோ இருக்கட்டும் என்கிறார்கள். அப்படியென்றால் மனம் இல்லாமல் எப்படி இருக்கமுடியும்? விளக்குக.
வேறு எங்கே போகவேண்டிய கேள்வி என்று நினைக்கிறேன். ஆம். இது குறித்து, மற்றொரு யோகம் அல்லாத, மனம் விடுதலை குறித்து பேசும் அன்பர்களின் காணொளி சில கண்டேன். குறிப்பாக அது யார்? என்று அடையாளப்படுத்துவது வேண்டியதில்லை. எனினும் சில விளக்கங்களை காண்போம்.
பொதுவாகவே, மனம் ஒரு குரங்கு. அது இயல்பில் அடங்காது. உன்னை சும்மா இருக்கவிடாது. கண் போன போக்கில், கால் போகமுடியுமா? அது போல மனம் போன போக்கில், மனிதன் போகமுடியுமா? என்று பாடல்களும், கருத்துகளும் இருக்கின்றன. அவை விவரித்தால், இந்த கட்டுரையின் நீளமும் அதிகமாகிவிடும். மனம் இயல்பில் ஆற்றல் உடையது என்பதை மறுப்பதற்கில்லை. இயற்கையின் ரகசியங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது என்பதும் உண்மை.
இன்னும் ஒருபடி மேலாக, ‘மனதின் அடித்தளமே நிலைபொருள்’ என்ற வேதாத்திரி மகரிஷியின் கருத்தை நினைவுகொள்க. அப்படியான மனதை, புறம்தள்ளி பழகுவதும், வாழ்வதும் சரியாகுமா? உங்கள் கேள்வியின்படி மனதை அகம், புறம் என்ற இரண்டாக பிரித்துக்கொண்டாலும், புறமனதை கவனி, அக மனதை விட்டுவிடு என்பதாக சொல்லப்படுகிறது.
மனமே மனிதனாகவும், மனிதனே மனமாகவும் இருக்கிறான் என்பது சித்தர்களின் கருத்தாகும். அதுவே வேதாத்திரியத்திலும் உள்ளது. எனவே புதிதாக எந்த திணிப்பும் இங்கே இல்லை. மேலும் மனதின் உயர்வுதான் மனிதனின் உயர்வு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில், விழிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், அந்த பழக்கத்திற்காகவும் ‘அக மனதை புறந்தள்ளுங்கள்’ என்பது சரியாக இருக்காது. இது விளக்கமே தவிர, அறிவுரை அல்ல. வேதாத்திரியத்தில் சொல்லப்பட்டது போல வேறு எங்குமே, ‘மனம்’ குறித்து விளக்கம் தரப்பட்டது இல்லை என்பது என்னுடைய கருத்து. அந்த அளவிற்கு மிக தெளிவாக, உண்மையாக, வேதாத்திரி மகரிஷி தன் விளக்கங்களை தந்திருக்கிறார்.
மேலும் எண்ணமோ, மனமோ, அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும். மனம் தன் உணர்வுகளை எண்ணமாகவே பிரதி பலிக்கிறது. அவை எல்லாம் எது? என்று கேட்டால். ‘எல்லாம் நாம் போட்டு வைத்தவைதான்’ என்றே விளக்கம் அளிக்கிறார், வேதாத்திரி மகரிஷி.
மனதை பிரித்து, மனதை தவிர்த்து, மனதை ஒதுக்கிவைத்து, மனதை சும்மா விட்டுவிட்டு ஆகப்போவது ஒன்றுமே இல்லை. மனம் என்பது என்ன? என்று புரிந்து கொள்ளாதவர்களின் செயல்பாடே ஆகும். எனவே மனதை அப்படியே விட்டுவிடுங்கள் என்பது ஏற்பில்லாதது. அதை உங்கள் மனமே முதலில் ஏற்றுக்கொள்ளாது.
இந்த விளக்கம் குறித்தான காணொளி, மேலும் உங்களுக்கு புரிதலை கொடுக்கும் என்று நம்பலாம்.
மனம் என்பது என்ன? மனதை ஒதுக்கி வைத்து வாழமுடியுமா? What is the mind? Is it possible to live apart?
வாழ்க வளமுடன் ஐயா, நம் வாழ்வில் கலந்திருக்கும் சடங்குகளுக்கு அர்த்தம் இருக்கிறதா? அதை செய்யத்தான் வேண்டுமா? அதை விலக்கிவிடலாமா? கூடாதா? விளக்கம் தருக.
பொதுவாகவே, நம்முடைய இப்போதைய வாழ்வில், நம் முன்னோர்களின் சடங்குகள் காலாவதி ஆகிக் கொண்டு இருக்கின்றன என்பதுதான் உண்மை. அனேகமாக, நம் தாத்தா பாட்டி, அப்பா அம்மா செய்ததைக் கூட செய்வதில்லை அல்லவா? காரணம் அதில், அந்த சடங்குகளில், இக்கால சந்ததியினர் உண்மையையை தெரிந்து கொண்டுவிட்டார்கள் என்பதல்ல. அவர்களுக்கு செய்வதற்கு விருப்பம் இல்லை. அது ஏன் செய்ய வேண்டும் அல்லது விலக்க வேண்டும் அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி செய்வதும் இல்லை. எனக்கு அதில் ஆர்வமில்லை, நேரம் இல்லை என்று விட்டுவிடுவார்கள்.
இதனால் அவர்கள் இழப்பது நிறைய நன்மைகளையும், உண்மைகளையும், விளக்கங்களையும் சேர்த்துத்தான் என்பது தெளிவு. எப்போதுமே மனிதனின் அறிவு, ‘ஏன்?’ என்று ஆராயும் பொழுதான் வளர்கிறது, தன்னை மேம்படுத்திக் கொள்கிறது. அது இல்லாமல், விட்டுவிடுதலும், விலகுப்போவதும் குறையாகவே நின்றுவிடும். அதுதான் இங்கே, இப்போது நடக்கிறது, நம்முடைய வாழ்வில். அதை நீங்களும் கண்டிருப்பீர்கள்.
ஆனாலும், நாம் செய்துவருகின்ற சில சடங்குகளில், வழிமுறைகளில் உண்மை இருக்கிறது. அது எது எது என்று ஆராய்ந்து பார்த்துக்கொண்டு ஏற்பதும் நல்லதுதானே? குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும், இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். மனவளக்கலை என்பதே, மானிட உலகுக்கு ‘புதிய பாதை’ என்பது இன்னமும் பலருக்கு தெரியவில்லை. எனினும் காலம் மாறிவருகிறது. மக்களிடமும் சென்று சேர்ந்திருக்கிறது. வேதாத்திரி மகரிஷியின் உண்மை தத்துவங்கள் உலகம் முழுவதும் உள்ள மனிதர் மனதிற்குள்ளாக பரவிக்கொண்டு இருக்கிறது.
நம் வாழ்வில் நாம் பற்றிக் கொண்டிருக்கிற, சில சடங்குகள் குறித்து வேதாத்திரி மகரிஷி அவர்கள், உண்மை விளக்கம் தந்திருக்கிறார். அதை நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே @Vethathiriya வில் பதிந்திருக்கிறோம். இதோ அந்த காணொளி வழியாக, அவரே சொல்லும் திருத்தங்களை கவனிப்போம்.